உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐபிஎல்லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.
அதைத் தொடர்ந்து ஆண்களுக்கான ஐபிஎல் பாணியில் பெண்களுக்கான ஐபிஎல் தொடரை நடத்தவும் பிசிசிஐ அமைப்பு திட்டமிட்டு இந்தாண்டு முதல் மகளிர் ஐபிஎல் போட்டிகள் தொடங்கியுள்ளன. டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உத்தரபிரதேச வாரியர்ஸ் என 5 அணிகள் இந்த தொடரில் களமிறங்குகின்றன.
இதன் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ்- குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி களமிறங்கிய மும்பை அணி ஆரம்பத்தில் இருந்தே அதிரடி ஆட்டம் ஆடியது. அந்த அணியின் தொடக்க வீரர் மாத்தியூஸ் 47 ரன் குவிக்க பின்னர் அதிரடி காட்டிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 30 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார். இறுதிக்கட்டத்தில் எமிலியா கர் 45 ரன்கள் விளாச மும்பை அணி 20 ஓவர்களில் 207 ரன்கள் குவித்தது.
பின்னர் ஆடிய குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி ஆரம்பத்தில் இருந்தே அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஒரு கட்டத்தில் 23 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையில் இருந்த அணியினை தமிழக வீராங்கனை ஹேமலதா 29 ரன்களை குவித்து அணி 50 ரன்களை கடக்க உதவினார். இறுதியில் அந்த அணி 64 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க மும்பை அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் மகளிர் ஐபிஎல் தொடர் கோலாகலமான ஆரம்பத்தை கண்டுள்ளது.