தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (15.10.2022) சென்னை, இராயப்பேட்டை, புதுக்கல்லூரியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :-
முன்னாள் குடியரசுத் தலைவர் இளைஞர்களின் கனவு நாயகனாக விளங்கிய, இன்றைக்கும் விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளில் அவரை நினைவுகூரத்தக்க வகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பேசிய அனைவருக்கும் நன்றி.
புதுக் கல்லூரியின் தலைவர் ஆற்காடு நவாப் திரு. முகமது அப்துல் அலி, இங்கு சுருக்கமாக உரையாற்றினார். பேச வேண்டும் என்று எங்களிடத்தில் முன்கூட்டியே தன்னுடைய ஆவலை தெரிவித்து, அந்த ஆவலை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் அவர் பேசியிருக்கிறார் என்று சொன்னால், நானும், அவரும் சென்னை, சேத்துப்பட்டில் இருக்கக்கூடிய சென்னை கிருத்துவ உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். ஆனால் அவரைப் பார்த்தால், என்னைப் பார்த்தால் எவ்வளவு வித்தியாசம் என்று உங்களுக்கு தெரியும். என் வயதுதான். அவர் வயதுதான் எனக்கும். ஆனால், பார்ப்பதற்கு எனக்கு அவர் தந்தை போல, தாத்தா போல, உருவத்தில் மாறியிருக்கிறார்.
நான் பல இடங்களில் ராஜ்பவன், பல அரசு நிகழ்ச்சியில், பொது நிகழ்ச்சியில் பார்க்கிறபோது, எங்களை நாங்களே அறிமுகப்படுத்திக் கொள்கிறபோது மற்றவர்கள் எல்லாம் ஆச்சாரியப்படுவார்கள். இவரா உங்கள் கிளாஸ்மெட் என்று கேட்பார்கள். இருந்தாலும், இன்றைக்கு அவர் ஆர்வத்தோடு இந்த நிகழ்ச்சிக்கு வந்து என்னுடன் பள்ளியில் படித்த மாணவன் முதலமைச்சராக வருகிறார், அந்த நிகழ்ச்சிக்கு நானும் வரவேண்டும் என்று வந்தது மட்டுமல்ல, பேசவேண்டும் என்று முடிவெடுத்து, இங்கே தன்னுடைய வாழ்த்தைச் சொல்லியிருக்கிறார். அதற்காக நான் முதலில் அவருக்கு என்னுடைய நன்றியை, வணக்கத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
கையில் பட்டங்களோடும், மனதில் கனவுகளோடும் இந்த முகாமில் பங்கேற்க வந்திருக்கக்கூடிய அனைவரையும் நான் மிகுந்த அன்போடு, பூரிப்போடு அவர்களை எல்லாம் வருக வருக என வரவேற்க கடமைப்பட்டிருக்கிறேன். இந்த நிகழ்ச்சி இன்றைக்கு இந்த புதுக் கல்லூரியில், அதுவும் திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் தொகுதியில், நம்முடைய மத்திய சென்னையில் அடங்கியிருக்கக்கூடிய இந்தத் தொகுதியில், நடக்கிறது என்று சொன்னால், ஒரு வகையில் நம்மையெல்லாம் விட அதிகமான மகிழ்ச்சி நம்முடைய தயாநிதிக்கு உண்டு, உதயிநிதிக்கும் உண்டு. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்பதை எண்ணி, நாங்களும் மகிழ்ச்சியோடுதான் கலந்து கொண்டிருக்கிறோம்.
அதே நேரத்தில் துவக்கத்தில், எப்போதும் அமைச்சர்கள் தான் வேண்டுகோள் வைப்பார்கள் முதலமைச்சரிடத்தில். நான் இப்போது அமைச்சரிடத்தில் ஒரு வேண்டுகோள் வைக்கப் போகிறேன். என்னைத் தேர்ந்தெடுத்திருக்கக்கூடிய சட்டமன்றத் தொகுதி கொளத்தூர் தொகுதி, அந்தத் தொகுதியில் நீங்கள் விரைவாக நடத்தவேண்டும். அந்த வேண்டுகோளை, அந்தத் தொகுதியின் சார்பில், உரிமையோடு நான் இந்த நேரத்தில் எடுத்து வைக்க விரும்புகிறேன்.
நான் மட்டுமல்ல, சேகர்பாபுவினுடைய துறைமுகத் தொகுதியிலும் நடத்த வேண்டும். ஆகவே, எங்களுடைய இரண்டு தொகுதிகள் மட்டுமல்ல, ஏற்கனவே, வேறு வேறு இடங்களில் நடத்தப்பட்டிருக்கிறது என்று சொன்னார்கள். 234 தொகுதியிலும் நீங்கள் நடத்தவேண்டும் என்பது தான் முதலமைச்சர் என்கிற முறையில் நான் வைக்கக்கூடிய வேண்டுகோள். அதை நிச்சயம் அவர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய உண்டு.
உங்களது தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ற பணி வேலைவாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் அதற்கான என்னுடைய வாழ்த்துகளை இப்போதே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த வேலைவாய்ப்பு முகாம் எனக்கு மிகவும் திருப்திகரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைக்குமாறு என்னை மட்டுமே அழைக்காமல், ஒரு லட்சமாவது பணி நியமன ஆணையை கொடுக்க வைக்கக்கூடிய அந்த வாய்ப்பையும் எனக்கு வழங்கியிருக்கிறார்கள். அதில் தான் ரொம்ப, ரொம்ப பெருமையாக இருக்கிறது. இதை விட ஒரு அரசாங்கம் நடத்துகிற முதலமைச்சருக்கு வேறு என்ன மகிழ்ச்சி இருக்கப் போகிறது?
இன்றைக்கு வேலையின்மை (unemployment) மிகப் பெரிய பிரச்னையாக இருக்கிறது. வேலையில்லாமல் அலைந்து கொண்டிருக்கக்கூடிய இளைஞருடைய அந்த நிலைமை மிகவும் ஒரு மோசமான நிலை தான். அது வருத்தப்படக்கூடிய ஒரு நிலைதான். அதுவும் கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா என்ற ஒரு கொடிய தொற்று, உலகம் முழுவதும், நம்முடைய தமிழகத்தில் மட்டுமல்ல, அது அச்சுறுத்திய காரணத்தினால், அந்த கொடுமை இருந்த காரணத்தினால், எங்கேயும் புதிய வேலை வாய்ப்புகளுக்கு ஒரு சவாலான காலமாக அமைந்திருந்தது. அத்தகைய நெருக்கடியான காலக்கட்டத்தில் தான் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைந்தது.
அப்படி அமைந்த நேரத்தில் பார்த்தீர்கள் என்று சொன்னால், நாங்கள் தேர்தல் நேரத்தில் சொன்ன உறுதிமொழிகள் எல்லாம் உடனடியாக காப்பாற்றக்கூடிய வாய்ப்பு நமக்கு கிடைக்கவில்லை. ஒரு அச்சம் ஏற்பட்டது, ஒரு பயம் ஏற்பட்டது, இதையெல்லாம் எப்படி செய்யப்போகிறோம்? இங்கே தயாநிதி மாறன் பேசுகிறபோது சொன்னார், சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுதமுடியும். உடல் நன்றாக இருந்தால் தான், நம்முடைய பணிகளை நிறைவேற்ற முடியும். ஆகவே, அப்படிப்பட்ட ஒரு நிலை.
எந்த நேரத்தில் என்ன நடக்கும், எங்கு பார்த்தாலும் ஆம்புலன்ஸ் சத்தம், ஆக்சிஜன் இல்லை. மருத்துவமனைகளில் இடம் இல்லை. அப்படிபட்ட ஒரு கொடுமையான சூழ்நிலை அமைந்தது. அப்போது பொறுப்பேற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசு எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, அந்தக் கொரோனாவை தடுக்கின்ற அந்தக் கொடிய நோயிலிருந்து மக்களை காப்பாற்றுகின்ற அந்தப் பணியில் எங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டோம்.
அண்மையில்கூட, நியூஸ் 18 தொலைக்காட்சியில் conclave நிகழ்ச்சி ஒன்று ITC-யில் நடந்தது. என்னை சிறப்பு அழைப்பாளராக அழைத்திருந்தார்கள். அதில் சில கேள்விகள் எல்லாம் என்னிடத்தில் கேட்டார்கள், பேசி நான் முடித்ததற்குப் பிறகு. கொரோனா காலத்தில் தான் நீங்கள் பதவி ஏற்று இருந்தீர்கள், கொரோனாவை நீங்கள் எப்படி கட்டுப்படுத்தினீர்கள்? அது எப்படி உங்களால் முடிந்தது என்று. ஒரே வார்த்தை சொன்னேன்.
