சென்னை, கோடம்பாக்கத்தில் வசித்து வரும் மாணவி சிந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தோழியுடன் விளையாடும்போது, மூன்றாவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து, இரண்டு கால்களிலும் கடுமையான எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும், மாணவி சிந்துவின் முகத்தின் தாடை மற்றும் பற்கள் உடைந்தது.
இந்நிலையில், இம்மாணவிக்கு சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு, உயிர் காப்பாற்றப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்த நிலையிலும், தொடர்ந்து மாணவி சிந்து தன்னம்பிக்கையுடன் படித்து, +2 பொதுத் தேர்வு எழுதுவதற்கு அவரது தந்தை தேர்வு மையத்திற்குத் தூக்கிச் சென்ற செய்தி, அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.
இந்த செய்தியை அறிந்ததுமே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவிக்கு தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்திருந்தார். மேலும் இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்டுள்ள பதிவில்,”வினைத்திட்பம் என்பதொருவன் மனத்திட்பம்!" கடுமையான நெருக்கடிகளின் போது தான் ஒருவரின் மனவுறுதி வெளிப்படும். விபத்தில் கால் எலும்புகள் முறிந்தாலும் நம்பிக்கையும் கற்கும் ஆர்வமும் முறியாமல் தேர்வுகளை எழுதிவரும் மாணவி சிந்துவைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன்.
தடைகள் வரினும் சோர்ந்து போகாமல் எதையும் முயன்று பார்க்கும் மனவலிமையை சிந்துவைப் பார்த்து மாணவர்கள் கைக்கொண்டு, தேர்வுகளைத் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்! மீண்டும் வாலிபால் ஆடவேண்டும் என்ற சிந்துவின் ஆசையை நிறைவேற்றத் தேவையான மருத்துவச் செலவுகளை அரசே ஏற்கும்” என்று பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மாணவி தேர்வு எழுத 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. பிறகு அவர் தேர்வு எழுதி முடித்த பிறகு ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி சிந்துவை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். மேலும், சிந்துவின் தந்தை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் தேநீர் கடை நடத்துவதற்கான அனுமதி ஆணையை வழங்கினார். முதலமைச்சரின் இந்த செயல் அனைவரையும் நெகிச்சி அடைய செய்துள்ளது.