உலகம் முழுவதும் ஆண்டுதோறும் புது வருடம் பிறப்பதை ஒட்டி, புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும். அதேபோல் இந்தியாவில், தமிழ்நாட்டிலும் அவ்வாறே பொதுமக்கள் கொண்டாடி வருவர். ஆனால் இந்த கொண்டாட்டத்தின்போது பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் வகையில் சிலர் தகாத நடவடிக்கைகளில் ஈடுபடுவர். அவர்களுக்காக ஆண்டுதோறும் தமிழ்நாடு காவல்துறை சார்பில் சில விதிமுறைகள் விதிக்கப்படும்.
அதோடு தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதற்காகவும் தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பொதுமக்கள் பின்பற்றக்கூடிய விதிமுறைகளை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், 2023 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சென்னையில் 16 ஆயிரம் காவல்துறையினர் மற்றும் 1500 ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாகவும், 368 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுபவர்கள் மற்றும் பைக் ரேசிங் ஈடுபடுவர்களை கண்காணிக்க 28 ஏ.என்.பி.ஆர் கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் 53 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனங்களை கொண்டு தொடர் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட உள்ளதாகவும், பைக் ரேசிங் மற்றும் அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கடந்த 25 ஆம் தேதி (கிறிஸ்துமஸ்) முதல் பொதுமக்களுக்கு இடையூறாக பைக் ரேஸ் மற்றும் அதிவேகமாக வாகனத்தை இயக்கியதாக 360 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதோடு சென்னையில் வருகிற 31ஆம் தேதி இரவு அசம்பாவிதங்களை தடுக்க அனைத்து மேம்பாலங்களும் மூடப்படும் எனவும் மெரினா, பெசண்ட் நகர், திருவான்மியூர் ஆகிய கடற்கரைகளில் வாட்ச் டவர், நைட் விஷன் டிரோன் கேமராக்கள், குதிரைப்படை உள்ளிட்டவை பயன்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் கூறினார்.
மேலும் வருகிற 31ஆம் தேதி இரவு கடலில் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது எனவும் இரவு 8 மணி முதல் ஆர்.பி.ஐ முதல் லைட் ஹவுஸ் வரையிலான காமராஜர் சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது எனவும் புத்தாண்டை கொண்டாட வருபவர்களின் போக்குவரத்து பார்க்கிங் வாலாஜா சாலை, சிவானந்தா சாலை உள்ளிட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறித்து நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்களை வரவழைத்து ஆலோசனை நடத்தியதாகவும், அதில் கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டும், 80% நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தெரிவித்திருப்பதாக கூறிய அவர், மாலை 6 மணி முதல் இரவு 1 மணி வரை மட்டுமே பார்ட்டிக்கு அனுமதி வழங்கி இருப்பதாகவும், பார்ட்டியின் போது பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமெனவும், இரவு 1மணிக்கு மேல் பார்ட்டி நடத்தினால் சம்மந்தப்பட்ட நட்சத்திர விடுதி சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் அளவுக்கதிகமான மதுபோதையில் இருப்பவர்களை டிராவல்ஸ் மூலமாக அனுப்பும் வகையில் ஊபர் நிறுவனத்துடன் இணைந்து சென்னை காவல்துறை புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளதாகவும், குறிப்பாக Qr கோடை ஹோட்டல், பொதுமக்கள் கூடும் இடங்கள், வாகன சோதனை சாவடிகளில் ஒட்டப்பட்டுள்ளதாகவும், அளவுக்கதிகமான போதையில் இருப்போர் இந்த Qr கோடை ஆப் மூலமாக ஸ்கேன் செய்தால் உடனடியாக வாகனம் வரும், அதன் மூலமாக பயணிக்கலாம் எனவும் மீறி குடிபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.
18 வயதுக்குட்பட்டோரை நட்சத்திர விடுதிக்குள் அனுமதிக்க கூடாது எனவும் சிறுவர்கள் வாகனங்களை இயக்கினால் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இந்தாண்டு விபத்தில்லாமல் புத்தாண்டு தினத்தை கொண்டாட வேண்டும் எனவும் கூறினார். கடந்தாண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு சாலை விபத்து மரணங்கள், குற்றங்கள், கொலைகள் குறைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.