அன்றைக்கு அமைச்சராக பொறுப்பேற்றிருக்கக்கூடிய நான் உட்பட எல்லோருமே மருத்துவத்துறையைச் சார்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டு, நாங்கள் எல்லோரும் டாக்டராக மாறினோம். அதனால் தான் மக்களை காப்பாற்றினோம் என்று சொன்னேன். இப்போது எல்லா அமைச்சரையும் கேளுங்கள், கொரோனா என்றால் அத்துப்படி, finger tips-ல் வைத்திருக்கிறோம். ஆகவே, அந்த அளவிற்கு அதில் முழுமையாக ஈடுபட்ட காரணத்தினால் தான் அதை கட்டுப்படுத்த முடிந்தது. அத்தகைய நெருக்கடியான காலக்கட்டத்தில் தான், நாங்கள் ஆட்சிக்கு வந்தோம்.
ஆனால், கொரோனாவையே காரணமாக வைத்து வேலையின்மை பிரச்னையை கண்டும் காணாமல் திமுக அரசு விட்டுவிடவில்லை. நம்முடைய ஆட்சி அதை கண்டும் காணாமல் இருந்துவிடவில்லை. ஒரு லட்சம் பேருக்கு இந்த ஓராண்டு காலத்தில் வேலை வாய்ப்பை இன்றைக்கு நாங்கள் உருவாக்கித் தந்துள்ளோம். இது ஒரு மிகப் பெரிய சாதனை என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னைப் பொறுத்தவரைக்கும், இது ஒரு சாதனை விழாவாகத்தான் நான் நம்பி இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். அந்த வகையில் தான் இந்த விழாவும் நடந்து கொண்டிருக்கிறது. இதற்குக் காரணமான இந்தத் துறையினுடைய அமைச்சராக பொறுப்பேற்றிருக்கக்கூடிய அருமை சகோதரர் கணேசன் அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.
ஒரு லட்சம் குடும்பங்களில் விளக்கேற்றுவதற்கு நீங்கள் காரணமாக இருந்திருக்கிறீர்கள். தொழிலாளர் துறை அமைச்சராக மட்டுமல்ல தொழிலாளர் தோழனாகவே அமைச்சர் திரு. கணேசன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதுதான் பாராட்டுக்குரியது. எதற்கு சொல்கிறேன் என்றால், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் ஏராளமான பணிகள் கடந்த பதினைந்து மாத காலத்தில் செய்து தரப்பட்டுள்ளது.
தொழிலாளர் நல வாரியங்களில் முந்தைய ஆட்சியாளர்களால் தரப்படாமல் நிலுவையில் இருந்த 1 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, நலத்திட்ட உதவிகள் செய்து தரப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்ற ஆட்சி காலத்தில் 6 லட்சத்து 71 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 25-க்கும் மேற்பட்ட தொழில்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தினை நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வீட்டுவசதித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக 12 ITI தொழிற்பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இவை போன்ற உதவித் தொகைகள் அனைத்தும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
இவை அனைத்துக்கும் மேலாக கடை மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தித் தர சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. கடைகளில் யாரும் நின்று கொண்டிருக்கக்கூடாது. கடைகளில் பணியாற்றக்கூடிய அந்த பணியாளர்களெல்லாம், ஏதோ, கல்லாப்பெட்டியில் முதலாளி மட்டும் உட்கார்ந்து இருப்பது மட்டுமல்ல, கடைகளில் பணியாற்றக்கூடிய பணியாளர்களும் அந்தக் கடைகளில் உட்கார்ந்து இருக்கக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும் என்ற ஒரு சட்டத்தை கொண்டு வந்த ஆட்சி தான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி.
இப்படி எல்லா தொழிலாளர்களுக்கும் மனதில் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்திய அறிவிப்புகள். இந்த வரிசையில் இத்துறை வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. கடந்த 15 மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் பெரிய அளவில் 65 வேலை வாய்ப்புப் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. சிறிய அளவில் 817 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.
மொத்தமாகச் சொல்வதாக இருந்தால் 882 முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது. அப்படி நடத்தப்பட்டிருக்கக்கூடிய அந்த முகாம்கள் மூலமாக இத்துறையின் ஆர்வத்தை நான் பார்க்கிறபோது, இந்த முகாம்கள் மூலம் இதுவரைக்கும் 15 ஆயிரத்து 691 நிறுவனங்கள் பங்கெடுத்துள்ளன. இதுவரை நடந்த முகாம்களில் 99 ஆயிரத்து 989 பேர் பல்வேறு வேலை வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியை இங்கே எல்லோரும் தெரிவித்தார்கள், அதைதான் நானும் வழிமொழிகிறேன்.
