காமராஜர் 48 ஆவது நினைவு நாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்கே வழி காட்டிய மகத்தான தலைவர் காமராஜர். புதிய புரட்சிகரமான இந்தியாவை ஜனநாயக இந்தியாவை கட்டமைக்க தம்மை முழுமையாக ஒப்படைத்து கொண்டவர் மாமனிதர் காமராஜர். அவரின் நினைவு நாளில், சனாதன அரசியலை தமிழகத்தில் ஒரு நாளும் நுழைய விட மாட்டோம் என விசிக உறுதி ஏற்கிறது.
பயங்கரவாத அணுகுமுறை அரசியலை கொண்ட இயக்கம்தான் ஆர்.எஸ்.எஸ், கலாச்சார இயக்கம் என்ற போர்வையில் இயங்கி கொண்டிருக்கிறது.சகா என்கிற பெயரில் ஆயுத பயிற்சி வழங்குகிறார்கள், மக்களுக்கு தொண்டு செய்வதை விட வன்முறையை தூண்டி வருகிறது.
இந்து அல்லாதவர்களை அந்நியர்கள் என்கிற வெறுப்பை விதைக்கிறது. இது மிக ஆபத்தான அரசியல். இந்த ஆபத்தில் இருந்து தமிழகம் பாதுகாப்பாக இருந்தது. ஆனால் இப்போது தமிழ்நாட்டை குறிவைத்து விட்டனர். ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதாக அறிவித்த அன்று ஜனநாயக சக்திகள் மனித சங்கிலி போராட்டத்தை நடத்த அறிவித்தோம். ஆனால், காவல்துறை பொத்தாம் பொதுவாக யாருக்கும் அனுமதி இல்லை என கூறியது.
வரும் 11 ஆம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி திட்டமிட்டபடி நடைபெறும் என நம்புகிறோம். இந்த மண் காமராஜர் போன்றவர்களால் பண்படுத்தப்பட்ட மண். இந்த மண்ணில் சனாதன அரசியலுக்கு இடமில்லை என்பதை உணர்த்த இந்த அறப்போர் நடைபெறும். அனைத்து ஜனநாயக சக்திகளும் இதில் பங்கேற்க வேண்டும்" என்று கூறினார்.பின்னர் ஆர்.எஸ்.எஸ்.ஐ நேரு அழிக்க நினைத்ததாக எல்.முருகன் கூறியது குறித்து கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், "நேரு அவர்கள் ஒரு ஜனநாயக சக்தி, மனித நேயம் மிக்கவர். அவரே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை ஒழிக்க வேண்டும் என நினைத்தால், அது எவ்வளவு ஆபத்தான இயக்கம் என புரிந்து கொள்ளுங்கள். அதேபோல் சர்தார் வல்லபாய் பட்டேல் அவரது வாயால் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் வளர்வது ஆபத்து, அதனால் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என கூறி அந்த இயக்கத்திற்கு தடை விதித்தார்.காமராஜர் தூங்கி கொண்டிருந்த போது அவரை கொலை செய்ய முயற்சித்தார்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர். காந்தியை சுட்டு கொன்ற கும்பல் ஆர்.எஸ்.எஸ், அது தமிழ் நாட்டில் வாலாட்ட பார்க்கிறது என்றால், வாலை சுறுட்டிகொள்ள வேண்டும் என எச்சரிக்கிறோம்."
பின்னர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் அப்துல் கலாம் மற்றும் அம்பேத்கர் எந்த வர்ணத்தை சேர்ந்தவர்கள் என பாட புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு. பதிலளித்த அவர், "இப்படிப்பட்ட அருவருப்பான அநாகரிகமான அரசியல் மாணவர்கள் நெஞ்சில் விதைக்கப்படும் எனகிற கவலையால் தான் ஆர்.எஸ்.எஸ்.ஐ தமிழ்நாட்டில் வர விடகூடாது என கூறுகிறோம். தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸுக்கு வேலை இல்லை அவர்கள் பேரணி நடத்தக்கூடாது அதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆர்.எஸ்.எஸ் பேரணி குறித்து நீதிமன்றம் தீர்மானிக்க கூடாது, சட்ட ஒழுங்கை தீர்மானிக்கும் ஆற்றில் அரசுக்கு தான் உள்ளது. கொள்கை முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் அரசுக்குதான் உள்ளது. அரசு விரும்புகிறப்படி தான் மற்ற துறைகள் இயங்க வேண்டும்.
நீதி மறுக்கின்ற இடத்தில் தான் நீதிமன்றம் தன் அதிகாரத்தை செலுத்த வேண்டும். ஒரு பாசிச பயங்கரவாத வன்முறை இயக்கத்திற்கு பேரணி நடத்த அனுமதி தர வேண்டும் இல்லை என்றால், கண்டனம் வரும் என அரசை நீதிமன்றம் எச்சரிப்பது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை என தெரிவித்தார்.