திருப்பூர் அருகேயுள்ள திருமுருகன் பூண்டியில் செயல்படும் விவேகானந்தா சேவாலயம் காப்பகத்தில் கெட்டுப்போன உணவைச் சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் நேற்று உயிரிழந்தனர். மேலும் 11 சிறுவர்களுக்குத் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து சமூக நலத்துறை இயக்குநரகம் சார்பிலும், திருப்பூர் மாவட்ட வருவாய்த் துறை மற்றும் குழந்தைகள் நலக் குழுமம் சார்பிலும் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு இன்று விசாரணை துவங்க உள்ளது. மேலும் தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி மணிவாசன் தலைமையில் கமிட்டி நியமிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து காப்பகத்தில் இன்று அமைச்சர்கள் மு.பே சாமிநாதன், கீதா ஜீவன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன், "காப்பகம் உரிய வசதி இல்லாமல் இருப்பதால் காப்பகம் மூடப்படும்" என தெரிவித்தார்.
இந்நிலையில், உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி தலா ரூ. 2 லட்சம் நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், ராக்கியாபாளையம் கிராமம், மஜரா திருமுருகன்பூண்டியில் செயல்பட்டுவரும் தனியார் குழந்தைகள் காப்பகத்தில் தங்கி கல்வி பயின்று வந்த மாணவர்களில், மாதேஷ் (15), பாபு ( 13) மற்றும் ஆதிஷ் (8) ஆகிய மூன்று சிறுவர்களும் காப்பகத்தில் உணவு உட்கொண்ட பின்னர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 6.10.2022 அன்று மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும்போது வழியிலேயே இறந்துவிட்டனர் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த துயருற்றேன்.
உயிரிழந்த பிள்ளைகளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். சிகிச்சையிலுள்ள சிறுவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி வழங்க அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் இரண்டு இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.