நாம், காதல், தன்பாலின திருமணங்களை பார்த்திருக்கிறோம். ஏன், பொம்மையை திருமணம் செய்த நபர்களைபற்றிகூட கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் தன்னைதானே ஒருவர் திருமணம் செய்து கொள்வதைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறோமா?. ஆனால், குஜராத்தில் இப்படி ஒரு திருமணம் ஜூன் 11ம் தேதி நடைபெற உள்ளது.
வதோதராவைச் சேர்ந்த இளம் பெ ஷாமா பிந்து என்பவர்தான் இந்த முடிவை எடுத்துள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இவருக்கு ஆண்களைத் திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லை. ஆனால் திருமண மேடையில் மணப்பெண்ணாக இருக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.
இதனால் திருமணத்திற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளுடன் ஜூன் 11ம் தேதி தன்னைத்தானே உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ளபோகிறார். இதற்காக பத்திரிக்கை அடித்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்து வருகிறார்.
இந்த திருமணம் குறித்துக் கூறிய ஷாமா பிந்து," ஆண்கள் யாரையும் எனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை. ஆண்கள், பெண்கள் தங்கள் நேசிப்பவர்களை திருமணம் செய்து கொள்கின்றனர்.
நான் என்னை மட்டும்தான் நேசிக்கிறேன். அதனால் என்னை நானே திருமணம் செய்து கொள்கிறேன். இப்படி ஒரு திருமணம் இதற்கு முன்பு எங்காவது நடந்துள்ளதா என்று இணையத்தில் தேடிப்பார்த்தேன். ஆனால் அப்படி ஒரு தகவலும் எனக்கு கிடைக்கவில்லை.
இதனால் தன்னைத்தானே திருமணம் செய்து கொள்ளும் முதல் நபராக நான் இருக்கலாம். எனது திருமணத்தைப் பலரும் எதிர்க்கலாம். இது என்ன முட்டாள் தனம் என்று கூட நினைக்கலாம். எனது பெற்றோர்கள் இந்த திருமணத்திற்குச் சம்மதம் கொடுத்து வாழ்த்தியுள்ளனர். திருமணத்தை முடித்து தேனிலவுக்கு கோவா செல்கிறேன்” என தெரிவித்துள்ளார்.