பத்தாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பொறியியல் பட்டதாரிகள் வரை வேலை வாய்ப்பை பெற்றுள்ளார்கள். இப்படி வேலை வாய்ப்பைப் பெற்றவர்களில் மாற்றுத்திறனாளிகளும், திருநங்கைகளும் இருக்கிறார்கள் என்பதுதான் Social justice இது தான் திராவிட மாடல். அதனுடைய அடையாளம் ஆகும். திராவிட மாடல் என்றால் என்ன, என்ன என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்களே, அவர்களுக்கு எத்தனையோ சொல்லலாம், இது ஒரு திராவிட மாடல்.
ஒரு லட்சமாவது பணி ஆணையை வழங்கியது உள்ளபடியே சொல்கிறேன், என்னுடைய வாழ்நாளில் எத்தனையோ மறக்க முடியாத நிகழ்ச்சிகள் எல்லாம் உண்டு, அப்படிப்பட்ட வரிசையில், உறுதியாக சொல்கிறேன். இந்த ஒரு இலட்சமாவது பணி ஆணையை வழங்குவதும் ஒரு நிகழ்ச்சியாக அமைந்திருக்கிறது என்பதை நான் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன்.
அமைச்சர் கணேசன் அவர்களுக்கு மட்டுமல்ல, இந்தத் துறையின் பொறுப்பை ஏற்று செயலாற்றிக் கொண்டிருக்கக்கூடிய அதிகாரிகள் அத்தனை பேருக்கும் நான் இந்த நேரத்தில் என்னுடைய இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஒரு லட்சம் என்பது முடிவல்ல, இது தொடக்கம். அதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு என்றால், ஒவ்வொரு ஆண்டுக்கு எவ்வளவு என்பதை என்று கணக்கைப் போட்டுப் பாருங்கள். எனவே, அந்த வகையில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதை இலக்காக வைத்துக் கொண்டு செயல்படவேண்டும்.
ஒரு இளைஞருக்கு வேலை கிடைப்பதன் மூலமாக ஒரு குடும்பம் முன்னேறுகிறது. அது மட்டுமல்ல, அவரது தலைமுறையே முன்னேற்றப் பாதைக்குச் செல்கிறது. இங்கே வேலை பெற்றுச் செல்பவர்கள்... பத்து ஆண்டுகள் கழித்து- இருபது ஆண்டுகள் கழித்து - தங்கள் பிள்ளைகளிடம், ஏன் தங்களுடைய பேரன் பேத்திகளிடம், இது மாதிரி இந்தத் தேதியில், புதுக்கல்லூரியில் வேலைவாய்ப்பு தரக்கூடிய நிகழ்ச்சி நடந்தது. அதில் முதலமைச்சர் கையால் நான் வேலை வாய்ப்பு ஆணையை பெற்றேன் என்று சொல்லும் போது, அவர்கள் எந்த அளவுக்கு மகிழ்ச்சியை அடைகிறார்களோ, இல்லையோ, நான் பல மடங்கு பெருமையை, மகிழ்ச்சியை அடைகிறேன்.
தமிழ்நாட்டு இளைஞர்களை, மாணவச் செல்வங்களை தகுதி, திறமை, அறிவு, ஆற்றல் படைத்தவர்களாக ஆக்குவது தான் திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படை நோக்கம் ஆகும். அதற்காகத் தான் நான் முதல்வன் என்ற ஒரு திட்டத்தை நாங்கள் ஏற்கனவே தொடங்கி இருக்கிறோம். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சியைத் தொடர்ச்சியாக வழங்கி வருகிறோம்.
வேலை இல்லை என்ற நிலையும் இருக்கக் கூடாது. வேலைக்கு திறமையான இளைஞர்கள் இல்லை என்ற நிலையும் இருக்கக் கூடாது என்று நான் உத்தரவிட்டிருக்கிறேன். அதே சமயத்தில் இந்தத் தருணத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நான் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். இதை சொல்கிறபோது கொஞ்சம் வேதனையோடு நான் குறிப்பிட விரும்புகிறேன். என்னவென்றால், இரண்டு நாளைக்கு முன்னால், சென்னையில் சத்யா என்ற ஒரு மாணவிக்கு நடந்த துயரத்தை அறிந்து நான் நொறுங்கி போயிருக்கிறேன்.
