திருச்சி காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான அருணாச்சலமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் நிலவியது போன்ற சூழல் தற்போது நிலவி வருகிறது. அவர்களை வெளியேற்றியது போல் தற்போது இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் மக்கள் விரோத பா.ஜ.க அரசை வெளியேற்ற வேண்டும். எனவே 75 வது ஆண்டு சுதந்திர தின கொண்டாடத்தின் ஒரு பகுதியாக ஏப்ரல் 13 முதல் 30 ஆம் தேதி வரை உப்பு சத்தியாகிரக நினைவு பாத யாத்திரை காங்கிரஸ் சார்பில் திருச்சி - வேதாரண்யம் வரை நடத்தப்பட உள்ளது.
இந்தியாவில் தற்போது நிலவி வரும் மத வெறுப்பு, சாதி வெறுப்பு, மக்கள் விரோத கொள்கை மோடி அரசால் நிகழ்த்தப்பட்டு வருகிறது. இதனை முறியடிக்க காங்கிரஸ் மட்டுமல்லாது அனைத்து ஜனநாய சக்திகளும் ஒன்றியணைய வேண்டும். தேசம் காப்போம், மதச்சார்பின்மையை மீட்டெடுப்போம் என்கிற அடிப்படையில் உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை நடத்தப்பட உள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தி.மு.க வினர் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களை பதவி விலக வேண்டும் என தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் கூறியது கூட்டணி கட்சியினருக்கு அவர் அளித்த கெளரவும், மரியாதை இதற்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம். தோழமை கட்சிகளை அரவணைப்பதில் அவருக்கு நிகர் அவர்தான்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஒன்றிய அரசு தான் மிக முக்கிய காரணம். தவறான பொருளாதார கொள்கையால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. ஒன்றிய அரசு 25 லட்சம் கோடி ரூபாய் மக்கள் வரிபணத்தை சுருட்டி இருக்கிறது. இது மக்கள் நலன் அரசல்ல, மக்கள் விரோத அரசு.
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத அளவில் தொழில் முன்னேற்றம் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் தொழில் முன்னேற்றத்திற்காக துபாய் சென்றுள்ள முதலமைச்சரை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சிப்பது தமிழ்நாட்டின் துரதிஷ்டம். முதலமைச்சரை அண்ணாமலை விமர்சிப்பது நல்ல பண்பல்ல. பிரதமர் செய்யும் காரியத்தை அதற்கு இணையாக முதலமைச்சர் முயற்சி எடுத்து வெற்றி பெற்றுள்ளார்.
அண்ணாமலை அரசியல் அடிசுவட்டை படிக்க வேண்டும். அண்ணாமலைக்கு பா.ஜ.கவின் வரலாறே தெரியாது. வாஜ்பாய் எதிர் கட்சி தலைவராக இருந்த போது அவரை ஐ.நா வில் பேச வைத்தவர் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி. இப்படி தான் அரசியல் கட்சியினர் இருக்க வேண்டும். முதலமைச்சர்கள் குடும்பத்தினரோடு வெளிநாடு செல்வது வழக்கமான ஒன்று. அவர்கள் அவர்களின் சொந்த பணத்தில் தான் வெளிநாடு சென்றுள்ளார்கள் அது அவர்களது உரிமை" எனத் தெரிவித்துள்ளார்.