ராணுவ வீரர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாகவும் பா.ஜ.க நிர்வாகி வீட்டில் தாக்குதல் நடந்த விவகாரம் தொடர்பாகவும் சென்னையில் நேற்று பா.ஜ.க சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. இதில் அனுமதியை மீறி பேரணி சென்ற காரணத்தினால் போராட்டத்தில் ஈடுபட்ட 3000 பேர் மீது திருவல்லிக்கேணி போலிஸார் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், அந்தப் போராட்டத்தின் போது மேடையில் பேசிய பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான கர்னல் பாண்டியன் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். குறிப்பாக இராணுவ வீரர்களுக்கு துப்பாக்கி சுட தெரியும் குண்டு வைக்கத் தெரியும் எனக் கூறி, தமிழகத்தில் வைக்கும் நிலையை ஏற்படுத்தி விடாதீர்கள் என அரசை எச்சரிக்கும் விதமாக பேசினார்.
மேடையில் இவராக பேசியதற்கு பல்வேறு தரப்பில் கண்டனங்கள் எழுந்தன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் திருவல்லிக்கேணி போலிஸார் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் மற்றும் வன்முறையை தூண்டும் விதமாக பேசியது என இரண்டு பிரிவுகளில் கர்னல் பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர். விசாரணையில் குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப பிரிவுகள் சேர்க்கப்படலாம் என்ற அடிப்படையில் போலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் முகமது கவுஸ் என்பவர் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய ராணுவ அதிகாரியும் பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினருமான கர்ணல் பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்கும்படி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.