சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவருக்குச் சர்க்கரை ராஜா என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. அதிமுக ஆட்சியில் துணை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனது சித்தப்பாதா என சிவக்குமாரிடம் கூறியுள்ளார்.
இதற்கு ஆதாரமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்துடன் இருக்கும் படத்தில் அவரது மகன் படத்தை நீதி அதற்குப் பதில் சர்க்கரை ராஜா தனது படத்தை இணைத்து வைத்திருந்த படத்தைக் காட்டியுள்ளார்.
இந்த படத்தைப் பார்த்த ராஜாவும் இதை உண்மை என நம்பியுள்ளார். இதையடுத்து தனது மனைவிக்கு சத்துணவுத்துறையில் வேலை வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு சர்ச்சரை ராஜா ரூ. 6 லட்சம் கேட்டுள்ளார். பின்னர் மனைவிக்கு அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ரூ.6 லட்சத்தை அவரிடம் கொடுத்துள்ளார் சிவக்குமார்.
ஆனால் பல மாதங்கள் ஆகியும் சொன்னபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் கொடுத்த பணத்தை மீண்டும் சிவக்குமார் கேட்டுள்ளார். பின்னர் போலியான காசோலையைக் கொடுத்து சிவக்குமாரை ஏமாற்றியுள்ளார். இது குறித்து சிவக்குமார் கேட்டபோது 'உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது. பணம் தரமுடியாது. முடிந்ததைப் பார்த்துக்கொள்' என மிரட்டியுள்ளார் .
இதையடுத்து ஆட்சி மாற்றம் நடந்த பிறகு இது குறித்து சிவக்குமார் காவல்நிலையத்திலும், முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் புகார் கொடுத்துள்ளார். பின்னர் இந்த சம்பவம் குறித்து மாதவரம் காவல்துறையினர் புலன் விசாரணை செய்தனர்.
அப்போது சர்க்கரை ராஜா சிவக்குமாரைப் போன்று பல பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 1 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து சர்க்கரை ராஜாவைப் பிடிக்க போலிஸார் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.
மேலும் அரசு வேலைகளுக்குத் தேர்வுகள் நடத்தப்பட்டு பணிகள் நிரப்பப்படுகின்றன. எனவே இதுபோன்று பணம் கொடுத்து பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என போலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.