முரசொலி நாளேட்டின் இன்றைய (ஏப்ரல்.12 2022) தலையங்கம் வருமாறு:
பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே போகிறது. சிலிண்டர் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து போய்க் கொண்டே இருக்கிறது. விலைவாசியைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியும் இல்லை, பொருளாதாரம் எல்லாவிதத்திலும் வீழ்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது. வேலையில்லாதவர் எண்ணிக்கை பெருகிக் கொண்டே இருக்கிறது. இதுதான் பா.ஜ.க.வின் இந்தியாவாக இருக்கிறது.
அவர்கள் ஒரு விதமான ஒற்றைத் தன்மையை உருவாக்க நினைக்கிறார்கள். அந்த ஒற்றைத் தன்மைக்கு எதிர்ப்பு என்பதும் அதிகமாக இருக்கிறது. மக்கள் பிரச்சினைகள் எதற்கும் விளக்கம் சொல்வதும் இல்லை. நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதும் இல்லை. கேள்விகள் கேட்டால் பதில் சொல்வதும் இல்லை. இதுதான் அவர்களது பாணியாக இருக்கிறது.
பா.ஜ.க.வுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல; சில மாநிலங்களில் அவர்களது கூட்டணிக் கட்சிகளே நேரடியாகவும், மறைமுகமாகவும் இதனை எதிர்த்துப் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இத்தகைய மக்கள் விரோத - ஜனநாயக விரோத - நாட்டு விரோதத் தன்மைகளை எதையாவது சொல்லித் திசை திருப்புவது என்பது அவர்களது தந்திரம். மதவாதத்தைக் கிளப்புவார்கள். அல்லது இந்தி மொழியை ஆதரித்து குரல் கொடுப்பார்கள். எதிர்ப்புகள் அனைத்தையும் திசைதிருப்புவதற்கு அவர்கள் கையில் இருக்கும் ஆயுதம் என்பது அதுதான்.
“ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை ஏற்க வேண்டும்” என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்லி இருப்பது என்பது இந்தியாவை - இந்தியின் இந்தியாவாக - இந்திக்காரர்களின் இந்தியாவாக மாற்றும் முயற்சியாகும். நாடாளுமன்ற அலுவல் குழுவின் 17 ஆவது கூட்டம் டெல்லியில் நடந்திருக் கிறது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் அமித்ஷா கூறியதாக ஒரு அறிக்கை வெளியாகி இருக்கிறது.
“மத்திய அமைச்சரவையின் நிகழ்ச்சி நிரல்களில் 70 சதவிகிதம் இந்தி மொழியிலேயே தயாரிக்கப்படுகின்றன. நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் முக்கியப் பகுதியாக இந்தியை அலுவல் மொழியாக மாற்றவேண்டிய நேரம் வந்துவிட்டது.
ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும். உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக இந்தியைக் கருதக்கூடாது. வெவ்வேறுமொழி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது பேசும் மொழி இந்தியாவின்மொழியாக இருக்கவேண்டும். உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு நெகிழ்வுத்தன்மையாக மாறாத வரையில் இந்தியைப் பரப்ப முடியாது” என்று அமைச்சர் அமித்ஷா சொல்லி இருக்கிறார்.
அதாவது ஆங்கிலத்தை அறவே அகற்றிவிட்டு, அந்த இடத்தில் இந்தியை உட்கார வைக்கப் போகிறார்கள். வர்களது உண்மையான விருப்பம் என்பதுஅப்படி இந்தி முழுமையாக உட்கார வைக்கப்பட்ட பிறகு இந்தியை அகற்றிவிட்டு,அங்கு சமஸ்கிருதத்தை உட்கார வைப்பதுதான்.
இதனை பா.ஜ.க.வின் மூதாதை அமைப்பான ஜனசங்கத்தின் தேர்தல் அறிக்கையானது 70 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டது. ‘இந்தியை ஆட்சிமொழியாக ஆக்குவது என்பது தற்காலிக ஏற்பாடுதான். இந்தி முழுமையான ஆட்சி மொழியான பிறகு சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும்” என்பது தங்களது இலட்சியமாக எப்போதோ சொல்லி விட்டார்கள். சமஸ்கிருத மயமாக்கல் என்பதன் முன்னோட்டம் தான் இந்திமயமாக்கல். ஆங்கிலத்தை அகற்றுவது தான் சிரமமானது. இந்தியின் இடத்தில் சமஸ்கிருதத்தை உட்கார வைப்பது என்பது எளிமையானது.
இந்தியையே முழுமையாகப் பயன்படுத்துவதன் மூலமாக, இந்தி பேசாதபெரும்பான்மையான மக்களை இந்தியாவின் இரண்டாம்தர மக்களாக மாற்றுவதும் - சமஸ்கிருதத்தை முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்குவதன் மூலமாக, சமஸ் கிருதம் படிக்காதவர் நீங்கலாக அனைவரையும் இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவதும்தான் இதற்குப் பின்னால் இருக்கும் வஞ்சகம், தந்திரம்,வன்மம்.
