திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (70). கடந்த 2 மாதங்களுக்கு முன்னர், இவரது மனைவி காலமானார். இவரது துக்க நிகழ்ச்சிக்கு வெளியூர்களில் இருந்து வந்த இவரது உறவினர்கள், மரியாதை செலுத்தி நிகழ்ச்சி முடிந்ததும் புறப்பட்டுவிட்டனர்.
அப்போது, கருப்பையா வீட்டிலிருந்து சுமார் 48 பவுன் நகைகள் காணாமல்போனது. பின்னர் இது தொடர்பாக முத்துப்பேட்டை காவல்நிலையத்தில் புகாரளித்திருந்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்களது உறவினர்களிடம் நடைபெற்ற விசாரணையில், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கருப்பையாவின் தம்பி குடும்பத்தின் மீது காவல்துறையினருக்கு வலுத்த சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவர்களிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது கருப்பையாவின் தம்பி மகளான கெளசல்யா (22), தான் தான் அந்த நகைகளை எடுத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து கெளசல்யாவிடம் இருந்த 28 பவுன் நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு, அவரை கைது செய்து திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவர் எதற்காக திருடினார்? இந்த திருட்டில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொந்த பெரியம்மா இறந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்ற இளம்பெண், அங்கேயே 48 பவுன்களை திருடியுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.