தொழில் முதலீடுகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த அறிக்கை விவரம் வருமாறு:
”2021ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் அறிக்கையில் தொழில் துறையை மீட்டெடுப்போம்”, “தொழில் வளர்ச்சியை பரவலாக்க கொள்கைகள் வகுக்கப்படும்”, “தொழில் தொடங்க முன்வருவோரை ஊக்குவிக்கக்கூடிய வகையில் ஒற்றைச் சாளர முறை மூலமாகத் தொழில் வளத்தைப் பெருக்குவோம்” என்று தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்தோம். அந்த வாக்குறுதிகளை இந்த அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது.
இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, 68,375 கோடி ரூபாய் முதலீடும், 2,05,802 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கக்கூடிய வகையில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
20.7.2021 அன்று சென்னையில் “முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு” என்ற நிகழ்ச்சி வாயிலாக 17,141 கோடி ரூபாய் முதலீடும், 55,054 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வகையில் 35 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
22.9.2021 அன்று சென்னையில் “ஏற்றுமதியில் ஏற்றம்-முன்னணியில் தமிழ்நாடு” என்ற நிகழ்ச்சி வாயிலாக 1880 கோடி ரூபாய் முதலீடும், 39,150 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
23.11.2021 அன்று கோயம்புத்தூரில் “முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு” என்ற நிகழ்ச்சி வாயிலாக 35,208 கோடி ரூபாய் முதலீடும், 76,795 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வகையில் 59 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
7.3.2022 அன்று தூத்துக்குடியில் “சர்வதேச அறைகலன் பூங்கா அடிக்கல் நாட்டு விழாவின் போது” 4,488 கோடி ரூபாய் முதலீடும், 15,103 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வகையில் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. (மேசையைத் தட்டும் ஒலி)
இதுதவிர, 11.9.2021 மற்றும் 15.3.2022 அன்று நடைபெற்ற நிகழ்வுகளில் 3,558 கோடி ரூபாய் முதலீடும், 4,600 பேர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கும் வகையில் DP World மற்றும் சாம்சங் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
26.3.2022 மற்றும் 28.3.2022 ஆகிய நாட்களில் துபாய் மற்றும் அபுதாபி நாடுகளில் நடைபெற்ற நிகழ்வுகளில் 6,100 கோடி ரூபாய் முதலீடும், 15,100 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வகையில் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
“சீரான மற்றும் பரவலான தொழில் வளர்ச்சி” எங்கள் தேர்தல் வாக்குறுதி. அதை நிறைவேற்றும் வகையில் இன்றைக்கு- சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, மதுரை, கரூர், நாமக்கல், திண்டுக்கல், புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 25 மாவட்டங்களில் இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தொழில் வளர்ச்சிக்கு இவ்வளவு முயற்சிகளை எடுத்துள்ள இந்த அரசின் சார்பில் ஐக்கிய அரபு நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டேன். துபாயில் நடைபெற்ற உலக கண்காட்சி, 5 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் சர்வதேச நிகழ்வுகளில் ஒன்று. 192 நாடுகள் பங்கேற்ற அக்கண்காட்சியில் மார்ச் 25 முதல் 31 ஆம் தேதி வரை “தமிழ்நாடு வாரமாக” கடைபிடிக்கப்பட்டது. கண்காட்சியின் இறுதி வாரங்களில்தான் பெரிய முதலீட்டாளர்கள் கலந்து கொள்வார்கள். அதனால் நான் துபாய் சென்று, மார்ச் 25 ஆம் தேதி “தமிழ்நாடு அரங்கினை”, அந்த அரங்கில் உள்ள கண்காட்சியைத் திறந்து வைத்தேன்.
துபாயிலும், அபுதாபியில் வாழும் புலம் பெயர்ந்த தமிழ்ச் சொந்தங்களைச் சந்தித்து, சொந்த மண்ணான தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தேன். ஐக்கிய அரபு நாடுகளின் பொருளாதாரத் துறை அமைச்சர், வெளிநாட்டு வர்த்தகத் துறை அமைச்சர், வர்த்தக சங்க நிர்வாகிகள் ஆகியோரையும் சந்தித்து, தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் பெறுவது குறித்து ஆலோசனை நடத்தினேன்.
முபாதலா முதலீட்டு நிறுவனம் மற்றும் ABQ போன்ற நிறுவனங்கள், ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள பல்வேறு முதலீட்டாளர்களை நிருவகித்திடும் நிறுவனங்கள், இவர்களையும் சந்தித்து வளர்ந்து வரும் துறைகளான எரிசக்தி, சரக்குப் போக்குவரத்துத் திட்டங்கள், உள்கட்டமைப்புத் திட்டங்கள், தரவு மையங்கள், மின்னணுவியல் போன்ற திட்டங்களில் பெருமளவில் முதலீடுகளைப் பெற்றிட உரையாடினேன். இதைத் தொடர்ந்து, இவ்விரு நிறுவனங்களின் முதலீடுகளைப் பெற ஒரு பணிக்குழு (Working Group) விரைவில் அமைக்கப்படவுள்ளது.
நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல், இந்த துபாய் பயணத்தின் வாயிலாக 6,100 கோடி ரூபாய் முதலீடும், 15,100 பேருக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தக்கூடிய வகையில் 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
அபுதாபியைத் தலைமையிடமாகக் கொண்ட மிகப்பெரிய எஃகுக் குழாய் உற்பத்தியாளர்களில் ஒன்று, சென்னையைச் சுற்றியுள்ள மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனங்கள் அடங்கியிருக்கக்கூடிய பகுதியில் 1,000 கோடி ரூபாய் முதலீடும், 2,000 பேருக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தக்கூடிய வகையில் ஒரு உற்பத்தித் திட்டத்தினை நிறுவ தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
லூலூ பன்னாட்டுக் குழுமம் இந்தியா மற்றும் மத்திய கிழக்கு/வட ஆப்பிரிக்கா மண்டலங்களில் பல்வேறு திட்டங்களை நிறுவியுள்ளது. “இரு பெரும் வணிக வளாகங்கள்”, “உணவு பதப்படுத்தக்கூடிய திட்டம்” ஆகியவற்றை தமிழ்நாட்டில் நிறுவ, 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை இந்தக் குழுமத்துடன் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.
இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஆஸ்டர் DM மருத்துவக் குழுமத்துடன் சென்னையில் 500 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை உருவாக்கும் வகையில், 500 கோடி ரூபாய் முதலீடும், 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஷெராப் குழும நிறுவனத்துடன் 500 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ஒரு “சரக்குப் பூங்கா” அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள மிகப்பெரிய ஜவுளி மற்றும் ஆடைகள் உற்பத்தியாளர்களில் ஒன்றான ஒயிட் ஹவுஸ் நிறுவனத்துடன், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் ஆகிய பகுதிகளில் 500 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 3,000 பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் வகையில் “ஆடை மற்றும் தையல் திட்டங்களை” அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு நாட்டைச் சேர்ந்த டிரான்ஸ்வேல்டு குழுமத்துடன் 100 கோடி ரூபாய் மதிப்பில், 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தமிழ்நாட்டில் உணவு பதப்படுத்தக்கூடிய திட்டம் நிறுவிட புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தங்கள் எல்லாம் நான் துபாய் நாட்டிற்கு மேற்கொண்ட அரசு முறைப் பயணத்தின் விளைவாக கிடைக்கப் போகும் முதலீடுகள். (மேசையைத் தட்டும் ஒலி) ஆகவே துபாய் நாட்டிற்குச் சென்ற அரசு முறைப் பயணம், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கவும், நம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும்தான். அந்த இலக்கை எட்டும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறேன் என்பதை பெருமையுடன் இந்த அவைக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
10 மாதங்களிலேயே தொழில் துறையில் இந்த அரசு செய்திருக்கக்கூடிய சாதனைகளுக்கு நம்முடைய அரசு பொறுப்பேற்றதும் எடுத்த நடவடிக்கைகளே காரணம். 20.7.2021 அன்று தொழில்களை ஈர்க்க, 24 துறைகளைச் சார்ந்த 100 சேவைகளை மின்மய வடிவில் அளித்திடும் வகையில் “ஒற்றைச் சாளர இணையதளம்-2.0”-யைத் தொடங்கி வைத்தேன்.
23.11.2021 அன்று “ஒற்றைச்சாளர கைபேசி செயலி”யையும் தொடங்கி வைத்தேன். 7.3.2022 அன்று தொழில் தொடங்கத் தேவைப்படும் நிலம் தொடர்பாக “தமிழ்நாடு நிலத் தகவல் இணையத்தை” தொடங்கி வைத்தேன். அதே, 7.3.2022 அன்று தொழில் தொடங்குவதற்குரிய அனுமதிகள், ஒப்புதல்கள், நடைமுறைகளை அறியும் “வழிகாட்டி நிறுவனத்தின் புதிய இணைய தளத்தை” துவக்கி வைத்தேன்.
இப்படி, இந்த அரசு தொழில் துறையில் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் முதலீட்டாளர்களுக்கு, புதிய தொழில் தொடங்குவோருக்கு மிகப்பெரிய நம்பிக்கையை இந்த அரசின்மீது, தமிழ்நாட்டின் மீது அளித்திருக்கிறது. இதற்கு எடுத்துக்காட்டு கூறவேண்டுமென்று சொன்னால், கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையில் மட்டும் தமிழ்நாட்டில் வெளிநாட்டு நேரடி முதலீடு (Foreign Direct Investment) என்பது 41.5 விழுக்காடு அதிகரித்துள்ளது.
அதுமட்டுமல்ல; தமிழ்நாட்டில் முதலீடுகளை ஊக்குவிக்கும் முகமையான ‘Guidance’-க்கு ‘Asia Oceania Region’-ன் வருடாந்திர முதலீடுகள் மாநாட்டில், ‘Best Investment Promotion Agency’ என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்தகட்டமாக, 2022 ஆண்டு மே மாதத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறவுள்ள உலகப் பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டத்திலும், ஜெர்மனி நாட்டில் ஹானோவர் நிகழ்விலும், ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள “க்ளோபல் ஆஃப் ஷோர் வின்ட்” (Global Off Shore Wind) நிகழ்விலும், ஜூலை மாதத்தில் அமெரிக்க நாட்டிலும், முன்னணி முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகள் ஏற்கெனவே தொடங்கி விட்டன என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
முக்கியமாக எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக, 2023 ஆம் ஆண்டின் இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டில் சிறப்பாக நடத்தப்படும். அதன்மூலம் மேலும் அதிகமான முதலீடுகள் திரட்டப்படும். நம்முடைய பல இலட்சம் தமிழக இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று இந்த மாமன்றத்திற்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அரசு போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இனிமேல் போடப்போகும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் முதலீடுகளாக, வேலைவாய்ப்புகளாக மாறும். தமிழ்நாட்டிற்கு வரும் முதலீடுகளை அதிகரிக்கவும், மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தவும் மேற்கொள்ளப்படும் இந்த அரசின் முயற்சிகளுக்கு அனைவரும் கட்சி வித்தியாசம் பாராமல் துணை நிற்க வேண்டும் என்பதை மட்டும் கேட்டு, அதேபோல், என் பயணத்திற்கு வாழ்த்திய நல் உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்து அமைகிறேன்.”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்!