தமிழ்நாடு

“அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு” - சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவித்த 7 முக்கிய அறிவிப்புகள்!

மாநில அரசின் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத் தொகை, ஆகஸ்ட் - 15 ஆம் நாள் முதல், ரூபாய் 18 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

“அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு” - சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவித்த 7 முக்கிய அறிவிப்புகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“உத்திரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டைப் பராமரிக்க அரசு சார்பில் ரூபாய் 18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு அறிவிப்பில், ”அதனால்தான் தியாகத்தைப் போற்றுவதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்போதும் முன்னிலையில் இருந்து வருகிறது. நாட்டுப் பற்றில் திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் உறுதியாக இருந்து வந்துள்ளது.

1962-ஆம் ஆண்டு, சீன நாட்டால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டபோது, இந்திய நாட்டின் பாதுகாப்பே முக்கியம் என்று அறிவித்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்!

1971-ஆம் ஆண்டு இந்தியாவைப் பாகிஸ்தான் அச்சுறுத்தியபோது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாகிஸ்தான் படையெடுப்பு கண்டனத் தீர்மானம் போட்டவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்!

1972-ஆம் ஆண்டு பாகிஸ்தான் போரின்போது அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களிடம் நாட்டுப் பாதுகாப்புக்காக ஆறு கோடி ரூபாய் நிதி வழங்கியவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்!

“அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு” - சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவித்த 7 முக்கிய அறிவிப்புகள்!

அன்றைய நாள் அனைத்து மாநிலங்களும் வழங்கிய தொகை மொத்தம் ரூபாய் 25 கோடி! அதில் ரூபாய் 6 கோடியை வழங்கியது கலைஞர் ஆட்சி! அந்தப் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு நிதியும் நிலமும் வழங்கிய ஆட்சி கலைஞரின் ஆட்சி!

1999-ஆம் ஆண்டு கார்கில் போரின்போது, அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் முதல் தவணையாக, இரண்டாவது தவணையாக, மூன்றாவது தவணையாக என மூன்று தவணைகளாக மொத்தம் 50 கோடி ரூபாய் வழங்கிய ஆட்சி முதலமைச்சர் கலைஞரின் ஆட்சி!

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் 1,095 பேருக்கு மாதம்தோறும் தியாகிகளுக்கான நிதிக் கொடையை வழங்கி வருகிறோம். நாட்டுக்காகப் போராடிய தியாகிகளைப் போற்றும் வகையில் விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கும், அவர்கள் இறக்க நேரிட்டால், வாரிசுகளுக்கும் குடும்ப ஓய்வூதியம் அளிக்கக்கூடிய திட்டம் 1966 முதல் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்திய விடுதலையின் பவள விழா நிறைவிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் சில அறிவிப்புகளைத் தற்போது வெளியிடுவதில் பெருமையடைகிறேன். மாநில அரசின் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத் தொகை, ஆகஸ்ட் - 15 ஆம் நாள் முதல், ரூபாய் 18 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். குடும்ப ஓய்வூதியம் ரூபாய் 9 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

“அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு” - சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவித்த 7 முக்கிய அறிவிப்புகள்!

வீரபாண்டிய கட்டபொம்மனின் வழித்தோன்றல்கள், சிவகங்கை மருதுபாண்டியர் சகோதரர்களின் வழித்தோன்றல்கள், சிவகங்கை முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியின் வழித்தோன்றல்கள், வ.உ.சிதம்பரனார் வழித்தோன்றல்களுக்கான மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் 9 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

மற்றுமொரு மகிழ்ச்சியான அறிவிப்பையும் இந்த இனிய தருணத்தில் வெளியிட விரும்புகிறேன். ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக, மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப் படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1-7-2022 முதல் அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம், 16 இலட்சம் பேர் பயன்பெறுவர். அரசுக்கு ஆண்டுக்கு 1,947 கோடியே 60 லட்சம் ரூபாய் கூடுதலாகச் செலவாகும். இந்திய நாட்டின் தியாகிகளைப் போற்றிப் பாராட்டுவதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு யாருக்கும் சளைத்தது அல்ல!

“அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு” - சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவித்த 7 முக்கிய அறிவிப்புகள்!

பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மனுக்குக் கோட்டை!பாரதியின் இல்லம் அரசு இல்லமானது! பெருந்தலைவர் காமராசர் மணிமண்டபம்! மூதறிஞர் இராஜாஜி நினைவாலயம்! தில்லையாடி வள்ளியம்மை மணிமண்டபம்! வீரவாஞ்சியின் உறவினருக்கு நிதி! வ.உ.சி. இழுத்த செக்கு நினைவுச் சின்னமானது! விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு இலவசப் பேருந்து பயணம்!

தியாகிகள் மணிமண்டபம் விடுதலைப் பொன்விழா நினைவுச் சின்னம்! பூலித்தேவன் நினைவு மண்டபம்! தியாகி விஸ்வநாத தாஸ் வாழ்ந்த இல்லம் புதுப்பிப்பு! மாவீரன் சுந்தரலிங்கம் வாரிசுகளுக்கு வீடு! நேதாஜிக்கு சிலை! கக்கனுக்கு சிலை! சிப்பாய்க் கலகத்துக்கு நினைவுத்தூண்! - இப்படி நாட்டுக்காக உழைத்த தியாகிகளைப் போற்றுகின்ற இயக்கம்தான், திராவிட முன்னேற்றக் கழகம்!

கடந்த ஓராண்டுகாலத்தில் விடுதலைப் போராட்டத் தியாகிகளைப் போற்றும் ஏராளமான பணிகளைச் செய்துள்ளோம். விடுதலை நாளின் 75-ஆவது ஆண்டு பெருவிழாவைக் கொண்டாடும் வகையில் ஏராளமான விழாக்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டுள்ளன.

செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரைப் பெருமைப்படுத்தும் வகையில் 13 அறிவிப்புகளை வெளியிட்டேன். மகாகவி பாரதியார் மறைந்த நூறாண்டின் நினைவை முன்னிட்டு 14 அறிவிப்பினைச் செய்திருக்கிறேன். கடந்த ஆண்டு முழுவதும் பாரதியின் நினைவைப் போற்றும் விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன.

உத்திரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டைப் பராமரிக்க அரசு சார்பில் ரூபாய் 18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிண்டி காந்தி மண்டபத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலை அமைக்க ரூபாய் 18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மருது சகோதரர்கள் சிலை அமைக்க ரூபாய் 34 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

“அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு” - சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவித்த 7 முக்கிய அறிவிப்புகள்!

கடலூர் அஞ்சலை அம்மாள் சிலை வைக்க ரூபாய் 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவிடங்களில் ஒலி - ஒளி காட்சிகள் அமைத்திட நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. காந்தி மண்டபம், அருங்காட்சியகம், பெருந்தலைவர் காமராசர் மண்டபம், பெரியவர் பக்தவத்சலம் மண்டபம் ஆகியவற்றை மேம்படுத்த 3 கோடியே 36 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விடுதலைப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் அவர்களுக்கு திருப்பூர் மாவட்டத்தில் நினைவு மண்டபம் அமைக்க 2 கோடியே 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தியாகி ஈஸ்வரன் அவர்களுக்கு ஈரோடு மாவட்டத்தில் அரங்கம் அமைக்க 2 கோடியே 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் 260 ஆண்டு கால தொடர் பங்களிப்பு குறித்து, எதிர்கால இளம் சமுதாயம் அறிந்து கொள்ளும் வகையில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ‘விடுதலை நாள் அருங்காட்சியகம்’ ஒன்று சென்னையில் அமைக்கப்படும் என்பதைப் பெருமிதம் பொங்க, இவ்வரலாற்றுச் சிறப்புமிகு நாளில் தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்து, இங்கிருந்து நேராக எழும்பூர் செல்லும் நான் அங்கு அண்ணல் காந்தியடிகளின் சிலையைத் திறந்து வைக்க இருக்கிறேன். ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று விடுதலையை முன்பே கணித்துப் பாடிய பைந்தமிழ் தேர்ப்பாகன் மகாகவி பாரதியின் கனல் மூட்டும் வரிகளும் அத்தகைய அண்ணல் காந்திக்கும், தமிழ்நாட்டுக்குமான தொடர்பு என்பது அன்பாலும், பாசத்தாலும் மட்டுமல்ல, தமிழால் ஏற்பட்ட நட்பு!

banner

Related Stories

Related Stories