ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தாசப்பகவுண்டன் புதூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். 35 வயதாகும் இவருக்கு திருமணம் செய்வதற்காக தரகர் மூலம் பெண் பார்த்துள்ளனர். அப்போது தஞ்சாவூர், அய்யம்பேட்டையை சேர்ந்த சரிதா என்ற பெண் இருப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும் சரிதா ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், அவரது பெற்றோர் இறந்து விட்டதாகவும் தரகர் மூலம் தெரியவந்தது.
இதையடுத்து சரவணன் குடும்பத்தினர் சரிதாவை பார்க்க தஞ்சாவூர் சென்று, அவர்களுக்கு பெண்ணை பிடித்துப்போக திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். பின்னர் பெண்ணின் பெரியம்மா என்று விஜயலட்சுமி என்ற பெண், திருமணத் தரகருக்கு 1 லட்சம் ரூபாய் கமிஷனாக கொடுக்க வேண்டும் என்று மாப்பிள்ளை வீட்டாரிடம் தெரிவிக்க, அவர்களும் வெளியில் 3 லட்ச ரூபாய் கடன் வாங்கி அவருக்கும் கொடுத்து திருமண செலவையும் பார்த்துக்கொண்டனர்.
பின்னர் கடந்த 20-ம் தேதி இருவருக்கும் ஒரு கோயிலில் வைத்து திருமணம் நடந்தது. இதையடுத்து இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். அப்போது ஒரு நாள், மனைவி சரிதாவின் மொபைலுக்கு வாட்சப்பில் ஒரு வாய்ஸ் மெசேஜ் வந்ததும் வாட்ஸப்பில் சென்று பார்த்துள்ளார் சரவணன். அதில் தனது பெரியம்மாவும் - சரித்தவும் வாய்ஸ் மெசேஜில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் ஆடியோ இருந்தது.
இதைக்கேட்டதும் தான் ஒரு மோசடி கும்பலிடம் சிக்கியிருந்தது தெரியவந்தது. மேலும் மனைவி என்று நம்பிய பெண் தன்னை ஏமாற்றியதும் தெரியவந்தது. இதையடுத்து தனது நண்பர்களை அழைத்து அவர்களிடம் விவரங்களை கூறி கையும் களவுமாக பிடித்து காவல்துறையில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.
அதன்படி தனது நண்பருக்கு பெண் பார்ப்பதாகவும், எதாவது பெண் இருந்தால் குருமாரும், தனது மனைவியிடம் கூறியுள்ளார். அவர் தனது பெரியம்மாவிடம் கூறி அவர் வேறொரு பெண்ணை அறிமுகம் செய்துள்ளார். பின்னர் அவரை இங்கே அழைத்து வர சரவணன் கூறியதையடுத்து விஜயலட்சுமி, அந்த பெண், தரகர் என அனைவரும் வந்துள்ளனர்.
அப்போது மனைவி உள்ளிட்ட அனைவரையும் கையும் களவுமாக பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.