தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (22.11.2022) இராணி மேரி கல்லூரியின் 104-ஆவது பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு ஆற்றிய உரை:-
முதல் தலைமுறை பட்டதாரிகளாகிய நீங்கள் உங்களுக்கு அடுத்தடுத்து வரும் தலைமுறைகளை படிக்க வைக்க வேண்டும் என்று நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். உங்களது பெயருக்குப் பின்னால் பட்டம் இருப்பது கெளவரம் மட்டுமல்ல – அது உங்கள் அடிப்படை உரிமை! இந்தப் பட்டமளிப்பு விழாவுக்கு இன்னொரு சிறப்பு என்ன என்றால், மாற்றுத்திறனாளிகளை பெண்கள் ஆறு பேரும் இன்று பதக்கம் பெறுகிறார்கள் என்பதுதான் மிக மிகச் சிறப்பு.
கழகம் ஆட்சியில் அமைந்த காலத்தில் எல்லாம் பெண்கள் முன்னேற்றத்துக்காக ஏராளமான திட்டங்களைத் தீட்டி இருக்கிறது. இப்போது தீட்டியும் வருகிறது.
பெண்களுக்குச் சொத்தில் சம உரிமைச் சட்டம் கொண்டு வந்தது கலைஞருடைய திமுக அரசு.
அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு. அதை உருவாக்கித் தந்தவர் தலைவர் கலைஞர். அதை இப்போது 40 விழுக்காடு ஆகவும் உயர்த்தியிருக்கிறோம். போறப்போக்கில், ஆண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கின்ற நிலை வந்தாலும் ஆச்சரியம் இல்லை.
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு. இப்போது 50 சதவீதம் இடஒதுக்கீடு.மகளிர் சுய உதவிக்குழுக்களை அமைத்தது கழக அரசு தான்.
மகளிர் தொழில் முனைவோர் உதவித்திட்டம் கொண்டு வந்தோம். இப்படி பெரிய பட்டியலை என்னால் அடுக்கிக் கொண்டிருக்க முடியும்.
அந்த வரிசையில்தான் மகளிருக்கு கட்டணமில்லாப் பேருந்து பயணத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம். இது ஏதோ வெறும் கட்டணச் சலுகை என்று நீங்கள் நினைத்திட வேண்டாம். பெண்களுக்கான பொருளாதார தன்னிறைவுக்கு அடித்தளம் அமைக்கக்கூடிய திட்டம் தான் இந்தத் திட்டம். இதன் மூலமாக ஏராளமான பெண்கள் கல்வி கற்கவும், வேலைகளுக்காகவும், சிறுதொழில் நிறுவனங்களை உருவாக்கவும் வெளியில் வரத் தொடங்கி இருக்கிறார்கள்.
எனது கனவுத் திட்டங்களில் ஒன்றான புதுமைப் பெண் - உயர் கல்வி உறுதித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தினால் இந்த ஆண்டு, இராணி மேரி கல்லூரியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டில் பயிலக்கூடிய 1,039 மாணவியர்கள் இதனால் பயன் பெற்றிருக்கிறார்கள் என்பதை பார்க்கிறபோது நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஆண்டு முதலாமாண்டு சேர்ந்த மாணவியரும் இத்திட்டத்தின் மூலமாக பயன்பெற உள்ளனர்.
'புதுமைப் பெண்' திட்டத்தின் காரணமாக, இக்கல்லூரியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்கிற தகவலும் தொடர்ந்து எனக்கு வந்து கொண்டிருக்கிறது, அது மகிழ்ச்சியை தருகிறது. அப்படி தங்களது கல்லூரிக் கனவை நனவாக்கிக் கொள்ள வரக்கூடிய மாணவிகள், இந்தக் கல்லூரியிலேயே தங்கி படிப்பதற்கு வசதியாக விடுதி ஒன்றை ஏற்படுத்தித்தர வேண்டும் என்பது இந்தக் கல்லூரி நிர்வாகத்தின் கோரிக்கையாக இருப்பதாக நான் அறிந்தேன்.
எனவே, மாணவியர்கள் தங்கிப் பயில ஏதுவாக கல்லூரி வளாகத்திற்குள்ளேயே விடுதி கட்டித்தரப்படும் என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்
கடந்த மே 25-ஆம் நாளன்று இதே இராணி மேரி கல்லூரியில் நடந்த மாநில அளவிலான முதல் இளைஞர் திறன் திருவிழா மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்குகிற விழாவில் நான் கலந்து கொண்டேன்.
