தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னேறிய தொழில் வாய்ப்புள்ள மாநிலமாக இருப்பதால் ஏராளமான வடமாநிலத்தவர் தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வருகின்றவர். தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர் முக்கிய பண்டிகைகளுக்கு தங்கள் மாநிலத்துக்கு செல்வத்தையும் வழக்கமாக வைத்துள்ளனர்.
அப்படி தங்கள் மாநிலத்துக்கு செல்ல பெரும்பாலும் அவர்கள் ரயில் போக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர். அதில் சிலர் முன்பதிவில்லாத பெட்டியில் பயணம் செய்யாமல் முன்பதிவு பெட்டியில் ஏறி பயணம் செய்யும் நிகழ்வு அடிக்கடி நடந்து வருகிறது. இதன் காரணமாக ரயிலில் முன்பதிவு செய்திருப்பவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
அதிலும் கடந்த சில மாதங்களாக முன்பதிவு பெட்டியில் பயணம் செய்யும் வடமாநிலத்தவரால் முன்பதிவு செய்தவர்கள் பாதிக்கப்பட்டு அவர்கள் ரயில்வே போலிசாரிடம் புகார் அளிப்பதும், இதனால் வடமாநிலத்தவர்கள் நடுவழியில் இறக்கிவிடப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இரு நாட்களுக்கு முன்னர் திருவனந்தபுரம் - கோரக்கூர் ரயிலில், முன்பதிவு பெட்டிகளில் சொந்தஊர் செல்லும் வடமாநில தொழிலாளர்கள் ஆக்கிரமித்து அமர்ந்து கொண்டிருந்தனர்.இந்த ரயில் சேலம் வந்தடைந்த நிலையில், முன்பதிவு செய்திருந்த பயணிகள் ரயிலில் ஏறியபோது அங்கு வடமாநிலத்தவர்களால் அவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.
இதனால், முன்பதிவு செய்திருந்த பயணிகள் ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். தொடர்ந்து ரயில்வே போலிஸாரிடம் புகார் செய்யப்பட்ட நிலையில், முன்பதிவு செய்யாமல் முன்பதிவு பெட்டியில் பயணித்த சுமார் 300 வடமாநில தொழிலாளர்களை சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டனர். பின்னரே ரயில் புறப்பட்டு சென்றது. இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.