கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த கேசவன் மகன் சிவபிரகாஸம். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னை மைலாப்பூரில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் துணிக்கடையில் ரூ.278 கொடுத்து உள்ளாடை வாங்கியுள்ளார். அவர் வாங்கிய உள்ளாடையின் பெட்டியில் அதிகப்பட்ச விலை ரூ.260 என குறிப்பிட்டிருந்தது.
இதுகுறித்து கேட்டபோது, கடையின் ஊழியர் முறையாக பதிலளிக்கவில்லை. இதையடுத்து சிவபிரகாஸம் தொடுத்த வழக்கின் விசாரணை சென்னை தெற்கு நுகர்வோர் குறைத்தீர் ஆணையத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைத்தீர் ஆணையத்தில் விசாரிக்கப்பட்டது. அப்போது ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி, ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் நிறுவனத்தில் நியாயமற்ற வர்த்தகம் நடைபெற்றுள்ளது. நிறுவனத்தில் சேவை குறைபாடும் உள்ளது.
எனவே, தமிழ்நாடு மாநில நல நிதிக்கு ரூ.2 லட்சமும், பாதிக்கப்பட்ட சிவபிரகாஸத்திற்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவுத் தொகையாக ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.