தமிழ்நாடு

விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான்.. வீரத் தமிழர்களின் பங்களிப்பை பறைசாற்றிய முதலமைச்சர்!

இந்தியத் துணைக்கண்டத்திலேயே விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான்.

விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான்.. வீரத் தமிழர்களின் பங்களிப்பை பறைசாற்றிய முதலமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சுதந்திர திருநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.8.2022) சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாரு :- நமது இந்திய நாடு, ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்றதன் 75-ஆவது ஆண்டு நிறைவு விழாவை நாம் இப்போது கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் பெற்ற விடுதலை இது! நமது வரலாறு எத்தனையோ தியாகிகளை, போராளிகளைக் கண்டிருக்கிறது! அத்தனை நெருப்பாறுகளையும் அகிம்சையால் கடந்த வரலாறு நம்முடையது! அதனால்தான் உலக அரங்கில் நாம் நெஞ்சு நிமிர்த்தி 'இந்தியர்கள்' என்று பெருமையோடு சொல்கிறோம்!

இந்தப் பெருமை என்பது, 'அகிம்சைப் பாதை' என்னும் அறவழியை நமக்குக் காட்டிய 'தேசத் தந்தை' அண்ணல் காந்தியடிகளையே சாரும்! அதனால்தான் முதலில் நாட்டு விடுதலைக்காகவும், பின்னர் சமூக விடுதலைக்காகவும் போராடிய தந்தை பெரியார் அவர்கள், மகாத்மா காந்தி அவர்கள் மதவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டபோது, இந்த நாட்டிற்கு 'காந்தி தேசம்' என்று பெயரிட வேண்டும் என்று கூறினார்.

விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான்.. வீரத் தமிழர்களின் பங்களிப்பை பறைசாற்றிய முதலமைச்சர்!

இன்று விடுதலை நாளில், நமது தேசியக் கொடியை ஏற்றும்போது, இந்த வரலாற்றையெல்லாம் நான் எண்ணிப் பார்க்கிறேன். அதேபோல், இந்திய ஒன்றியத்தில் உள்ள மாநில முதலமைச்சர்கள் அனைவருக்கும் தேசிய கொடி ஏற்றுகின்ற உரிமையைப் பெற்றுத்தந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களையும் இந்த நேரத்தில் நான் நினைவுகூர்கிறேன்.

"தாயின் மணிக்கொடி பாரீர் - அதைத்

தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!

பட்டொளி வீசிப் பறக்கும் மூவண்ணக் கொடிக்கு முதல் வணக்கம்! இன்று நம் கண் முன் பறக்கும் இந்தக் கொடியை அறிமுகப்படுத்தி, 1947-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அரசியல் நிர்ணய அவையில், உணர்ச்சிகரமான ஓர் உரையை, தீர்மானமாக முன்மொழிந்தவர் பண்டிதர் நேரு அவர்கள். அப்படித்தான் இம்மூவண்ணக்கொடி தேசியக்கொடி ஆனது.

அதேபோல், இந்தியா விடுதலை அடைந்தபோது, அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நள்ளிரவுப் பொழுதில், நாடாளுமன்றத்தில் அரசியல் நிர்ணய அவையின் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களிடம், இந்திய நாட்டின் பெண்கள் அனைவரின் சார்பாகவும் முதல் கொடியை வழங்கியவர் ஹன்ச மேத்தா! விடுதலை இந்தியாவின் முதல் கொடியை ஒரு பெண்மணிதான் வழங்கினார்.

அத்தகைய மூவண்ணக் கொடியை வணங்குவதன் மூலமாக நாட்டை வணங்குகிறோம். நாட்டு மக்களை வணங்குகிறோம். நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றும் ஒருமைப்பாட்டு விழுமியங்களை வணங்குகிறோம். மூவண்ணக் கொடிக்கு முன்பு அணி அணியாய் அணிவகுத்து நிற்கும் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்!

விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான்.. வீரத் தமிழர்களின் பங்களிப்பை பறைசாற்றிய முதலமைச்சர்!

75 ஆண்டுகளாக விடுதலைக் காற்றை சுவாசிக்கக் காரணமாக அமைந்த வீரத்தியாகிகள் அனைவருக்கும் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்தகைய தியாகிகளை ஈந்த அவர்தம் குடும்பத்தினர் வாழும் திசை நோக்கி வணங்குகிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, இந்திய நாட்டின் அனைத்து மக்களுக்கும் எனது விடுதலை நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாபெரும் கோட்டையின் கொத்தளத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றும்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் அடையும் மகிழ்ச்சி ஒருபக்கம் இருந்தாலும் - தமிழன் என்ற அடிப்படையில் அடையும் உணர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை. இந்த இந்தியத் துணைக்கண்டத்திலேயே விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான்.

1600-ஆம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் காலூன்றியது என்றால் 'ஒரு நெல் மணியைக் கூட உனக்கு கப்பம் கட்ட முடியாது' என்று 1755-ஆம் ஆண்டு சொன்னவன் நெல்கட்டாஞ்செவல் பூலித்தேவன்.

சிவகங்கைக்கு அருகிலுள்ள பனையூரைச் சேர்ந்த மண்டியிடாத மானப்போர் புரிந்த மாவீரன் கான்சாகிப் மருதநாயகம் கொல்லப்பட்ட ஆண்டு 1764.

'தானம் கேள் தருகிறேன், வரி என்று கேட்டால் தர மாட்டேன்' என்று சொன்ன மாவீரன்தான் கட்டபொம்மன். அவர் தூக்கிலிடப்பட்ட ஆண்டு 1799. தூக்குமேடைக்குச் செல்லும்போது கூட தன்னைக் காட்டிக் கொடுத்தவர்களைப் பார்த்து சிரித்தபடியே கட்டபொம்மன் சென்றதாக அன்றைய கவர்னர் எட்வர்ட் கிளைவ் அவர்களுக்கு தளபதி பானர்மென் எழுதிய கடிதம் சொல்கிறது.

கட்டபொம்மனின் மொத்தப் படைக்கும் தளபதியாக இருந்தவர் மாவீரன் சுந்தரலிங்கம். அவரது மாமன் மகள் வடிவு, தற்கொலைப் படைத்தாக்குதலை நடத்தியவர்.

விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான்.. வீரத் தமிழர்களின் பங்களிப்பை பறைசாற்றிய முதலமைச்சர்!

காளையார்கோவில் தாக்குதலில் கணவர் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டதும், சினம் கொண்ட வேங்கையாக வெளியேறி, தன்னைப் போன்ற விடுதலைத் தாகம் கொண்டவர்கள் அனைவரையும் அணிசேர்த்து விடுதலைப் படை அணி கட்டியவர் வீரமங்கை வேலுநாச்சியார். பிரிட்டிஷ் ஆட்சியின் வசம் இருந்த சிவகங்கையை எட்டு ஆண்டு போருக்குப் பின்னால் மீட்டு மீண்டும் ராணியாக அமர்ந்தவர் வேலு நாச்சியார்.

தனது உடையில் நெருப்பை வைத்துக் கொண்டு பிரிட்டிஷ் ஆயுதக் கிடங்கில் தாக்குதல் நடத்தியவர் குயிலி.

சின்னமருதுவும், பெரிய மருதுவும் பீரங்கிகளுக்கு முன்பு வளரியால் வாகை சூடியவர்கள். இவர்கள் வைத்திருந்த வளரிக்கு முன்னால் பீரங்கிகள் சரியும் என்று எழுதினான் பிரிட்டிஷ் அதிகாரி கர்னல் வெல்ஷ்! இது 1801-ஆம் ஆண்டு!

'சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை' என்று சொல்லி மறைந்து, இன்றும் வரலாற்றில் பெரும் மலையாக வாழ்பவர் தீரன் சின்னமலை. அந்த மாவீரன் தூக்குமேடைக்கு சென்ற ஆண்டு 1805!

அவரது போர்ப்படையிலும் ஒற்றர்படையிலும் செயல்பட்ட தளபதி பொல்லான் ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1806-ஆம் ஆண்டு வேலூர் கோட்டையில் பிரிட்டிஷ் ராணுவத்துக்கு பயம் என்றால் என்னவென்று காட்டப்பட்டது.

நான் சொன்னவை அனைத்தும் 1857-ஆம் ஆண்டுக்கு முன்பே நடந்தவை.

1857 சிப்பாய் புரட்சியைத்தான் முதலாவது இந்திய விடுதலைப் போர் என்று சிலர் சொல்கிறார்கள். அதற்கு முன்னால் தெற்கில், அதுவும் தமிழ்நாட்டில் நடந்தவைதான் இவை.

செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நின்று கொடியை ஏற்றும் போது தமிழனாக பெருமைப்படும், உணர்ச்சிவசப்படும் நிலை ஏற்படுவதற்கு இதுதான் காரணம்.

அடிமைப்படுத்துதல் என்று தொடங்கியதோ, அன்றைய நாளே விடுதலை முழக்கத்தை எழுப்பிய மண், நம்முடைய தமிழ் மண்!

''இருநூறு ஆண்டுகள் ஆடு போல் வாழ்வதைவிட இரண்டே நாட்கள் புலியாக வாழ்வது மேல்" என்று சொன்ன திப்பு சுல்தானின் தீரம் கொண்ட படைவீரர்களைக் கொண்டிருந்த மண், நம்முடைய தமிழ் மண்!

விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான்.. வீரத் தமிழர்களின் பங்களிப்பை பறைசாற்றிய முதலமைச்சர்!

வ.உ.சிதம்பரனார் செலுத்திய கப்பலும் - சுப்பிரமணிய சிவாவின் பேச்சும் - பாரதியின் பாட்டும் - ‘தமிழ்த்தென்றல்’ திரு.வி.க. நடத்திய பத்திரிகையும் - பெரியார் விற்ற கதர் ஆடைகளும் - செண்பகராமன் – வீர வாஞ்சி நாதன் போன்றோரது போராட்டங்களும் - பீரங்கியால் மார்பு பிளக்கப்பட்ட நிலையிலும் நெஞ்சுயர்த்தி நின்ற அழகு முத்துக்கோனின் வீரமும் - கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்று பாடிய காந்தியச் செம்மல் நாமக்கல் கவிஞரின் தமிழும் - தன் போராட்டங்களால் ஆங்கிலேய அரசை உலுக்கிய சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் ஆற்றலும் -

பகத் சிங்குக்கு அளிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைக் கண்டு கொதித்தெழுந்த, அவரது “நான் ஏன் நாத்திகன் ஆனேன்” நூலைத் தமிழில் மொழிபெயர்த்து தந்தை பெரியார் மூலமாக வெளியிட்டதற்காகச் சிறைக் கொடுமை அனுபவித்த பொதுவுடைமைப் போராளி தோழர் ஜீவாவின் தியாகமும் -

வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாகிரகமும், வெள்ளையனே வெளியேறு எனப் போராட்டக் களங்கள் கண்டு, கொல்கத்தா, வேலூர் என பல மாதங்கள் சிறையில் கழித்த கர்மவீரர் காமராசரின் நாட்டுப்பற்றும் - காந்தியின் ‘யங் இந்தியா’ இதழின் ஆசிரியராகப் பணியாற்றியதுடன், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதற்காக ஓராண்டுக்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்ட பொருளியல் அறிஞர் ஜே.சி. குமரப்பாவின் காந்தியப் பற்றும் –

அண்ணல் அம்பேத்கரோடு வட்டமேசை மாநாட்டில் பங்கேற்ற தாத்தா ரெட்டைமலை சீனிவாசனின் உழைப்பும்– இந்திய நாட்டின்மீதும், தமிழ் மொழியின் மீதும் கொண்டுள்ள பற்றில் இணையற்றவராகவும், அனைவருக்கும் எடுத்துக்காட்டாகவும் வாழ்ந்த கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் அவர்களின் வழிகாட்டுதலும் -

நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்துக்குத் தமிழ்நாட்டில் இருந்து பெரும்படையை அனுப்பி வைத்த பசும்பொன் ஐயா முத்துராமலிங்கம் அவர்களின் தீரமும் - உப்புச் சத்தியாகிரகம், சட்ட மறுப்பு இயக்கம் என தொடர்ச்சியாகப் போராட்டங்களில் ஈடுபட்டு சிறை ஏகிய ஐயா ஜமதக்னி அவர்களின் உணர்வும் - மூதறிஞர் இராஜாஜி நடத்திய பயணங்களும் -

திருப்பூர் குமரன் தூக்கிப் பிடித்த கொடியும் இணைந்ததுதான் இன்று நாம் சுவாசிக்கும் விடுதலைக் காற்று.

விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான்.. வீரத் தமிழர்களின் பங்களிப்பை பறைசாற்றிய முதலமைச்சர்!

அதனால்தான் தியாகத்தைப் போற்றுவதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்போதும் முன்னிலையில் இருந்து வருகிறது. நாட்டுப் பற்றில் திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் உறுதியாக இருந்து வந்துள்ளது.

1962-ஆம் ஆண்டு, சீன நாட்டால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டபோது, இந்திய நாட்டின் பாதுகாப்பே முக்கியம் என்று அறிவித்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்!

1971-ஆம் ஆண்டு இந்தியாவைப் பாகிஸ்தான் அச்சுறுத்தியபோது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாகிஸ்தான் படையெடுப்பு கண்டனத் தீர்மானம் போட்டவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்!

1972-ஆம் ஆண்டு பாகிஸ்தான் போரின்போது அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களிடம் நாட்டுப் பாதுகாப்புக்காக ஆறு கோடி ரூபாய் நிதி வழங்கியவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்!

அன்றைய நாள் அனைத்து மாநிலங்களும் வழங்கிய தொகை மொத்தம்

ரூபாய் 25 கோடி! அதில் ரூபாய் 6 கோடியை வழங்கியது கலைஞர் ஆட்சி!

அந்தப் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு நிதியும் நிலமும் வழங்கிய ஆட்சி கலைஞரின் ஆட்சி!

1999-ஆம் ஆண்டு கார்கில் போரின்போது, அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் முதல் தவணையாக, இரண்டாவது தவணையாக, மூன்றாவது தவணையாக என மூன்று தவணைகளாக மொத்தம் 50 கோடி ரூபாய் வழங்கிய ஆட்சி முதலமைச்சர் கலைஞரின் ஆட்சி!

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் 1,095 பேருக்கு மாதம்தோறும் தியாகிகளுக்கான நிதிக் கொடையை வழங்கி வருகிறோம்.

நாட்டுக்காகப் போராடிய தியாகிகளைப் போற்றும் வகையில் விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கும், அவர்கள் இறக்க நேரிட்டால், வாரிசுகளுக்கும் குடும்ப ஓய்வூதியம் அளிக்கக்கூடிய திட்டம் 1966 முதல் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்திய விடுதலையின் பவள விழா நிறைவிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் சில அறிவிப்புகளைத் தற்போது வெளியிடுவதில் பெருமையடைகிறேன்.

மாநில அரசின் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத் தொகை, ஆகஸ்ட் - 15 ஆம் நாள் முதல், ரூபாய் 18 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். குடும்ப ஓய்வூதியம் ரூபாய் 9 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் வழித்தோன்றல்கள், சிவகங்கை மருதுபாண்டியர் சகோதரர்களின் வழித்தோன்றல்கள், சிவகங்கை முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியின் வழித்தோன்றல்கள், வ.உ.சிதம்பரனார் வழித்தோன்றல்களுக்கான மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் 9 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

மற்றுமொரு மகிழ்ச்சியான அறிவிப்பையும் இந்த இனிய தருணத்தில் வெளியிட விரும்புகிறேன்.

ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக, மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப் படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1-7-2022 முதல் அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம், 16 இலட்சம் பேர் பயன்பெறுவர். அரசுக்கு ஆண்டுக்கு 1,947 கோடியே 60 லட்சம் ரூபாய் கூடுதலாகச் செலவாகும்.

இந்திய நாட்டின் தியாகிகளைப் போற்றிப் பாராட்டுவதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு யாருக்கும் சளைத்தது அல்ல!

விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான்.. வீரத் தமிழர்களின் பங்களிப்பை பறைசாற்றிய முதலமைச்சர்!

பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மனுக்குக் கோட்டை!

பாரதியின் இல்லம் அரசு இல்லமானது!

பெருந்தலைவர் காமராசர் மணிமண்டபம்!

மூதறிஞர் இராஜாஜி நினைவாலயம்!

தில்லையாடி வள்ளியம்மை மணிமண்டபம்!

வீரவாஞ்சியின் உறவினருக்கு நிதி!

வ.உ.சி. இழுத்த செக்கு நினைவுச் சின்னமானது!

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு இலவசப் பேருந்து பயணம்!

தியாகிகள் மணிமண்டபம்

விடுதலைப் பொன்விழா நினைவுச் சின்னம்!

பூலித்தேவன் நினைவு மண்டபம்!

தியாகி விஸ்வநாத தாஸ் வாழ்ந்த இல்லம் புதுப்பிப்பு!

மாவீரன் சுந்தரலிங்கம் வாரிசுகளுக்கு வீடு!

நேதாஜிக்கு சிலை!

கக்கனுக்கு சிலை!

சிப்பாய்க் கலகத்துக்கு நினைவுத்தூண்!

- இப்படி நாட்டுக்காக உழைத்த தியாகிகளைப் போற்றுகின்ற இயக்கம்தான், திராவிட முன்னேற்றக் கழகம்!

கடந்த ஓராண்டுகாலத்தில் விடுதலைப் போராட்டத் தியாகிகளைப் போற்றும் ஏராளமான பணிகளைச் செய்துள்ளோம்.

விடுதலை நாளின் 75-ஆவது ஆண்டு பெருவிழாவைக் கொண்டாடும் வகையில் ஏராளமான விழாக்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டுள்ளன.

செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரைப் பெருமைப்படுத்தும் வகையில் 13 அறிவிப்புகளை வெளியிட்டேன்.

மகாகவி பாரதியார் மறைந்த நூறாண்டின் நினைவை முன்னிட்டு

14 அறிவிப்பினைச் செய்திருக்கிறேன். கடந்த ஆண்டு முழுவதும் பாரதியின் நினைவைப் போற்றும் விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன.

உத்திரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டைப் பராமரிக்க அரசு சார்பில் ரூபாய் 18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிண்டி காந்தி மண்டபத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலை அமைக்க ரூபாய் 18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மருது சகோதரர்கள் சிலை அமைக்க ரூபாய் 34 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடலூர் அஞ்சலை அம்மாள் சிலை வைக்க ரூபாய் 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவிடங்களில் ஒலி - ஒளி காட்சிகள் அமைத்திட நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

காந்தி மண்டபம், அருங்காட்சியகம், பெருந்தலைவர் காமராசர் மண்டபம், பெரியவர் பக்தவத்சலம் மண்டபம் ஆகியவற்றை மேம்படுத்த 3 கோடியே

36 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விடுதலைப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் அவர்களுக்கு திருப்பூர் மாவட்டத்தில் நினைவு மண்டபம் அமைக்க 2 கோடியே 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தியாகி ஈஸ்வரன் அவர்களுக்கு ஈரோடு மாவட்டத்தில் அரங்கம் அமைக்க

2 கோடியே 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் 260 ஆண்டு கால தொடர் பங்களிப்பு குறித்து, எதிர்கால இளம் சமுதாயம் அறிந்து கொள்ளும் வகையில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ‘விடுதலை நாள் அருங்காட்சியகம்’ ஒன்று சென்னையில் அமைக்கப்படும் என்பதைப் பெருமிதம் பொங்க, இவ்வரலாற்றுச் சிறப்புமிகு நாளில் தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்து, இங்கிருந்து நேராக எழும்பூர் செல்லும் நான் அங்கு அண்ணல் காந்தியடிகளின் சிலையைத் திறந்து வைக்க இருக்கிறேன்.

ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று விடுதலையை முன்பே கணித்துப் பாடிய பைந்தமிழ் தேர்ப்பாகன் மகாகவி பாரதியின் கனல் மூட்டும் வரிகளும் அத்தகைய அண்ணல் காந்திக்கும், தமிழ்நாட்டுக்குமான தொடர்பு என்பது அன்பாலும், பாசத்தாலும் மட்டுமல்ல, தமிழால் ஏற்பட்ட நட்பு!

தென்னாப்பிரிக்காவில் இருந்த காந்திக்குத் துணையாக இருந்தவர்கள், தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த தமிழர்கள். தில்லையாடி வள்ளியம்மையின் தியாக உணர்வால் ஈர்க்கப்பட்டவர் காந்தி அவர்கள். முதன்முதலாக இந்தியா முழுக்க 1920-ஆம் ஆண்டு சுற்றுப்பயணம் வந்த காந்தி அவர்கள், தமிழ்நாட்டில் அதிக நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார். தனது வாழ்நாளில் 20 முறை தமிழகம் வந்தவர் அண்ணல் காந்தி அவர்கள். தமிழைக் கற்றுக் கொண்டார். தமிழில் கையெழுத்துப் போட்டார். திருக்குறளைத் தமிழில் எழுதிப் பார்த்தார். அவ்வை மூதாட்டியை "Avvai Mother" என்று அழைத்தார். இவை அனைத்திற்கும் மேலாக பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப் போகிறேன் என்பதை 1920-ஆம் ஆண்டு சென்னையில் வைத்துதான் காந்தி அவர்கள் இந்தியாவுக்கே அறிவித்தார்.

1946-ஆம் ஆண்டு சென்னையில் நடந்த விழாவில் பேசிய அண்ணல் காந்தி அவர்கள், அடுத்த ஆண்டு நாம் உண்மையான விடுதலை நாளைக் கொண்டாடிவோம் என்பதையும் இங்கிருந்துதான் இந்தியாவுக்கே அறிவித்தார். அவரது வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவான அரையாடை அணிவது என்பதையும் தமிழ்நாட்டில், குறிப்பாக, மதுரை மண்ணில் இருந்துதான் காந்தியடிகள் எடுத்தார்.

பாரீஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாக வந்தவரை மகாத்மா காந்தியாக மாற்றியது தமிழ் மண்.

1921-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் நாளன்று இந்த நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வு நடந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதன் அடையாளமாக சென்னை அருங்காட்சியகம் வளாகத்தில் காந்தியடிகளின் நினைவுச் சிலையை அமைத்துள்ளோம். அதனை திறந்து வைக்க இருக்கிறேன். இந்த நாட்டுக்கு திரும்பத் திரும்ப நினைவூட்ட வேண்டிய அடையாளங்களில் ஒருவராக அண்ணல் காந்தியடிகள் இருக்கிறார்கள்.

எளிமை - இனிமை - நேர்மை - ஒழுக்கம் - மனித நேயம் - மதச்சார்பின்மை - சமத்துவம் - சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளமாக இருக்கிறார் அண்ணல் காந்தி அவர்கள். இன்றைக்கு நாட்டுக்கு அவசிய, அவசரமான கொள்கைகள் இவைதான். இத்தகைய அனைத்து மனிதநேயக் கொள்கைகளும் கொண்ட "திராவிட மாடல்" ஆட்சியைத்தான் நாம் நடத்தி வருகிறோம்.

சமூகநீதி - சமத்துவம் - சுயமரியாதை - மொழிப்பற்று - இன உரிமை - மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் அடித்தளத்தில் நிற்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். அந்த அடிப்படையில்தான் ஆட்சியும் அமைந்துள்ளது. வளர்ச்சி என்பதும் இதனை அடிப்படையாகக் கொண்டதாக அமைய வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறோம்.

விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான்.. வீரத் தமிழர்களின் பங்களிப்பை பறைசாற்றிய முதலமைச்சர்!

தொழில் வளர்ச்சி - சமூக மாற்றம் - கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம் - கல்வி - சமூகம் - சிந்தனை - செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒருசேர வளர வேண்டும். அதுதான் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் காணவிரும்பிய வளர்ச்சி. அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி!

கடந்த ஓராண்டு காலத்தில் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சியை நீங்கள் பார்த்தால், அது ஒரே ஒரு துறை வளர்ச்சியாக இல்லாமல் பல்துறை வளர்ச்சியாக அமைந்திருக்கும்.

