தமிழ்நாடு

“‘பெயர் - புகழ்’ நிலைக்க வேண்டுமென்றால் மக்களோடு மக்களாக இருக்க வேண்டும்” : முதல்வர் அறிவுறுத்தல்!

‘பெயர் - புகழ் - சிறப்பு’ நிலைக்க வேண்டுமென்றால் மக்களோடு மக்களாக இருக்கவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

“‘பெயர் - புகழ்’ நிலைக்க வேண்டுமென்றால் மக்களோடு மக்களாக இருக்க வேண்டும்” : முதல்வர் அறிவுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழக மக்களுக்கு உன்னதமான நல்லாட்சியைக் கொடுத்துவரும் நாம் - நம்முடைய திராவிட மாடல் கருத்தியலை இந்தியா முழுமைக்கும் விதைக்கும் கடமையையும் செய்வோம் என்று, தந்தை பெரியார் மீது ஆணையாக - பேரறிஞர் அண்ணா மீது ஆணையாக - முத்தமிழறிஞர் கலைஞர் மீது ஆணையாக உறுதி ஏற்கிறேன்.

எத்தனையோ முழக்கங்களைச் சொல்லி என்னை நீங்கள் வாழ்த்துகிறீர்கள். நிரந்தர முதல்வர் என்றும் - அதையும் தாண்டியும் என்னை வாழ்த்திக் கொண்டிருக்கிறீர்கள். “என் உயரம் எனக்குத் தெரியும்” - இது தலைவர் கலைஞர் சொன்னது. ஆனால் என்னுடைய எண்ணம் எல்லாம் இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் இந்தப்பெருமை - பெயர் நின்று நிலைக்க உழைக்க வேண்டும் என்பதுதான். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் என யாராக இருந்தாலும் எந்தவிதக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத வகையில் இருக்க வேண்டும். தானும் பழிச்சொல் வாங்கி கட்சிக்கும் - ஆட்சிக்கும் பழிச்சொல் வாங்கித் தந்துவிடக் கூடாது.

“- நான் உங்களிடம் கேட்டுக் கொள்வது கடமை தவறாதீர்கள்!- கண்ணியத்தை விட்டுவிடாதீர்கள்! - கட்டுப்பாடு எல்லாவற்றையும் விட முக்கியம்!" இம்மூன்றையும் மீறுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தலைவர் கலைஞரின் உண்மையான உடன்பிறப்புகள் ஆகமாட்டார்கள்.

நான் கழகத் தலைவர் ஆனதும் - முதல்வரானதும் என்னென்ன நடவடிக்கை எடுத்து வருகிறேன் என்பது உங்களுக்கு நன்றாகத்தெரியும். எனவே தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள். நமக்குக் கிடைத்திருக்கின்ற பெயர் - புகழ் - சிறப்பு நின்று நிலைக்க வேண்டுமென்றால் எப்போதும் மக்களோடு மக்களாக நீங்கள் இருந்திட வேண்டும்.

கழக அரசு நாள்தோறும் துறை வாரியாகச்செயல்படுத்தி வரும், நாட்டுக்கே முன்னோடியான திட்டங்கள், சாதனைகள் அனைத்தையும், நமது அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஒன்றிய, நகர, பேருர், பகுதி, வட்டக்கழகச் செயலாளர்கள் ஆகிய அனைவரும் மக்களிடம் வீதிவீதியாக, வீடு வீடாக, ஒவ்வொரு தனிமனித ரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்.

சாதனைகளை, நலத்திட்டங்களைச் செய்வது மட்டுமே போதாது. அவை மக்களின் நேரடிக் கவனத்தையும், நற்பெயரையும் பெறும் வகையில் நாம் உழைக்க வேண்டும்! அது தான் கழகத்தை மேலும் வலிமையடையச் செய்யும். நம் கழகம் வலிமை பெற்றால் தான், நான் அடிக்கடி சொல்வது போல, என்னை நம்பர் 1 முதலமைச்சர் என்று சொல்கிறார்கள்.

அதில் எனக்குப் பெருமை இல்லை. “தமிழ்நாடு நம்பர் 1 மாநிலம்” என்ற நிலையை எட்ட வேண்டும். தமிழ்நாடு நம்பர் 1 மாநிலம் என்ற நிலையை நான் மட்டுமே உருவாக்கிட முடியாது. நாம் அனைவரும் சேர்ந்து உருவாக்க வேண்டும். எனவே வாருங்கள், நமக்கான தமிழகத்தை நாம் அனைவரும் சேர்ந்து உருவாக்குவோம்!

banner

Related Stories

Related Stories