தமிழ்நாடு

திருமணத்திற்கு வரன் தேடிய தொழிலதிபரிடம் பெண் குரலில் பேசி பண மோசடி.. சென்னை வாலிபர் சிக்கியது எப்படி?

தொழிலதிபரிடம் திருமணம் செய்து கொள்வதாகப் பெண்குரலில் பேசி மோசடி செய்த வாலிபரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

திருமணத்திற்கு வரன் தேடிய தொழிலதிபரிடம் பெண் குரலில் பேசி பண மோசடி.. சென்னை வாலிபர் சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஈரோடு மாவட்டம், உஞ்சமரத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன். தொழிலதிபரான இவர் கனடாவில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தாகியுள்ளது.

இந்நிலையில், இரண்டாவது திருமணத்திற்காகப் பெண் தேடி வந்துள்ளார். இதுகுறித்து திருமணம் தொடர்பான இணைய தளங்களிலும் பதிவு செய்துள்ளார். இவரின் விவரங்களைப் பார்த்த சென்னை பெரம்பூரைச் சேர்ந்த செந்தில் என்பவர் பச்சையப்பனைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது "எனது தங்கை ராஜேஸ்வரியிடம் உங்களது புகைப்படத்தைக் காட்டினேன். அவருக்கு உங்களைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம்" எனத் தெரிவித்துள்ளார். பிறகு பச்சையப்பனும் ராஜேஸ்வரியைப் பிடித்துள்ளது என கூறியுள்ளார். இதையடுத்து இரண்டு பேரிடமும் பச்சையப்பன் தொலைபேசியில் பேசிவந்துள்ளார். மேலும் செந்தில் குடும்ப செலவிற்குப் பணம் தேவைப்படுகிறது என அவ்வப்போது பச்சையப்பனிடம் லட்சக்கணக்கில் பணம், நகைகளை வாங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் சென்னை வந்த பச்சையப்பன், செந்திலைத் தொடர்பு கொண்டு "உங்கள் தங்கையை நேரில் பார்க்க வேண்டும். அவருக்கு விலை உயர்ந்த பரிசு பொருள் வாங்கி வந்துள்ளேன். நான் தங்கியிருக்கும் விடுதிக்கு வாருங்கள்" எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து செந்தில் அங்கு சென்றுள்ளார். அப்போது அவர் ராஜேஸ்வரி வரவில்லையா என கேட்டத்திற்கு "தங்கைக்கு உடல்நிலை சரியில்லை பரிசுப் பொருளை என்னிடம் கொடுங்கள்" என கூறியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த பச்சையப்பன், "பரிசுப்பொருளை ராஜேஸ்வரியிடம் தான் கொடுக்க முடியும்" என உறுதியாகக் கூறியுள்ளார். இதையடுத்து செந்தில் தான் எடுத்து வந்த கத்தியைக் காட்டி மிரட்டி பச்சையப்பனிடம் இருந்து ரூ.3.60 லட்சம் மதிப்புடைய நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதுகுறித்து பச்சையப்பன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் போலிஸார் செந்திலைப் பிடித்து விசாரணை செய்ததில் அவருக்குத் தங்கையே இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ராஜேஸ்வரி என ஏதோ ஒரு பெண்ணின் புகைப்படத்தைக் காட்டியும், பச்சையப்பனிடம் பெண் குரலில் பேசியும் மோசடி செய்து பணம் பறித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories