நாடு முழுவதும் கொண்டாடப்படும் தீபஒளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். ஆண்டுதோறும் வெவ்வேறு நாளில் நடைபெறும் இந்த பண்டிகை இந்தாண்டு அக்டோபர் 25 (நேற்று) கொண்டாடப்பட்டது.
தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் காலையில் எழுந்து பூஜை செய்து புத்தாடை அணிந்து தீபஒளியை கொண்டாடினர். சிறுவர் முதல் பெரியவர் வரை பட்டாசு வெடித்தும் மகிழ்ந்தனர். ஆண்டுதோறும் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிகரித்து காணப்படும்.
அந்தவகையில் இந்தாண்டு கொண்டாடப்பட்ட தீபஒளியின் எதிரொலியால் காற்று மாசு மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது. இதன் எதிரொலியாக சென்னையி பல்வேறு பகுதிகளில் காற்று தரக்குறியீடு 200 புள்ளிகளை கடந்து மோசமான காற்று மாசுவாக புள்ளிகளையும் காணப்படுவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
அதில், மணலி கிராம பகுதியில் 250 புள்ளிகளையும், எண்ணூர் பகுதியில் 238 புள்ளிகளையும், இராயபுரத்தில் 232 புள்ளிகளையும் கடந்து காணப்படுகிறது. அதே போல் ஆலந்தூரில் 218 புள்ளிகளும், அரும்பாக்கத்தில் 212 புள்ளிகளும், வேளேச்சேரியில் 203 புள்ளிகளும், பெருங்குடியில் 190 புள்ளிகளும் காணப்படுகிறது.
மேலும் சென்னை மாநகரில் நுங்கம்பாக்கம், தி.நகர், கோடம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, இராயப்பேட்டை, மந்தைவெளி, கிண்டி, சென்ட்ரல், சேப்பாக்கம், பாரிமுனை, திருமங்கலம், அண்ணாநகர், அமைந்தகரை, சூளைமேடு மற்றும் சென்னை புறநகர் பகுதியான முகப்பேர், பாடி, கொரட்டூர், அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம், அயப்பாக்கம், திருமுல்லைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் வெடிகளை வெடித்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்து மிகவும் அதிகப்படியான காற்று மாசு ஏற்பட்டது. இதனால் சாலைகளில் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
காற்று குறியீட்டை பொறுத்தவரையில் 50 புள்ளிகள் வரை நல்ல காற்று என்றும், 51 - 100 புள்ளிகள் வரை திருப்திகரமான காற்று என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அதே போல் 101 - 200 புள்ளிகள் வரை மிதமான காற்று மாசு என்றும், 200 - 300 புள்ளிகள் வரை மோசமான காற்று மாசு என்றும் காற்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.
அந்த வகையில் தற்போது சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் 200 புள்ளிகளை தாண்டி இருப்பதால் மோசமான காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.