சொத்துவரி அதிகரிக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து, ‘இது வோட்டுப்போட்ட மக்களுக்கு தி.மு.க. கொடுத்த தண்டனை’ என்று பழனிசாமி அறிக்கை வெளியிட்டு உள்ளார். அவரும் ஆட்சியில் இருந்தவர். நிர்வாகத்தின் நடைமுறைகளை அறிந்திருந்தால் இப்படிச் சொல்லி இருக்கமாட்டார். தனக்கு வாக்களிக்காத மக்களை வஞ்சம் தீர்க்கும் நோக்கத்துடன் இத்தகைய கருத்துகளை பழனிசாமி பேசி வருகிறார்.
ஒன்றிய அரசின் 15-வது நிதி ஆணையம் அறிவித்த வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. சொத்து வரியை உயர்த்தினால்தான் மானியம் வழங்கப்படும் என ஒன்றிய அரசின் 15-வது நிதி ஆணையம் திட்டவட்டமாக கூறியுள்ளது. இதனை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, “மாநில உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்துவரி வீதத்தை உயர்த்திட வேண்டும் என்று ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட 15 வது நிதி ஆணையம் அறிவுறுத்தி உள்ளது” என்பதைத் தெரிவித்தார்.
“சொத்து வரி மாற்றி அமைக்கப்பட்டால் மட்டுமே ஒன்றிய அரசின் மானியங்களைப் பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டதால், ஏழை எளிய மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழ்நாட்டில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார். சொத்துவரி உயர்த்தப்பட்டாலும், பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் சொத்துவரி குறைவாகவே இருப்பதாகவும் அமைச்சர் கே.என்.நேரு கூறினார். இந்த தகவல்களைச் சரி பார்த்துவிட்டு பழனிசாமி பேச வேண்டும்.
தமிழ்நாட்டில் சொத்து வரியானது, மற்ற மாநிலங்களின் நகரங்களோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவாகவே வசூலிக்கப்படுகிறது. இது குறித்த புள்ளிவிபரங்களை வைத்து பார்த்தாலே சொல்லிவிடலாம். சென்னை மாநகராட்சியில் 600 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடத்திற்கு சீராய்விற்குப் பிறகு ஆயிரத்து 215 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதே பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டடத்திற்கு, மும்பையில் 2 ஆயிரத்து 157 ரூபாயாகவும், பெங்களூருவில் 3 ஆயிரத்து 464 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 3 ஆயிரத்து 510 ரூபாயாகவும், புனேவில் 3 ஆயிரத்து 924ஆகவும் வசூலிக்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சியில், 600 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடத்திற்கு அதிகபட்ச சொத்துவரி சீராய்விற்குப் பிறகு 4 ஆயிரத்து 860 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதே பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டடத்திற்கு, பெங்களூருவில் 8 ஆயிரத்து 660 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 15 ஆயிரத்து 984 ரூபாயாகவும், புனேவில் 17 ஆயிரத்து 112 ரூபாயாகவும், மும்பையில் 84 ஆயிரத்து 583 ரூபாயாகவும் உள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சியில் 600 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடத்திற்கு குறைந்தபட்ச சொத்துவரி சீராய்விற்குப் பிறகு, 255 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதே பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டடத்திற்கு, லக்னோவில் 648 ரூபாயாகவும், இந்தூரில் ஆயிரத்து 324 ரூபாயாகவும், அகமதா பாத்தில் 2 ஆயிரத்து 103 ரூபாயாகவும் உள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சியில், 600 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடத்திற்கு அதிகபட்ச சொத்துவரி, சீராய்விற்குப் பிறகு, ஆயிரத்து 215 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதே பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டடத்திற்கு, லக்னோவில் 2 ஆயிரத்து 160 ரூபாயாகவும், இந்தூரில் 2 ஆயிரத்து 520 ரூபாயாகவும், அகமதாபாத்தில் 5 ஆயிரத்து 609 ரூபாயாகவும் உள்ளது. மற்ற மாநிலங்களில் உள்ள நகரங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் சொத்து வரி மிகவும் குறைவு என்பது இதன்மூலம் தெளிவாகிறது.
சென்னை பெருநகர மாநகராட்சியின் முக்கியப் பகுதிகளில் உள்ள 600 சதுர அடிக்கும் குறைவான வீடுகளுக்கு 50 சதவிகிதம் சொத்து வரி அதிகப்படுத்தப்பட்டுள்ளது. சதுர அடி கூடும்போது, சொத்து வரியும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மற்ற மாநகராட்சிகளுக்கு 25 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு என்பது தவிர்க்க முடியாததே!
சென்னை மாநகராட்சியின் வருவாய் கடந்த 2010 ஆம் ஆண்டு 60 சதவிகிதமாக இருந்தது. 2015 ஆம் ஆண்டு 51 சதவிகிதமாகக் குறைந்தது. கடந்த ஆண்டு 43 சதவிகிதம் ஆகிவிட்டது. நாட்டிலேயே சொத்து வரி குறைவாக வசூலிக்கும் மாநகரம் என்பது சென்னைதான்.
2013 ஆம் ஆண்டு சொத்து வரியை மாற்றியமைக்க அரசாணை போடப்பட்டு இருந்தது. ஆனால் அது 2019 ஆம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டது. ஒட்டுமொத்த விலைக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு இது போன்ற சொத்து வரிகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
மாநிலத்தின் உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி விகிதம் 5.2 மடங்கு உயர்ந்துள்ளதாகவும், அந்த வளர்ச்சி விகிதத்தை வைத்து சொத்து வரிகளை உயர்த்துவதாகவும் நிபுணர்கள் சொல்கிறார்கள். இப்போது அதிகரிக்கப்பட்ட சொத்துவரி உயர்வு என்பது 83 சதவிகித வீடுகளுக்கு மிகக் குறைவான அளவில்தான் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.
தமிழகத்தில் 77 லட்சத்து 87 ஆயிரம் வீடுகள் உள்ளன. இதில் 45.54 லட்சம் வீடுகளுக்கு 25 சதவிகித உயர்வும், 19.23 லட்சம் வீடுகளுக்கு 50 சதவிகித உயர்வும் செய்யப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் 83 சதவிகித வீடுகளுக்கு மிகக் குறைவான அளவில்தான் உயர்வு என்பது உள்ளது. இதனைத்தான், “ஏழை எளிய மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழ்நாட்டில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது” என்று அமைச்சர் கே.என்.நேரு சுருக்கமாகச் சொல்லி இருக்கிறார். இந்த சுருக்க விளக்கத்தைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு, பழனிசாமியின் மூளையின் அளவு இருந்தால் நாம் என்ன செய்ய முடியும்?