பெண்கள் அனைவர்க்கும் கட்டணமில்லாப் பேருந்து வசதி தரப்பட்டுள்ளதன் மூலமாக பெண்களின் சமூகப் பங்களிப்பும், பொருளாதார விடுதலையும் தமிழ்நாட்டில் அதிகமாகி இருக்கிறது.

ஓராண்டு காலத்தில் 153 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஏராளமாகத் தொடங்கப்பட்டுள்ளதன் மூலமாகத் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பெருகி இருக்கிறது. ஏற்றுமதி, இறக்குமதி அதிகமாகி இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது.

வேளாண்மைத் துறைக்காக தனி நிதிநிலை அறிக்கையைத் தந்தோம். வேளாண்மைக்கு கொடுத்த முக்கியத்துவத்தின் மூலமாக பாசனப் பரப்பு அதிகமாகி உள்ளது. இதன் மூலமாக விளைச்சல் அதிகமாகி உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பெருகி வரும் மழையும் நமது நல்லாட்சிக்கு நற்றுணையாக இருக்கிறது.

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் மூலமாக இலட்சக்கணக்கான குழந்தைகள் மீண்டும் கல்வி நிலையங்களை நோக்கி வரக்கூடிய கல்விப் புரட்சியை நிகழ்த்திக் காட்டி இருக்கிறோம்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக ஏழை எளிய கிராமப்புற மக்களுக்கு அவர்களது வீட்டைத் தேடிச் சென்று உயர்தர மருத்துவத்தை வழங்கி வருகிறோம். இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டமானது மரணத்தைத் தொடும் மக்களைக் காப்பாற்றும் மகத்தான திட்டமாக அமைந்திருக்கிறது.

எனது கனவுத் திட்டங்களில் ஒன்றுதான் நான் முதல்வன் திட்டம்! தமிழ்நாட்டு இளைஞர்கள் அனைவரையும் கல்வியால், அறிவால், ஆற்றலால், தனித்திறமையால் 'நான் முதல்வன்' என்று ஒவ்வொருவரையும் தலை நிமிர்ந்து செல்ல வைக்கும் திட்டம் ஆகும். கல்லூரிக் கனவு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு விழாவை உலகமே வியக்கும் வகையில் நடத்திக் காட்டி இருக்கிறோம்.

இதேபோன்ற விளையாட்டுப் போட்டிகளில் உலக அளவில் பங்குபெறும் வீரர்களையும், வீராங்கனைகளையும் தமிழகத்தில் தயாரித்து வருகிறோம். அதற்காக ஒலிம்பிக் வேட்டை நடந்து வருகிறது.

புத்தக எழுத்தாளர்கள், அறிஞர்கள், பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடையும் வண்ணம் அறிவின் துறையானது செழிப்படைந்து வருகிறது.

ஆலயங்களில் அன்னைத் தமிழ் மட்டுமல்ல, தகுதியுள்ளவர் அனைவரும் அர்ச்சகராகும் சமூகநீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. 2500 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை இந்த ஓர் ஆண்டில் மீட்டுள்ளோம்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அனைத்துத் தொகுதிக்கும் சென்று பெற்ற மனுக்களில் நடைமுறைக்கு சாத்தியமான மனுக்களில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிக் கொடுத்துள்ளோம்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதலமைச்சரின் முகவரி திட்டத்தின் மூலமாக சாதாரண, சாமானிய மக்கள் அனைவரின் கோரிக்கையும், என்னை வந்தடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற தனித்துறை உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு தனிமனிதனின் கோரிக்கையையும், செயல்படுத்தித் தரும் மனிதனாக நான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்கான முயற்சியில்தான் என்னை நான் நித்தமும் ஈடுபடுத்தி வருகிறேன்.

ஏழை எளிய மக்களின் தேவைகளை உணர்ந்து, அவர்கள் கேட்பதற்கு முன்னதாகவே அவற்றை நிறைவேற்றித் தரும் அரசாகத் திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டு வருகிறது. நீண்ட காலமாக தீர்க்கப்படாத கோரிக்கைகளை, மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் முன்னுரிமை கொடுத்து தீர்க்க வேண்டும் என்பதுதான் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் நோக்கமாகும்.

விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான்.. வீரத் தமிழர்களின் பங்களிப்பை பறைசாற்றிய முதலமைச்சர்!

இது அனைத்துத் தொகுதிக்கும் சேர்த்து அறிவிக்கப்பட்டுள்ள திட்டம்தான். ஆளும் கட்சி வென்ற தொகுதி, எதிர்க்கட்சி வென்ற தொகுதி என்ற பாகுபாடு எங்களுக்கு இல்லை. தமிழ்நாடு முதலமைச்சர் என்ற வகையில் அனைத்துத் தொகுதியும் எனது தொகுதிதான். அனைத்து மக்களின் அரசாகத்தான் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. உலக விளையாட்டுப் போட்டியை நடத்துவது முதல், ஒரே ஒரு இளைஞர் கூட போதைப் பொருளுக்கு அடிமையாகக் கூடாது என்பது வரை எங்கள் முன்னால் வரும் அனைத்துக் காரியங்களையும் கண்ணும் கருத்துமாக கவனித்துச் செயல்படுத்தி வருகிறோம்.

இதற்குக் காரணம், நான் மக்களோடு மக்களாக வளர்ந்தவன். மக்களால் வளர்க்கப்பட்டவன். மிகச் சிறுவயதில் இருந்தே, பள்ளிப் பருவ காலத்தில் இருந்தே, அரசியல் ஈடுபாடு கொண்டு, என்னைப் பொதுவாழ்க்கையில் ஒப்படைத்துக் கொண்டவன் நான். பொதுப்பணிகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொண்டவன் நான்.

இன்றைக்கும் சிறு பிரச்னையாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட அமைச்சருக்கோ, அதிகாரிகளுக்கோ, முதலில் தொடர்பு கொண்டு கேட்கும் அளவுக்குச் செயல்பட்டு வருகிறேன். இயற்கைப் பேரிடர் எங்கு நடந்தாலும் உடனடியாக நீண்டு காக்கும் கரம் என்னுடைய கரமாக இருக்கும். பதவியைப் பதவியாக இல்லாமல், பொறுப்பாக உணர்ந்து, பொறுப்போடு செயல்பட்டு வருகிறேன்.

இந்தப் பொறுப்பை எனக்கு வழங்கிய தாய்த் தமிழ்நாட்டு மக்களுக்கு என்றும் நான் உண்மையாக இருப்பேன் என்பதை வானத்தை நோக்கிப் பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக் கொடியின் நிழலில் நின்று உறுதி எடுத்துக் கொள்கிறேன்.

குமரி முதல் இமயம் வரை பரந்து விரிந்த இந்திய நாட்டின் மக்கள் அனைவரும் தங்களுக்குள் இருக்கக்கூடிய வேற்றுமைகளை மறந்து ஒரு தாய் மக்களாக உணர்ந்து பாடுபட்டதால்தான் கிடைத்தது இந்த விடுதலை. ஒற்றுமையால் கிடைத்த விடுதலையை அதே ஒற்றுமை உணர்வால்தான் காக்க முடியும்.

தேசியக் கொடியின் நிறம், மூன்றாக இருந்தாலும் அது ஒரே அளவோடு ஒன்றிணைந்து காணப்படுகிறது. அது போல, பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும் ஒன்றிணைந்து வாழ்வதே இந்தியாவைக் காக்கும். வெளிப்புற சக்திகளின் தாக்குதலை வெல்ல வேண்டுமானால், உள்புற ஒற்றுமை என்பது மிகமிக அவசியம். இதுதான் உயிரைக் கொடுத்து இந்திய விடுதலைக்காக பாடுபட்ட உத்தமர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.

75 ஆண்டு கால விடுதலை இந்தியாவின் வரலாற்றை, மேல் நோக்கி நகர்த்துவதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஒற்றுமை உணர்வோடு வாழ்வோம். அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு பெற்ற மாநிலங்களின் மூலமாக ஒன்றிய இந்தியாவை வளப்படுத்துவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories