நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் வடக்கு வீதியை சேர்ந்த முருகன்( எ) வேல்ராஜ் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், அவருடைய வீட்டில் கடந்த 18 ஆம் தேதி நகை, பணம் உள்ளிட்டவைகள் திருட்டு போனது.
முருகனின் மனைவி நாகலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம கும்பல் 39 பவுன் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளி, 3 லட்சம் பணம் மற்றும் 12 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி மற்றும் விலை உயர்ந்த எல்.இ.டி தொலைக்காட்சி உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர்.
அதனை தொடர்ந்து கீழ்வேளூர் காவல் நிலைய ஆய்வாளர் சோமசுந்தரம் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு போலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, நாகையில் உள்ள பிரபல வெளிநாட்டு கரன்சி மாற்றுபவரிடம் நாகை கீரைக்கொல்லை தெரு பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவன், திருடப்பட்ட வெளிநாட்டு கரன்சியை இந்திய பணமாக மாற்றுவது குறித்து விவரம் கேட்டு சென்றுள்ளான்.
இதனால் சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் கீழ்வேளூர் போலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் கீழ்வேளூர் போலிலிஸார் ஊட்டியில் உல்லாசமாக இருந்த முதல் குற்றவாளி கார்த்தியை அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், நாகை செக்கடி தெருவை சேர்ந்த கொறசேகர், நாகை சிவன் தெற்கு வீதியை சேர்ந்த தளபதி காளிதாஸ், வடக்கு நல்லியான் தோட்டம் ஓச்சு பிரகாஷ் உள்ளிட்டோர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து போலிஸாருக்கு பயந்து திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் சரணடைந்த கொறசேகர், தளபதி காளிதாஸ், ஒச்சு பிரகாஷ் உள்ளிட்ட திருட்டு கும்பலை தனிப்படை போலிஸார் கைது செய்தனர்.
மேலும், கொள்ளை கும்பலிடம் இருந்த 39 பவுன் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளி, 3 லட்சம் பணம் மற்றும் 12 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி மற்றும் விலை உயர்ந்த எல்.இ.டி தொலைக்காட்சி உள்ளிட்ட பொருட்களை போலிஸார் மீட்டனர். அதனை தொடர்ந்து மீட்கப்பட்ட நகைகளை நாகை எஸ்.பி ஜவஹர் உரிமையாளர்களிடம் ஒப்படைத்ததுடன், குற்றவாளிகளை விரைந்து பிடித்த ஆய்வாளர் சோமசுந்தரம் தலைமையிலான தனிப்படை போலிஸார் பாராட்டினார்.