சென்னை ராயபுரம் வண்ணாரப்பேட்டை வடபழனி தண்டையார்பேட்டை பகுதிகளில், பாண்டியாஸ் என்ற பெயரில் அசைவ உணவகம் செயல்பட்டு வருகிறது. நேற்று நண்பகல் ராயபுரம் காவல் நிலையம் அருகில் எஸ்.என்.செட்டி தெருவில் உள்ள பாண்டியாஸ் உணவகத்தில் தனியார் ஒருவர் அறக்கட்டளை ஆரம்பிப்பதால், ஏழை குழந்தைகள் 30 பேருக்கு நண்பகல் உணவு வழங்கினார்.
அப்போது பரிமாறப்பட்ட உணவில் கெட்டுப் போன உணவு வகைகள் பரிமாறப்பட்ட தாக கூறப்படுகிறது. அதில் பரிமாறப்பட்ட மீன் கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அங்குள்ளோரிடம் விசாரித்தபோது மாற்றித் தருகிறேன், வேறு பொருள் தருகிறேன் என கூறினார்கள். மேலும் தக்க பதில் கூறாததால், சம்பந்தப்பட்டவர்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விரைவாக வந்து ஓட்டலில் தயாரிக்கப்படும் பொருட்களை பார்வையிட்டார்.
அங்குள்ள உணவக சமையல் அறை மிக மோசமான நிலையில் இருந்ததைப் பார்த்து, உரிமையாளரிடம் இவ்வளவு மோசமாக உணவுப்பொருள் எப்படி தயாரிக்கீறீர்களே? எனக் கேட்டார். மேலும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த இறைச்சி மீன்களை சோதனையிட்டார். அந்த குளிர்சாதன பெட்டி சரியாக வேலை செய்யாத காரணத்தினால் இறைச்சி, மீன் போன்ற அசைவ உணவுகளை பாலிதீன் கவரில் ஐஸ் கட்டியை போட்டு உள்ளே வைக்கப்பட்டிருந்த பார்த்து அதிகாரிகள் அதிர்ந்து போயினர்.
முறையாக எந்தவித பயிற்சியும் எடுக்காமல் பெரிய உணவகத்தை நடத்தி வருகிறீர்களே என அவர்களிடம் கேட்டார். அங்கு பணியாற்றும் ஒரு சிலர் இன்று சமைப்பதற்காக வைத்த உணவுதான் என கூறினர். அனால் அதிகாரிகள் தரப்பில் ஒரு வாரத்திற்கு மேல் உள்ள அசைவ உணவுகள் அங்கு வைக்கப்பட்டு இருப்பதாக கூறினர். மேலும் தரமற்ற மீன்களும் கெட்டுப்போன இறைச்சி இருப்பதை கண்டு அதையெல்லாம் வெளியே வைக்குமாறு கூறினர். மேலும் அங்கு சேகரிக்கப்படும் குப்பைகளை முறையாக பராமரிக்க வில்லை என்ற குற்றச்சாட்டையும் உரிமையாளரிடம் அதிகாரிகள் கூறினர்.
அதன் பின் அதேபகுதியில் ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனை சாலையில் செயல்பட்டு வரும் பாண்டியாஸ் ஓட்டலுக்கு அதிகாரிகள் சென்றனர். அங்கும் இதேபோல் கெட்டுப்போன மீன் வகைகளும் இறைச்சிகளை வைக்கப்பட்டிருந்தது. அதையும் அகற்றிட கூறிவிட்டு, வண்ணாரப்பேட்டையில் உள்ள டி.எச் சாலையில் உள்ள உணவகத்திற்கும் சென்றனர். அங்கும் குளிர்பதன கிடங்கு சரியாக வேலை செய்யாததால் இறைச்சி மீன் போன்றவை கெட்டுப் போனதாக தெரிகிறது. அதையும் பறிமுதல் செய்தனர்.
முக்கிய பொருட்களின் மாதிரிகளை எடுத்து பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்படுவதாக அதிகாரி சதீஷ்குமார் கூறினார். மேலும் பத்திரிகையாளர்களிடம் சதீஷ் குமார் கூறுகையில், “பொது மக்களின் புகார்களை அடுத்து இந்த மூன்று உணவுகளையும் சோதனை செய்தபோது, தரமற்ற உணவுகள் பரிமாறப்பட்டு உள்ளன. மேலும் கெட்டுப்போன இறைச்சிகள் மீன்கள் உணவகத்தில் இருந்தது. அதை எங்களது அதிகாரிகள் மூலம் சில பொருட்களை பரிசோதனைக்காக பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பப்படுகிறது. தற்காலிகமாக மூன்று ஹோட்டலில் உள்ள சமையலறையை தற்காலிகமாக மூட உத்தரவிட்டு உள்ளேன் மேல் அதிகாரிகளின் உத்தரவுக்கு பின் பரிசோதனைக்கூட முடிவுக்கு பின் மேல் நடவடிக்கை தொடரும். இது போல் தரமற்ற உணவுகள் வழங்கப்பட்டால், பொதுமக்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். நாங்கள் உடனே நடவடிக்கை எடுக்கிறோம்” என கூறினார்