திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் 75 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் புகைப்படக் கண்காட்சி மற்றும் பல்துறை பணி விளக்கக் கண்காட்சியினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் திறந்து வைத்து, ரூபாய் ஒரு கோடியே 70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, முதலீட்டாளர்களை கொண்டு வர, தமிழகத்தில் வேலைவாய்ப்பு உருவாக்குவதற்காக, சிறந்த மாநிலமாக மாற்றவே தமிழக முதல்வர் துபாய் சென்றுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குறித்து கேள்விக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர், அண்ணாமலை எங்கள் மீது குற்றச்சாட்டு கூறவில்லை என்றால், அவரால் கட்சி நடத்த முடியாது. அண்ணாமலை மட்டுமல்ல யார் விமர்சனம் கூறினாலும் மக்கள் தி.மு.க பக்கம்தான் உள்ளனர் எனத் தெரிவித்தார்.
மேலும், திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுவதற்கான விரிவான திட்ட இறுதி வடிவம் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வார காலத்திற்குள்ளாகவே டெண்டர் பணிகள் தொடங்கப்படும். புதிய காவிரி பாலம் கட்டுவதற்கு ஏற்கனவே 90 கோடி என்று நிர்னையக்கப்பட்ட நிலையில் தற்போது 130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சி விரிவுபடுத்த கூடிய காரணத்தினால் புதிய கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். திருச்சி மாவட்டத்தில் ஒரு முன்மாதிரி மாவட்டமாக கொண்டுவருவதற்கான பணிகள் அனைத்தும் நடைபெறும். தனியார் நிறுவனம் வாயிலாக திருச்சியில் உள்ள குப்பைகளை அள்ளி தூய்மைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். மெட்ரோ ரயில் திட்டம் திருச்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.