தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று (18.11.2022) மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தலைமையில் நடப்பாண்டில் 50,000 தமிழக விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவது பற்றியும் தமிழகத்தில் எதிர்பார்க்கப்படும் கனமழையினை எதிர்கொள்ளும் பொருட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கன மழையை எதிர்கொள்ள கூடிய வகையிலும், மழை பெய்தாலும் எவ்வித தடையும் இல்லாமல் சீரான மின்சாரம் வழங்குவதற்காகவும், மதிப்பிற்குரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அவர்களும், மதிப்பிற்குரிய இயக்குநர்/பகிர்மானம் உள்ளிட்ட உயர் அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் தற்போது நடந்து முடிந்திருக்கின்றன. குறிப்பாக, வரக்கூடிய நாட்களில் மழை அதிகமாக இருந்தாலும் கூட எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்பட வேண்டுமென்று அறிவுறுத்தப் பட்டிருக்கின்றன.
ஏற்கனவே, ஜுன் மாதம் தொடங்கி ஒவ்வொரு நாளும் சிறப்பு பராமரிப்பு பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் 44,000 பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இப்படி தொடர்ந்து பராமரிப்பு பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டு எந்தவித பாதிப்புகளும் இல்லாமல் சீரான மின் விநியோகம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. சென்னை உட்பட எந்த இடங்களிலும் மின் விநியோகத்தில் எந்தவித பாதிப்புகளும் இல்லை.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் 50,000 விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு வழங்ககூடிய மகத்தான திட்டத்தில் 20,000 விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு ஆணைகளை ஒரே நாளில் வழங்கி மாண்புமிகு முதல்வர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. 100 நாட்களில் 50,000 விவசாயிகளுக்கான மின் இணைப்பு வழங்கக்கூடிய பணிகள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டு, இணைப்பு வழங்கக்கூடிய பணிகளை விரைவாக 100 நாட்களுக்கு உள்ளாக முடிக்க வேண்டும் என்று இந்த ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன.
இரண்டு நோக்கங்களுக்காக இந்த ஆய்வு கூட்டம் நடந்து முடிந்திருக்கின்றன. மின் விநியோகத்தை பொறுத்தவரைக்கும் ஊடக நண்பர்களிடமும் பொதுமக்களிடமும் நான் கேட்டுக்கொள்வது, மழையால் மின் பாதிப்பு ஏற்பட்டால் உடனுக்குடன் மின்னகத்தை தொடர்பு கொண்டு எந்த இடங்களில் பாதிப்பு என்று புகார் தெரிவிக்க வேண்டும். அந்த புகாரின் அடிப்படையில் விரைவாக விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த மழையினால் சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் எங்கேயும் பாதிப்பு இல்லை.
சீர்காழியைப் பொறுத்தவரைக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி இருக்கிறார்கள். 36 மணி நேரத்திற்குள்ளாக சீர்காழியில் பாதிக்கப்பட்ட அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டிருக்கின்றன. அங்கு பழுதடைந்த மின் கம்பங்கள் எல்லாம் மாற்றப்பட்டிருக்கின்றன. ஏறத்தாழ 46 மின்மாற்றிகள் வரை புதிதாக மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றன. மிக சிறப்பாக பணியாற்றக்கூடிய சீர்காழி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுகோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து கூடுதலாக பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களும் அந்த பணியில் ஈடுபட்டு மிகச்சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். அவர்களுக்கு என் சார்பாகவும், மின்சார வாரியத்தின் சார்பாகவும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னையைப் பொறுத்தவரை ஏறத்தாழ 16 உயர் அழுத்த மின்மாற்றிகளின் உயரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கனமழை பெய்தும் மின்சாரம் தடையின்றி வழங்கப்பட்டதை பொதுமக்கள் மனதார பாராட்டியுள்ளனர். பத்திரிக்கையாளர்களும் பாராட்டுக்களை தெரிவித்தனர். மழைக்காலங்களில் அனைத்து மின் நுகர்வோர்கள் மிகவும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது" எனக் கூறியுள்ளார்.