தமிழ்நாடு

‘சமத்துவ நாயகர்’ என மீண்டும் நிரூபித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. திருமாவளவன் நேரில் சந்தித்து நன்றி!

அம்பேத்கரின் பிறந்தநாள் சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பையடுத்து, நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் வி.சி.க தலைவர் திருமாவளவன்!

‘சமத்துவ நாயகர்’ என மீண்டும் நிரூபித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. திருமாவளவன் நேரில் சந்தித்து நன்றி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“தி.மு.க தலைமையிலான அரசு சமூக நீதி அரசு என்பதை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் 110 விதியின் கீழ் அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்” என வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

“அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதி சமத்துவ நாளாக கொண்டாடப்படும்" என 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

மேலும், அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அண்ணலுடைய முழுஅளவு வெண்கலச்சிலை நிறுவப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் முன்வைத்தார். அந்தக் கோரிக்கையை ஏற்று அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழுஉருவ வெண்கலச்சிலை நிறுவப்படும் என்றும் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அதேபோல, வி.சி.க சிந்தனை செல்வன் வேண்டுகோளை ஏற்று, ‘சமபந்தி போஜனம்’ என்பது இனி சமத்துவ விருந்து என்று பெயர் மாற்றம் செய்யப்படும் எனவும் நேற்று நடைபெற்ற மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்புகளையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் வி.சி.க தலைவர் திருமாவளவன்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், “சமத்துவ நாயகராக இருந்து இந்த அரசை சமூக நீதி அரசாக நடத்திச் செல்லும் முதலமைச்சர் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நன்றி.

துணை முதலமைச்சராக இருந்த காலத்திலேயே பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்காச்சியேந்தல் ஆகிய நான்கு ஊராட்சிகளுக்கு 10 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையை மாற்றி அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவோடு தேர்தலை நடத்தி தலித் சமூகத்தினரை ஊராட்சி மன்றத் தலைவர்களாக்கி நாற்காலியில் அமரவைத்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்தச் சாதனையைப் பாராட்டும் வகையில் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களை ‘சமத்துவப் பெரியார்’ என வி.சி.க பாராட்டியது.

இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘சமத்துவ நாயகர்’ எனப் போற்றக்கூடிய வகையில் அறிவிப்புகளைச் செய்திருப்பது கோடானுகோடி ஒடுக்கப்பட்ட மக்களின் மனதில் மிகப்பெரும் மகிழ்ச்சியை, நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

அதைப் பிரதிபலிக்கும் வகையில் வி.சி.கவின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களோடு சென்று முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்திருக்கிறோம்.” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories