சென்னை பட்டினப்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட சீனிவாசன் நகர் பகுதியில் சாலையில் நடந்து சென்ற முதியவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுச் சுருண்டு விழுந்துள்ளார். இதைப்பார்த் து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனே அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியிடம் தெரிவித்துள்ளனர்.
உடனே அவர் அந்த நபருக்கு முதலுதவி அளித்து ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளார். ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் அருகிலிருந்த ஆட்டோவில் முதியவரை ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு காவல் ஆய்வாளர் சேர்த்துள்ளார்.
உடனடியாக முதியவர் தக்க நேரத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டதால் தற்போது அவர் நலமுடன் உள்ளார். தக்க நேரத்தில் தனது பணியிலிருந்த பெண் ஆய்வாளர் உதவி செய்த மனிதநேயமிக்க செயலை பொதுமக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
கடந்த நவம்பர் மாதம் பெய்த பருவ மழையின் போது, சாலையின் ஓரம் மழை நீர் வடிகாலில் கிடந்த இளைஞர் ஒருவரை தன் தோளில் சுமந்து மருத்துவமனை வரை தூக்கிச் சென்றவர் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மனிதநேய செயலுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.