உதகை அருகே உள்ள HPF பகுதியில் ஒன்றிய அரசுக்கு சொந்தமான இந்துஸ்தான் புகைப்பட தொழிற்சாலை 1964 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தொழிற்சாலையில் திரைபடங்களில் பயன்படுத்தபட்ட பிலிம்கள், மருத்துவ துறையில் பயன்படுத்தபட்ட எக்ஸ்ரே பிலிம்கள் உள்பட பல்வேறு பிலிம்கள் தயாரிக்கபட்டு வந்தது.
தொடக்கத்தில் பெரும் லாபத்தில் இயங்கிய இத்தொழிற்சாலை ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கை காரணமாக 1991-ஆண்டுக்கு பின் நஷ்டத்தில் இயங்க தொடங்கியது. அதனை தொடர்ந்து ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கபட்டு 2016-ஆம் ஆண்டு முற்றிலுமாக மூடப்பட்டது.
இந்த நிலையில், அத்தொழிற்சலை நிர்வாகம் கனரா வங்கி, ஸ்டேட் பேங்காப் இந்தியா உள்பட 10-க்கும் மேற்பட்ட வங்கிகளில் பெற்ற பல ஆயிரம் கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத நிலையில், வங்கிகள் தேசிய கம்பனி தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தன. அதனை விசாரித்து வந்த தீர்ப்பாயம் மொத்த சொத்துக்களையும் நீதிமன்றத்தின் கட்டுபாட்டில் கொண்டு வந்துள்ளதுடன் 6 மாதங்களுக்குள் தொழிற்சாலையை விற்று வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் தொழிற்சாலையை வாங்க தனியார் நிறுவங்களோ அல்லது தமிழக அரசோ நாடலாம் என்றும் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்துஸ்தான் புகைபட தொழிற்சலை அமைந்துள்ள இடத்தில் 3 ஆயிரம் பேர் பணியாற்றும் வகையில் டைட்டில் பார்க்க கொண்டு வரப்படும் என்று வனத்துறை அமைச்சர் அறிவித்திருந்த நிலையில், தேசிய கம்பனிகள் தீர்ப்பாயம் அறிவிப்பு நோட்டீஷை தொழிற்சாலையின் கேட்டில் ஒட்டி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.