குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஈஷ்வர்பாய் பிமானி. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மகன் சச்சின் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மித்தல் என்பவருக்கும் திருமணமானது. தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்த நிலையில், ஒருநாள் பால் கறக்கும் மின்கருவி மூலம் இவர், தன் வீட்டு தொழுவத்தில் பால் கறந்துகொண்டிருந்த சச்சின் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதையடுத்து தனது மாமியார், குழந்தைகள் உள்ளிட்டோருடன் மித்தாலி வாழ்ந்து வந்துள்ளார்.
கணவருடன் குடும்பமாக வாழ வேண்டிய வயதில் இப்படி ஆகி விட்டதே என்று தனது மருமகளை குறித்து மாமியார் ஈஷ்வர்பாய் கவலை கொண்டார். எனவே ஒரு மகனை தத்தெடுத்து தனது மருமகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் மாமியார். இது குறித்து மித்தாலியிடம் கூறியபோது முதலில் மறுப்பு தெரிவித்த அவர், மாமியார் குழந்தைகளுக்காக ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து தத்தெடுக்க மகனை தேடிய மாமியாருக்கு அவரது சமூகம், உறவினர்கள் என்று அனைவரும் உறுதுணையாக இருந்தனர். அவர்கள் உதவியோடு 35 வயதான யோகேஷ் என்பவரை தத்தெடுக்க முடிவு செய்தனர். இதையடுத்து யோகேஷின் பெற்றோர்கள் சம்மதத்துடன் யோகேஷை மகனாக தத்தெடுத்துள்ளார் ஈஷ்வர்பாய்.
பின்னர் யோகேஷ் மற்றும் மித்தலுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் ஆகும் நிலையில், தனது இல்லற வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக யோகேஷ் தெரிவித்துள்ளார். மாமியார் - மருமகள் மத்தியில் தனது மருமகளுக்காக ஒரு மகனை தத்தெடுத்து திருமணம் செய்து வைத்துள்ள மாமியாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.