தமிழ்நாட்டில் முதலமைச்சராக கடந்த மே மாதம் 7ம் தேதி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அன்றைய தினமே 'பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம்' என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு பெண்கள் வாழ்க்கையில் பொருளாதார புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இலவச பேருந்து பயணத் திட்டத்தால் இதுவரை 173 கோடி பெண்கள் பயனடைந்து உள்ளனர்.
தி.மு.க அரசின் இந்த மகளிருக்கான இலவச பேருந்து பயண திட்டம், பெண்கள் உட்பட பலராலும் பாராட்டப்பட்டது. அதேபோல் பெண்களை தொடர்ந்து திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது உதவியாளர்களும் நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இப்படி எல்லோருக்குமான திராவிட மாடல் அரசாக தி.மு.க அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் வேண்டும் என்ற தி.மு.க அரசின் திட்டங்களை விமர்சித்து வருகின்றனர்.
இன்று கூட பேருந்தில் "நான் ஓசியில் செல்ல மாட்டேன்" என மூதாட்டி ஒருவர் நடத்துனரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் மூதாட்டியை வைத்து அ.தி.மு.க-வின் ஐ.டி விங் இந்த வீடியோவை எடுத்தது என்ற உண்மை தெரியவந்துள்ளது.
இது குறித்து தி.மு.க செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டரில், "கோவை அதிமுக IT WING -ஐ சார்ந்த பிரித்திவிராஜ் என்பவர் தன் பக்கத்து வீட்டு துளசியம்மாள் என்கிற அ.தி.மு.க-வை சேர்ந்த மூதாட்டியை அழைத்து கொண்டு போய் TN 38 N 2841 எண் பேருந்தில் நடத்துனருடன் நான் ஓசியில் போக மாட்டேன் என பிரச்னை செய்ய வைத்து அதை வீடியோவாக பதிவு செய்து பரப்பி இருக்கிறார்" என தெரிவித்துள்ளார்.