நான் மட்டும் முதல்வன் என்று சொல்லிக் கொண்டிருந்தால் போதாது, நீங்கள், ஒவ்வொருவரும் நான் முதல்வன், நான் முதல்வன் என்று சொல்லக்கூடிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். அதற்காகத்தான் அந்தத் திட்டத்தையும் தொடங்கி இருக்கிறோம். வேலைக்கான ஆட்களை உருவாக்கத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்கி வருகிறோம். இதனை இன்றைய இளைய தலைமுறை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
நான் முதல்வன் திட்டத்தின்கீழ் இராணி மேரி கல்லூரியில் கடந்த 6 மாதங்களில், BFSI (Banking, Financial Services and Insurance) அந்த பயிற்சியில் 449 மாணவியர்களும், Logistics-ல் 221 பேரும், பயிற்சி எடுத்துப் பயன் பெற்றிருக்கிறார்கள்.
பல கல்விக்குழுக்கள் மற்றும் பயிற்சி பட்டறைகள் உருவாக்கப்பட்டுள்ளது,
காவல்துறை சீருடைப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுக்கான இலவசப் பயிற்சியும் பேராசிரியர் குழுவால் நடத்தப்பட்டு வருகிறது.
வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி, அதன் மூலம் 948 பேர் வேலைவாய்ப்பு பெற்றிருக்கிறார்கள்.
தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கான ஊக்கத் தொகையை, இராணி மேரி கல்லூரியில் 842 பேர் பெற்று வருகிறார்கள்.
இராணி மேரி கல்லூரி மாணவிகள், விளையாட்டு துறையிலும் சளைத்தவர்கள் அல்ல. கல்லூரியின் சார்பாக, கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான Para Asian ஜுடோ போட்டிகள், இங்கிலாந்து மற்றும் தென்கொரியாவில் நடைபெற்றபோது, இந்தக் கல்லூரியினுடைய மாணவியர் பங்குபெற்று பதக்கம் வென்றிருக்கிறார்கள்.
இந்திய பார்வையற்ற பெண்கள் கால்பந்து வீராங்கனைகள் சங்கம் சார்பில், சர்வதேச போட்டிகள் மற்றும் பயிற்சிகளில் பங்கேற்று, கல்லூரிக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள்.
சிலம்பத்திலும் கோ-கோ-விலும் தேசிய அளவில் தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறார்கள்.
மால்கம் போட்டி, கராத்தே, மற்றும் கபடியிலும், தேசிய அளவில் வெள்ளி பதக்கம் பெற்றிருக்கிறார்கள்.
மாநிலங்களுக்கிடையேயான ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் பங்கு பெற்றிருக்கிறார்கள்.
மாணவி நித்யா குறளோவியம் நாட்காட்டி ஓவியப் போட்டியில் வென்று தனது ஓவியத்தை அரசு நாட்காட்டியில் ஏற்றியிருக்கிறார். பரதநாட்டிய நடனத்திலும் சாதனை படைத்து வருகிறார்.
இராணி மேரி கல்லூரி தொடர்ச்சியாக, 6 ஆண்டுகள் சென்னையில் குடியரசு நாள் கொண்டாட்ட நிகழ்வில் நடைபெறும் நடனப் போட்டியில், முதல் பரிசு பெற்று பெருமை பெற்றிருக்கிறது.
இராணி மேரி கல்லூரி இசைத் துறை மாணவியர், திரை இசை மற்றும் கர்நாடக இசையில் முன்னணி வகித்து வருகின்றனர்.
மாணவிகள் மட்டுமல்ல, இராணி மேரி கல்லூரியின் பேராசிரியர்களும், மாணவியர்களுக்கு சளைக்காமல், பல சாதனைகளை படைத்திருக்கிறார்கள்.
தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் திருமதி. லோகநாயகி அவர்கள், தமிழக அரசு சார்பில் கலைஞர் விருது பெற்றிருக்கிறார்கள்.
2011ஆம் ஆண்டு மற்றும் 2014ஆம் ஆண்டுகளில், முறையே, இந்திய குடியரசு தலைவரால் வழங்கப்பட்ட விருதுகளை, தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் சிவஞானம் கலைமகள் அவர்களும், பொருளியல் துறை பேராசிரியர் முனைவர் து. விஜயலட்சுமி அவர்களும் பெற்றிருக்கிறார்கள்.
இராணி மேரி கல்லூரியில் சேர்ந்து, பயின்று, மாற்று பாலினத்தவராக மாறியவர்க்கு, இறுதியாண்டு தேர்வு எழுதி, அவர் பட்டம் பெற்று செல்லும் வரையான அனைத்து உதவிகளையும் செய்து, அவரை தேர்ச்சி பெற வைத்தது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இப்படி உங்கள் கல்லூரியானது சாதனைக் கல்லூரியாக இருக்கிறது. பட்டம் வழங்கும் கல்லூரியாக மட்டுமல்ல – திறமையின் கிடங்காகவும் உங்கள் கல்லூரி இயங்கிக் கொண்டிருக்கிறது.
நூறாண்டுகளுக்கும் மேலாக, கல்விப் பணியாற்றி வரும் இந்த இராணி மேரி கல்லூரி, வருங்காலங்களிலும் பெண் கல்வியின் மகத்துவத்தை உலக அரங்கிலும் முன்னிறுத்தும் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.