என்னதான் மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தாலும், பல்வேறு மாநிலங்களில் எம்.எல்.ஏக்களை வாங்கி பாஜக ஆட்சியில் இருந்தாலும், தமிழ்நாட்டில் அக்கட்சியால் தலைநிமிர முடியாத நிலையே இருக்கிறது. இதன் காரணாமாக திரை பிரபலங்களை வைத்து தமிழ்நாட்டில் கட்சியை பலப்படுத்த பாஜக கடந்த சில ஆண்டுகளாகவே நடவடிக்கை எடுத்துவருகிறது.
அந்த வகையில் நடிகை காயத்ரி ரகுராம் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் பாஜகவில் இணைந்தார். இவர் தெரிவிக்கும் கருத்துக்கள் அவ்வப்போது சர்ச்சையை கிளப்பி வந்தார். சமீபத்தில் கோவை குண்டுவெடிப்பு குறித்து வன்முறையை தூண்டும் விதமாக பேசிய நிலையில் அது சர்ச்சையானது.
இது போன்ற செயல் காரணமாக பாஜகவில் அவருக்கு தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவர் பதவி கிடைத்தது. அதைத் தொடர்ந்து அவர் பாஜக தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக விமர்சிப்பதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக விவகாரத்தில் பாஜக ஆதரவாளர் ஒருவர் காயத்ரியின் பெயரை குறிப்பிடாமல் இருந்தா இரு இல்லாட்டி போ என தெரிவித்திருந்தார். இதற்கு செல்வகுமார் என்ற அண்ணாமலை ஆதரவு நிர்வாகி லைக் போட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த பதிவை குறிப்பிட்டு செல்வகுமார் எப்போது பாஜக தலைவரானார் என கேலியாக குறிப்பிட்டிருந்தார். மேலும் தன்னை தமிழக பாஜக தலைவருக்கு எதிராக செயல்படுவது போல் சித்தரிப்பது ஏன் என்றும் காசை வாங்கி கொண்டு அவர் போடும் கமென்டுகளுக்கும் மூத்த தலைவர்களை திட்டி வேறு சிலர் போடும் கமென்ட்களுக்கும் லைக் போடுங்கள் என அண்ணாமலையின் பெயரை குறிப்பிடாமல் காயத்ரி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து பாஜக தலைவர்கள் லைக், ரீட்வீட் செய்ய செய்ய காசு கொடுக்கிறார்கள் என்ற உண்மை காயத்ரி ரகுராம் மூலம் வெளிவந்தது. இந்த நிலையில், தமிழக பாஜகவிலிருந்து அவர் 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், அதுவரை அவரிடம் கட்சி நிர்வாகிகள் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் அண்ணாமலை அதில் குறிப்பிட்டுள்ளார்.