கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை நாகேஷ் லே அவுட் பகுதியில் கடந்த சனிக்கிழமை நண்பர்கள் சிலர், தனது நண்பன் சக்திவேல் சாலையில் அடிபட்டதாக கூறி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே காவல்துறையும் மருத்துவமனைக்கு வந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சக்திவேல் கடந்த இரு தினங்களுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், அவரது நண்பர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவரது நண்பர்களே அவரை சரமாரியாக அடித்துள்ளது தெரியவந்தது.
அதாவது சம்பவத்தன்று சக்திவேல் உட்பட 5 நண்பர்கள் மது அருந்தியுள்ளனர். அப்போது இறந்துபோன சக்திவேல் அணிந்திருந்த கூலிங் கிளாஸை அவரது சக நண்பர்களில் இரண்டு பேர் கேட்டுள்ளனர். ஆனால் சக்திவேலோ கண்ணாடியை தர மறுத்துள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரமடைந்த நண்பர்களில் 2 பேர் சக்திவேலை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த சக்திவேலை ஓசூர் சாலை விபத்தில் காயமடைந்ததாக கூறி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதையடுத்து தற்போது காவல்துறை விசாரணையில், சக்திவேலின் மற்ற இரு நண்பர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சக்திவேலை தாக்கிய நண்பரகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஒரு கூலிங் கிளாஸுக்காக நண்பனை சரமாரியாக தாக்கி, சாலை விபத்தில் அடிபட்டதாக கூறி மருத்துவமனையில் சேர்த்த நண்பர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.