மதுரையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவது தொடர்பாக, முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்குவதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கைகள் தயார் செய்யப்படும் என கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் சட்டப் பேரவையில் பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
இந்நிலையில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன், கடந்த ஜனவரி மாதம் மதுரை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் பற்றி எழுதிய கடிதத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமைப் பொது மேலாளர் ஆர்.எம்.கிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமைப் பொது மேலாளரின் பதிலில், " மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் ஆகிய இரண்டாம் தட்டு நகரங்களுக்கு மெட்ரோ வெகு விரைவு போக்குவரத்து திட்டம் கொண்டு வருவதற்கான "சாத்தியக் கூறு ஆய்வு அறிக்கை" க்கான அனுமதியை தமிழ்நாடு அரசு ஏற்கெனவே வழங்கியுள்ளது.
"மதுரையில் மெட்ரோ வெகு விரைவு போக்குவரத்து திட்டம் கொண்டு வருவதற்கான "சாத்தியக் கூறு ஆய்வு அறிக்கை" தயாரிப்பதற்கான டெண்டரை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கெனவே விடுக்கப்பட்டு அப்பணி "பாலாஜி ரயில் ரோடு சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் (கன்சல்டன்சி) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு நடந்தேறி வருகிறது. இறுதி சாத்தியக் கூறு அறிக்கை மே 2022 இல் தயாராகி விடுமென எதிர்பார்க்கப்படுகிறது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைக் குறிப்பிட்டுள்ள மதுரை எம்.பி சு.வெங்கடேசன், “மதுரை மக்களுக்கு நல்ல செய்தி. விரைவில் இப்பணி மேற்கொள்ளப்பட என்னுடைய இடையறா முயற்சிகள் தொடரும்.” எனத் தெரிவித்துள்ளார்.