இது ஏதோ நாடாளுமன்றத்தின் அலுவல் மொழிப் பிரச்சினை அல்ல. வெறுமனே கடிதம் எழுதும் பிரச்சினை அல்ல. ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் பிரச்சினையும் அல்ல. மொழியைக்காக்கும் பிரச்சினை.
தமிழில் பிறமொழிச் சொற்கள் கலக்காமல் எழுதவேண்டும் என்பது தமிழ் நாட்டில் எழுந்த தனித்தமிழியக்கத்தின் குரலாகும். இதனைப் புரிந்து கொள்ள முடிகிறது. மொழியைக் காப்பாற்றுவதற்கு நம்முடைய தமிழறிஞர்கள் எடுத்த
தனித்துவமான முயற்சி இது. ஆனால் இன்று அமித்ஷா சொல்கிறார்: ‘உள்ளூர் மொழிகளின் வார்த்தைகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நெகிழ்வுத்தன்மையாக இந்தி மாற வேண்டும்' என்கிறார். உள்ளூர் மொழிகளை முழுமையாக உறிஞ்சி வாழ்ந்து கொள் என்று சொல்கிறார்.
‘மாநில மொழிகளுக்கு மாற்றாக நான் இந்தியைச் சொல்லவில்லை' என்கிறார் அமைச்சர் அமித்ஷா. மாநில மொழிகளுக்கு மாற்றாகத்தான் இந்தியை வளர்க்கிறார்கள். வெறுமனே கடிதம் எழுதுவதற்காக அல்ல.
புதிய கல்விக் கொள்கை என்பதும், ‘நீட்’ தேர்வு என்பதும், அனைத்துக் கல்லூரிகளுக்கும் நுழைவுத் தேர்வு என்பதும் இந்தியை நுழைக்கும் தந்திரங்களே. மாநிலங்களில் நடக்கும் அனைத் துத் தேர்வுகளையும் ஒன்றாக மாற்றுவது என்பதே, நாளை இந்தியில்தான் தேர்வு என்பதை அறிவிப்பதற்காகத்தான்.
ஒன்றிய அரசின் அலுவலகங்கள் அனைத்தும் இந்தியில்தான் செயல்படும் என்று சொல்வதன் மூலமாக ‘இந்தி படித்தால்தான் ஒன்றிய அரசின் பணியிடங்களுக்குச் செல்ல முடியும்' என்ற எண்ணத்தை மக்கள் மனதில் விதைக்கிறார்கள். இந்தி படிக்காதவர்களுக்கு இந்தியா இல்லை என்பதைப் போன்றதோற்றத்தை உருவாக்க நினைக்கிறார்கள்.
இதற்குப் பின்னால் இருக்கும் ஆபத்தை உணரவில்லை. இந்தியை திணிப்பது என்பது இந்தி பேசாத மக்களை மனரீதியாக பாதிக்கும். காலம் காலமாக உருவாக்கி வைத்திருந்த ஒருமைப்பாட்டுச் சிந்தனையைபாதிக்கும்.
இதனைத்தான் மிகச்சுருக்கமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். “ஒன்றிய அமைச்சர் அமித்ஷா சொல்வதுஇந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல். இந்தியாவின் பன்முகத்தன்மையை பழுதாக்கும் வேலையை பா.ஜ.க. தலைமை தொடர்ந்து செய்கிறது.இந்தி மாநிலங்கள் போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அவர்நினைக்கிறாரா? ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது. ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது” என்று சொல்லி இருக்கிறார். இதுதான் அவர்களுக்கு விடுக்கப்பட்ட பகிரங்கமான எச்சரிக்கையாகும்.
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா அவர்கள், “இந்தி நமது தேசிய மொழி அல்ல, இந்தியை தேசியமொழி ஆக்குவதற்கு நாங்கள் விடமாட்டோம். இந்தி பேசாத மாநிலங்கள் மீது பண்பாட்டு பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட நினைக்கிறார்கள்” என்று சொல்லி இருக்கிறார். கர்நாடக மாநிலத்தின் பல இடங்களில் இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தை அங்கே பலரும் நடத்தத் தொடங்கி இருக்கிறார்கள்.
பொதுவாக நாட்டுக்கு - மக்களுக்கு எந்த பாதிப்பு வந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் தான் நினைத்ததைச் செய்வதுதான் பா.ஜ.க.வின் பாணியாகும். அந்த பாணி இந்த நாட்டின் மக்களுக்கும், நாட்டுக்கும் ஆபத்தானது. இறுதியில் அவர்களுக்கே ஆபத்தானது!