16 வயது சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரத்தில் தனியார் (சுதா) மருத்துவமனை மீது புகார் எழுந்ததைத் தொடர்ந்து தமிழக அரசு மருத்துவமனை செயல்பட தடை விதித்தது. இதனை தொடர்ந்து நீதிமன்றம் சென்ற மருத்துவமனை நிர்வாகம் தடைக்கு விலக்கு பெற்று மருத்துவமனையை இயக்கி வந்தது.
இந்த நிலையில், நேற்று மாலை சென்னை உயர்நீதிமன்றம் மருத்துவமனையை சீல் வைத்து மூட உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இன்று மாலை மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் பிரேம குமாரி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் மருத்துவமனைக்கு வந்திருந்து அங்குள்ள ஸ்கேன் மையங்களுக்கு சீல் வைத்தனர்.
மேலும், அவசர சிகிச்சை பிரிவில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களை நாளை ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்குள் வெளியேற்றுமாறும் உத்தரவு பிறப்பித்தனர்.
இது குறித்து மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் பிரேம குமாரி செய்தியாளர்களிடம் பேசும் போது, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி மருத்துவமனையின் ஸ்கேன் மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை வெளியேற்ற நாளை மதியம் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், திங்கட்கிழமை முதல் மருத்துவமனையின் அனைத்து சிகிச்சை பிரிவுகளும் மூடப்பட்டு மருத்துவமனை முழுவதும் இயங்க கடை விதிக்கப்படும் என்றும் கூறினார்.
40 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த மருத்துவமனை முழுமையாக இயங்க தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.