தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
இது தொடர்பான அரசு கொடுத்த கொள்கை விளக்க குறிப்பேட்டில், “தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடிக்கும்போது சர்வதேச கடல் எல்லையை கடப்பதாகக் கூறி இலங்கை கடற்படயினரால் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர்.
இலங்கை அரசால் நமது மீனவர்கள் மற்றும் அவர்களின் மீன்பிடி படகுகள் நீண்டகாலமாக சிறையில் அடைத்து வைக்கப்படுவது தமிழக மீனவர்கள் மத்தியில் கவலையையும் பாதுகாப்பின்மையையும் ஏற்பத்தியுள்ளது. எனவே, கச்சத்தீவை மீட்டு மீண்டும் இந்தியாவிற்கு கிடைப்பது மற்றும் பாக் நீரிணை பகுதியில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டு எடுப்பது தமிழக அரசின் முதன்மையான குறிக்கோளாக உள்ளது.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை அரசால் பிடிக்கப்பட்ட 88 படகுகள் மற்றும் 23 மீனவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல், சிறைப்பிடிக்கப்பட்டு மீட்க இயலாத நிலையில் உள்ள படகுகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.