கோயம்புத்தூர் மாநகராட்சி, வ.உ.சி மைதானத்தில் இன்று (05.03.2023) தேசிய அளவிலான மகளிர் சுய உதவிக்குழுக்கள் பொருட்களின் சாரஸ் கண்காட்சியினை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி, "மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வகையிலும், அவர்களின் தயாரிப்புப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், மாநில / மாவட்ட வட்டார அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களின் விற்பனைக் கண்காட்சிகளை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தொடர்ந்து நடத்தி வருகிறது.
ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறையானது கிராமப்புற கைவினைக் கலைஞர்கள் தங்களின் தயாரிப்புப் பொருட்களை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் ஏதுவாக பல்வேறு மாநில அரசுகளுடன் இணைந்து நடத்தி வரும் தேசிய அளவிலான சாரஸ் கண்காட்சி கோயம்புத்தூர் மாவட்டம், அவினாசி சாலை, வ.உ.சி மைதானத்தில் இன்று 05.03.2023 முதல் 12.03.2023 வரை தினமும் காலை 10.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறவுள்ளது. மேலும், இக்கண்காட்சியில் தினந்தோறும் மாலையில் பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.
இக்கண்காட்சியில் 80அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆந்திரா , கர்நாடகா, கேரளா, தெலுங்கனா, கோவா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 27 மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்களின் விற்பனை பொருட்களை சந்தைப்படுத்தி உள்ளனர்.
தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் இருந்தும் மகளிர் சுய உதவிக்குழுக்களும் விற்பனை நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ள கைவினைப்பொருட்கள், கைத்தறி புடவைகள், சணல், வாழைநார் மற்றும் துணிப்பைகள், மசாலா பொருட்கள், இயற்கை உணவு பொருட்கள், பனைவெல்லம், திண்பண்டங்கள், எண்ணெய் வகைகள், கால்மிதியடிகள், ஐம்பொன் மற்றும் அலங்கார நகைகள், மூலிகை பொருட்கள், பூஜை பொருட்கள், இயற்கை வலி நிவாரணிகள், மென்பொம்மைகள், மற்றும் கிருமிநாசினிகள் போன்ற பல்வேறு மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் பார்வைக்காகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டுள்ளன.
இக்கண்காட்சியில் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 13 மகளிர் சுய உதவிக்குழுக்கள் கலந்து கொண்டு, தங்கள் பொருட்களை விற்பனைக்கு காட்சிபடுத்தி உள்ளனர். மேலும், ஆவின், காதி, டான் டீ போன்ற துறைகள் தங்கள் விற்பனை அரங்குகளை அமைத்துள்ளனர்.
இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டு, சிறு தானிய உணவுகளை மக்கள் அதிக அளவில் பயன்படுத்திட ஏதுவாக இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படுகின்றன. பொதுமக்கள், அனைவரும் இக்கண்காட்சியினை பார்வையிட்டு, மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் வாங்கி அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறினார்.