மகாராஷ்டிரா மாநிலம், நாகா பகுதியில் உள்ள கடை ஒன்று கடந்த 15 ஆண்டுகளாகப் பூட்டியே இருக்கிறது. இந்நிலையில் சில நாட்களாக இந்தக் கடையிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பிறகு அங்கு வந்த போலிஸார் பூட்டியிருந்த கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் 8 மனிதக் காதுகள், ஒரு மூளை மற்றும் சிதைந்த முகப்பாகங்கள் இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் இந்த மனித உடல் பாகங்கள் ஒருவிதமான ரசாயனத்துடன் வைக்கப்பட்டிருந்துள்ளது. இதையடுத்து போலிஸார் கடையின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் கடையில் மனித உடல் பாகங்கள் எப்படி வந்தது என தனக்குத் தெரியாது என கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து, கடையில் இருந்து உடல் பாகங்களை மீட்டு விசாரித்து வருகின்றனர். மேலும் கடை உரிமையாளரின் மகன்கள் இரண்டு பேரும் மருத்துவர்கள் என்பதால், இவர்கள் தங்களின் ஆராய்ச்சிக்காக மனித உடல் பாகங்களை அங்கு எடுத்து வந்தார்களா என்ற கோணத்திலும் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.