தமிழ்நாடு

“நாவடக்கத்துடன் நாகரீக அரசியலை கற்றுக் கொள்ளுங்கள்” : அண்ணாமலைக்கு பாடம் புகட்டிய பத்திரிகையாளர் மன்றம்!

ஊடகங்களை தொடர்ந்து இழிவுப்படுத்தும் பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

“நாவடக்கத்துடன் நாகரீக அரசியலை கற்றுக் கொள்ளுங்கள்” :  அண்ணாமலைக்கு பாடம் புகட்டிய பத்திரிகையாளர் மன்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஊடகங்களை தொடர்ந்து இழிவுப்படுத்தும் பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சென்னை பத்திரிகையாளர் மன்ற இணைச் செயலாளர் பாரதிதமிழன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று (27-05-2022) மாலை சென்னையில் செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருக்கிறார் பா.ஜ.க தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை.

ஊடகவியலாளர் ஒருவரின் கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் தன் நிதானத்தை இழந்த அண்ணாமலை, கேள்வி கேட்டவரைப் பார்த்து, அறிவாலயத்தில் இருந்து 200 ரூபாய் கிடைத்துவிடும் என்று ஆரம்பித்து, திடீர் ஏலதாரராய் மாறிப் போய்க் கொண்டே 3000 ரூபாய் என்று அவதூறான வகையில் பேசியிருக்கிறார் அண்ணாமலை.

ஊடகவியலாளர் கேள்வியை எதிர்கொள்ள முடியாவிட்டால் அமைதி காக்கலாம். மாறாக ஊடகவியலாளர்கள், தங்களுடைய கடமைகளை செய்ய அறிவாலயத்தில் கையூட்டு பெறுகிறார்கள் என்று அவலமான அவதூறு செய்திருப்பதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த ஆணவப் போக்கு ஒரு கட்சியின் தலைவருக்கு அழகல்ல. மேலும் தனது அவதூறான பேச்சை, இதுதான் தர்மம் என நியாயப்படுத்தும் பேச்சு இன்னும் கொடுமை.

இது போன்ற பேச்சுக்களை அண்ணாமலை தொடர்ந்து பேசி வருவது ஊடகங்களின் உரிமையை உணர்வுகளை உரசிப்பார்க்கும் போக்கு. இந்த போக்கை கைவிட்டு நாவடக்கத்துடன் நயத்தகு நாகரீக அரசியலை அண்ணாமலை கற்றுக் கொள்ள வேண்டும்.

யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு. – குறள்: 127 என்ற திருக்குறளை தமிழக பா.ஜக. தலைவர் தொடர்ந்து படிக்கவும் வலியுறுத்துகிறோம். தர்மத்தை உணர திருக்குறள் துணை நிற்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories