தமிழ்நாடு

“அடிப்படை நாகரிகம் இல்லாமல்.. அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்” : ‘CMPC’ கடும் எச்சரிக்கை !

பெண் பத்திரிகையாளரிடம் கீழ்த்தரமாக நடந்துகொண்ட பாஜக நிர்வாக மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம் வலியுறுத்தியுள்ளது.

“அடிப்படை நாகரிகம் இல்லாமல்.. அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்” : ‘CMPC’ கடும் எச்சரிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணமலையை வன்மையாக கண்டிக்கிறோம். பெண் பத்திரிகையாளரிடம் கீழ்த்தரமாக நடந்துகொண்ட பாஜக நிர்வாக மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலளார் மையம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மாற்றத்திற்கான ஊடகவியலளார் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் இன்று (27.05.22) அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பில், நேற்று (26.05.22) பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருந்த சமயம் அவரை வரவேற்பதற்கு பா.ஜ.க சார்பாக விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, காவல்துறையின் அனுமதியுடன்தான் பேனர் வைக்கப்பட்டதாகவும், விதியை மீறி பேனர் வைத்ததற்கான ஆதாரம் உள்ளதா? என்று செய்தியாளரிடம் கேட்டார். இதற்கு அந்த செய்தியாளர், தன்னிடம் உள்ள ஆதாரம் குறித்து விளக்க ஆரம்பித்த போது, அதை காது கொடுத்து கேட்காமல், அவரை பேச விடாமல் தடுத்த அண்ணாமலை, உங்களுக்கு “200 ரூபாய் நிச்சயம்” என்று செய்தியாளரை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார்.

அண்ணாமலையின், இந்த அநாகரிகமான வார்த்தையை அங்கிருந்த மற்ற செய்தியாளர்கள் கண்டித்த போது, ”சரி 500 ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள் அல்லது 1000 ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள்” என்று எந்த வித அடிப்படை நாகரிகமும் இல்லாமல் அண்ணாமலை பேசியுள்ளார்.

கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களை வாயடைக்கச் செய்யும் வகையில், அவர்களை இழிபடுத்துவது ஒரு கீழ்த்தரமான நடவடிக்கையாகும். கடந்த காலங்களிலும் அண்ணாமலை இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக இன்று அண்ணாமலை செய்தியாளர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இதேபோல், நேற்று பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருந்தபோது, அதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பெண் பத்திரிகையாளரிடம் பா.ஜ.க நிர்வாகி ஒருவர் கீழ்த்தரமாக நடந்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் முறையிட்டும் இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆகவே, பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திய பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை மற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது. பெண் பத்திரிகையாளரிடம் கீழ்த்தரமாக நடந்துகொண்ட பா.ஜ.க நிர்வாகியின் மீது பா.ஜ.க தலைமை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

பத்திரிகையாளர்களை மிரட்டுவது, அவர்களிடம் அநாகரிகமாக நடந்துகொள்வது போன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளை பா.ஜ.கவினர் இத்துடன் நிறுத்திக்கொள்வதுடன் பத்திரிகையாளர்களிடம் அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலளார் மையம் வலியுறுத்துகிறது.” எனத் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories