மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் புலி, சிறுத்தை புலி, கரடி, காட்டெருமை, யானை போன்ற வனவிலங்குகள் அவ்வபோது கிராமப் பகுதிக்குள் உலா வருவது வழக்கமான ஒன்று. இந்நிலையில் உதகை அருகே உள்ள லவ்டேல் பகுதியில் சங்கர் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது.
இவர் தனது சிசிடிவி கேமரா காட்சிகளை இன்று காலை சோதனை மேற்கொண்டபோது இன்று அதிகாலை சுமார் 2. 20 மணி அளவில் சாலையிலிருந்து படிக்கட்டு வழியாக சிறுத்தைப்புலி ஒன்று எவ்வித அச்சமும் இன்றி நடந்துவந்து முன் வாசல் மற்றும் பின் வாசல் வழியாக தனக்கு மிகவும் பிடித்தமான உணவாக கருதப்படும் நாயை தேடுகிறது.
ஆனால் வீட்டின் உரிமையாளர் சங்கர் தனது நாயை வீட்டினுள் அடைத்து வைத்திருந்ததால் சிறுத்தை புலி நாயை வேட்டை ஆட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சிறுத்தை புலி ஏமாற்றத்துடன் வனப்பகுதிக்குள் சென்றது. மீண்டும் அதே சிறுத்தைபுலி இன்று அதிகாலை மீண்டும் சங்கர் வீட்டிற்கு வந்துள்ளது அப்போது வீட்டின் வாசலில் சங்கர் தனது நாயை வெளிய விட்டிருந்தார்.
இந்த நாய் வாசலில் தூங்கிக்கொண்டிருந்த போது அமைதியாக படிக்கட்டு ஏறி வந்த சிறுத்தை புலி தூங்கிக் கொண்டிருந்த நாயை வேட்டையாடி சென்ற காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சியின் அடிப்படையில் சிறுத்தை புலி நடமாட்டத்தை தற்போது வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.