கோவை மாவட்டம் சூலூரில் கடந்த வாரம் மார்க்கெட் ரோடு பகுதியில் தனியாக இருந்த பெண்ணின் வீட்டு பூட்டை உடைத்து அங்கிருந்த 2 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல் நிலையம் வந்து அந்த பெண் கதறி அழுது புகார் கொடுத்துச் சென்றார். மேலும் கடந்த காலங்களில் நடந்த வீட்டை உடைத்து திருடிய வழக்குகளும் கவனிக்கப்படாமல் இருந்தது.
இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனி கவனம் செலுத்த கருமத்தம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆனந்த் ஆரோக்கியராஜுக்கு உத்தரவிட்டதைத் தொடந்து, சூலூர் காவல் ஆய்வாளர் மாதைய்யன், உதவி ஆய்வாளர்கள் நவநீதகிருஷ்ணன், ராஜேந்திரபிரசாத் தலைமையில் தனிப்படை அமைத்து வீடு புகுந்து திருடும் கொள்ளையர்களைத் தேடி வந்தனர்.
சூலூரில் நடந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டும் விசாரணை நடத்திய போலிஸார் முத்துக்கவுண்டன் புதூர் பகுதியில் பதுங்கி இருந்த சூலூரைச் சேர்ந்த மருதாசலம் (36) என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் கணபதி கோவில் தோட்டம் பகுதியைச் சேர்ந்த நட்டூரான் என்ற நடராஜன் (49) மற்றும் சிவானந்தா காலனியைச் சேர்ந்த சதீஷ்குமார் (37) ஆகியோர் கூட்டணி அமைத்து கொள்ளையடித்தது தெரியவந்தது.
இந்நிலையில், சூலூர், பெரிய குளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தனிப்படை போலிஸார் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர். அவர்கள் சூலூரில் நடந்த குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய நட்டூரான் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து, 3 பேரிடம் தனிப்படை போலிஸார் விசாரணை நடத்தயதில் பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் தெரிய வந்தது. இதில் முக்கிய குற்றவாளியான நட்டூரான் என்கின்ற நடராஜன் மீது கோவையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் திருட்டு வழக்கு உள்ளது.
14 வயதில் திருட்டு தொழிலைத் தொடங்கிய நட்டூரான் தற்போது 51 வயதில் 80 திருட்டு வழக்குகளுடன் மீண்டும் திருடி வருவது விசாரணையில் தெரியவந்தது. திருட்டு வழக்கில் சிறையில் இருந்தபோது சூலூரைச் சேர்ந்த மருதாசலத்துடன் தொடர்பு ஏற்பட்டு தனது திருட்டை சூலூர் பகுதிகளலும் அரங்கேற்றியுள்ளனர். கொள்ளையன் நட்டூரான் தற்போது பெரிய கோடீஸ்வரராக இருந்தும் திருட்டுத் தொழிலைத் தொடர்ந்து வருகிறார்.
திருடி சேகரித்த பணத்தில் பல்வேறு பகுதிகளில் வீ்டுமனைகள் வாங்கி முதலீடு செய்துள்ளார். சூலூர், காங்கேயம்பாளைம், மார்க்கெட்ரோடு, சூலூர் நீதிமன்றம் முன் நடந்த நகைபறிப்பு மற்றும் பல்லடம், செட்டிபாளையம் , அன்னூர் காவல் நிலையங்களில் திருடிய 35 பவுன் நகைகள் மற்றும் 1 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்த போலிஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.