நான் மட்டுமல்ல, அதைப் படித்த, அறிந்த அத்தனை பேர்களுமே, நீங்கள் எல்லாம் துக்கத்தில் இருந்திருப்பீர்கள், துயரத்தை அடைந்திருப்பீர்கள். இது போன்ற சம்பவங்கள், இனி தமிழகத்தில் நிகழக்கூடாது, இதுவல்ல நாம் காண விரும்பக்கூடிய சமூகம். இனி எந்தப் பெண்ணுக்கும் இதுபோல, நடக்காமல் தடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. தங்கள் பிள்ளைகள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அறிவாற்றலிலும், தனித்திறமையிலும், சமூக நோக்க மனப்பான்மையும் கொண்டவர்களாக அவர்களை பெற்றோர்கள் வளர்க்க வேண்டும். பாடப் புத்தகக் கல்வி மட்டுமல்ல, சமூகக்கல்வி அவசியமானது.
தன்னைப்போலவே, பிற உயிரையும், மதிக்க, பாதுகாக்க கற்றுத்தர வேண்டும். நல்லொழுக்கமும், பண்பும் கொண்டவர்களாக, அவர்கள் வளர்ந்து, வாழ்ந்து இந்த சமூகத்துக்கான தங்கள் பங்களிப்பை வழங்கவேண்டும். அவர்கள் எந்தவகையிலும் திசை மாறி சென்று விடாதபடி வளர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு பெற்றோருக்குத்தான் இருக்கிறது. இயற்கையில், ஆண் வலிமையுடையவனாக இருக்கலாம்.
அந்த வலிமை அடுத்தவர்களை கட்டுப்படுத்துவதாக இருக்கக்கூடாது. பெண்களை பாதுக்காக்கக்கூடியதாக அந்த வலிமை இருக்க வேண்டும். சில இளைஞர்கள் என்னமாதிரியாக வளர்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. பள்ளி, கல்லூரிகளும், பெற்றோர்களும் சேர்ந்து இளைய சக்திகளை பாதுகாக்க அவர்களை எல்லாம் வளர்க்க வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
அப்படி பாதுகாக்கப்படும் இளைஞர் சக்திக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவது வேலைக்குத் தகுதியான இளைஞர்களை உருவாக்குவது என்ற சக்கரச் சுழற்சியுடன் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. வேலையின்மையும் இருக்கக் கூடாது. வேலை இழப்பும் இருக்கக் கூடாது என்று நான் உத்தவிட்டிருக்கிறேன்.
தொழில் துறையாக இருந்தாலும் சரி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையாக இருந்தாலும் சரி, ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. கடந்த ஓராண்டு காலத்தில் உருவாக்கப்பட்ட பல்வேறு தொழில் ஒப்பந்தங்களின் காரணமாக சுமார் 2 இலட்சம் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க இருக்கிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த பலன்களை நமது இளைஞர்கள் நிச்சயமாக அடைவார்கள்.
ஒவ்வொரு தனிமனிதருக்கும், நன்மை அளிக்கும் அரசாக இந்த திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. அதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையும் முக்கியமான பங்களிப்பை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இளைஞர்களிடம் பல்வேறு திறமைகளை உருவாக்குங்கள். திறமை பெற்ற இளைஞர்கள் அனைவருக்கும் தகுதியான வேலைகளை உருவாக்கித் தாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
வேலை வாய்ப்பைப் பெற்ற இளைஞர்கள், தங்களது தனித்திறமைகளை வளர்த்துக் கொண்டு தங்களுக்கு ஆர்வமான துறைகளில் உயர்வை அடைந்தாக வேண்டும். வேலை கிடைத்துவிட்டது என்று தேங்கிவிடாதீர்கள். எப்போதுமே தேங்கிய நீரானது, குட்டையாகி விடும். ஓடிக்கொண்டிருக்கக்கூடிய ஆறு தான் கடலை சென்றடையும். அத்தகைய கடலளவு சாதனைகளை நிகழ்த்தக்கூடியவர்களாக நமது இளைஞர்கள் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உங்கள் அனைவரையும், நெஞ்சார, மனதார வாழ்த்தி விடை பெறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.