தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள், ஒழுக்கத்திலும் கல்வியிலும் சிறந்து விளங்கவும், நாட்டுப்பற்றுடன், நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளவும், அவர்களை நல்வழிபடுத்திடவும், தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 14.09.2022 அன்று கலைவாணர் அரங்கத்தில் 'சிற்பி' (SIRPI - Students In Responsible Polce Initiatives) என்ற புதிய திட்டத்தை துவக்கி வைத்தார்.
காவல்துறை குறித்து, பள்ளி மாணவர்கள் அறிந்து, காவல்துறையுடன் வளர்த்து நல்லுறவை ஏற்படுத்தி, சட்டத்தை மதிக்கும் சிறந்த குடிமக்களாகவும், பொறுப்பு மிக்க மாணவர்களாகவும் உருவாக்குவதே சிற்பி திட்டத்தின் தலையாய நோக்கமாகும்.
இதற்காக, சிற்பி திட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த 2558 மாணவர்கள் மற்றும் 2442 மாணவிகள் என மொத்தம் 5000 மாணவ மாணவிகளுக்கு வாரந்தோறும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், 7.1.2023 அன்று காலை எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் சிற்பி திட்டத்தின் 5000 மாணவர்கள் ஒரே நேரத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டனர். இதற்காக, உலக சாதனை யூனியன் (World Records Union), தமிழக இளம் சாதனையாளர்கள் சாதனை புத்தகம், (TamilNadu Young Achievers Book of Records), உலக இளம் சாதனையாளர்கள் சாதனை புத்தகம், (world Young Achievers Book of Records) ஆகிய 3 அமைப்பினர் சென்னை பெருநகர காவல் துறைக்கு மேற்படி 3 சாதனை சான்றிதழ்களை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் வழங்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து, சிற்பி திட்டத்தின் ஒரு பகுதியான கல்வி சுற்றுலாவுக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு, இன்று காலை, சிற்பி திட்டத்தில் உள்ள 5000 மாணவர்கள் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் ரயில் மூலம் அழைத்துச் சென்று, ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்திற்கு (Tamilnadu Police Academy), இயற்கையுடன் இணைந்த கல்வி சுற்றுலாவாக (Eco Friendly Educational Tour) அழைத்து செல்லப்பட்டனர்.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு எழும்பூர் ரயில் நிலையத்தில் சிற்பி மாணவ, மாணவிகளின் இயற்கையுடனான கல்வி சுற்றுலா பயணத்தை கொடியசைத்து, ரயில் பயணத்தை துவக்கி வைத்தார்
சென்னை பெருநகர காவல்துறை சார்பில் நடைபெறும் இப்பயணத்திற்காக, 4 சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, சிற்பி திட்டத்தின் 5000 மாணவர்கள் சிற்பி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் (Nodal Officers), காவல் அதிகாரிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். 5000 மாணவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களைரயில் மூலம் அழைத்து செல்வதால், சுற்று சூழல் மாசுபடாமல், இயற்கையை பேணி காக்கும் பயணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.