இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோவில் பெயரை பயன்படுத்தி, இணையதளம் மூலம், ரூ.50 லட்சம் பணம் வசூல் செய்த ‘இளைய பாரதம்’ யூடியூப் சேனல் நிர்வாகி கார்த்திக் கோபிநாத் என்பவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சிறுவாச்சூர் திருக்கோயில் பெயரை வைத்து 50 லட்ச ரூபாய் வரை பணம் வசூல் செய்த மோசடி செய்ததாக வந்த புகாரின் படி, இந்து சமய அறநிலையத்துறை கார்த்திக் கோபிநாத்துக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கியிருந்தது.
இந்நிலையில், ஆவடி மிட்டனமல்லியில் உள்ள ஸ்டுடியோவில் வைத்து யூடுபார் கார்த்திக் கோபிநாத்தை ஆவடி காவல் ஆனையராக உள்ள மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் மற்றும் உதவி ஆணையர் கந்தக்குமார் ஆகியோர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கார்த்திக் கோபிநாத் தனது சொந்த செலவில் சிலைகளை சீரமைத்து தருகிறேன் என அறநிலையத்துறைக்கு விண்ணப்பம் வழங்கிவிட்டு, பொது மக்களிடம் நன்கொடை வசூல் செய்தது விசாரணையில் தெரியவந்தது. பா.ஜ.க ஆதரவாளரான கார்த்திக் கோபிநாத், ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க எம்.பி., மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களுடன் இருந்த புகைப்படம் வெளியானது.
மேலும் இவர் நடத்தி வரும் யூடியூப் சேனலில், பா.ஜ.கவுக்கு ஆதரவான கருத்துக்களை, மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, மத மோதல்களை தூண்டிவிடும் வகையில், வீடியோவில் வன்மக்கருத்துகளை கார்த்திக் கோபிநாத் பேசி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், சிறுவாச்சூர் கோயில் சிலைகளை ஒரு மத அமைப்பினர் சேதப்படுத்தியாகவும், அந்த கோவிலை சீரமைக்கப்போவதாகவும் கூறி, கோயில் பெயரில் பணம் வசூல் செய்ததாகவும் இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு ஊடங்களில் கசிய தொடங்கியதுமே, ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதுகுறித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலையிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது பேசிய அண்ணாமலை, “இந்த கார்த்திக் கோபிநாத் யார்?. ஒரு தேசிய கருத்தை பேச கூடிய ஒரு மனிதன் என்று வைத்துக்கொள்ளலாம். அவருக்கும் அண்ணாமலைக்கும் என்ன சம்பந்தம்? சிறுவாச்சூர் கோயிலை புனரமைப்பதற்கான வசூலிக்கப்பட்ட பணத்திற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” என கேள்வி எழுப்பினர்.
ஆனாலும் பத்திரிக்கை சந்திப்பில் அண்ணாமலை பொய்யான தகவலை கூறுவதாகவும், கார்த்திக் கோபிநாத்துக்கும் அண்ணாமலைக்கும் தொடர்பு இருப்பதாக பலரும் குற்றம் சாட்டி, அண்ணாமலையிடம் விசாரணை செய்யவேண்டும் என கோரிக்கையையும் வைத்திருந்தனர்.
இந்நிலையில், “என்ன சம்பந்தம் ?, என்ன சம்பந்தம்?” என கேள்வி எழுப்பிய, இதே அண்ணாமலைதான் இன்று அந்தர் பல்டி அடித்துள்ளார். அதாவது, கார்த்திக் கோபிநாத் கைது குறித்து ட்விட்டரில் கருத்துத்தெரிவித்து வசமாக சிக்கியுள்ளார். இதுதொடர்பான அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி, கார்த்திக் கோபிநாத்தை கைது செய்துள்ளதாகவும், கார்த்திக் கோபிநாத்துக்கு ஆதாரவாக பா.ஜ.கவின் சட்டக் குழுவினர் உதவி செய்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.
‘முதலில் யாரென்றே தெரியாது என்று சொன்ன நபருக்கு தங்கள் கட்சியின் சட்டக்குழுவை அனுப்புகிறார்கள் என்றால் விஷயம் கொஞ்சம் பெரியதுதான் போல’ என அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக விசாரணையை முழுமையான நடத்தி, இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய புள்ளிகள் பலரும் சிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.