“தமிழ்நாடு மற்றும் துபாய் இடையே பொருளாதார மற்றும் உணர்வுப்பூர்வமான பிணைப்புகள் ஏற்கனவே வலுவாக உள்ளன. இதை மேலும் வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பெருமளவில் உள்ளன என்பதை நான் மீண்டும் அழுத்திச் சொல்கிறேன்” என துபாயில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
துபாயில் நடைபெற்ற ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்கள் சந்திப்பில் ஆற்றிய உரை வருமாறு:
“வணக்கம் துபாய்!
Distinguished guests! Ladies and Gentlemen,
'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்ற தன்னம்பிக்கை மொழியை ஏற்று துபாய்க்கு குடிபெயர்ந்து இந்த மண்ணையும் வளமாக்கியுள்ள எனது தமிழ்ச் சொந்தங்களே !
Very Good Afternoon to all.
அனைவருக்கும் எனது அன்பார்ந்த வணக்கங்கள்.
I am very happy to address this great gathering of captains of business, trade and industry.
We are committed to develop and strengthen these relations.
I am happy and honoured to be here.
UAE and Tamil Nadu share a long history of rich cultural and trade relations. We are committed to develop and strengthen this relations.
ஐக்கிய அரபு நாடுகளுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான உறவு முன் எப்போதையும் விட இப்போது வலுவாக வளர்ந்து வருகின்றது.
தமிழ்நாடு மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் இடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதில் நம் அனைவருக்கும் ஆர்வம் இருக்கிறது. இந்த அரங்கில் பெருமளவில் நீங்கள் இங்கு கூடி இருப்பதற்கு இதுவே சாட்சியாக அமைந்துள்ளது.
ஓர் அழகான நகரத்தில் நீங்கள் வசிக்கிறீர்கள். துபாய் மிக அழகான நகரம் மட்டுமல்ல, வர்த்தகம் அதிகம் நடைபெறக்கூடிய நகரமாகவும் அமைந்திருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள் மட்டுமே வாழ்ந்து வந்த இந்த துபாய், இன்று உலகமே வியந்து பார்க்கும் நகரமாக வளர்ந்திருக்கிறது.
இன்று நவீன கட்டடக்கலை சாதனைகளுடன் உலகளாவிய வணிக மையமாக மிகப்பெரும் வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. இந்த வளர்ச்சி கற்பனைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது.
உங்கள் ஊரின் புகழை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், நான் அறிந்தும் தெரிந்தும் வைத்திருப்பதை உங்களுடன் மட்டுமல்ல, இந்த நிகழ்ச்சியை ஊடகங்களில் பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய தமிழ்நாட்டு மக்களுக்கும் சேர்த்துத்தான் என்னுடைய உணர்வுகளை நான் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
* 2217 அடி உயரம் கொண்ட உலகிலேயே உயரமான புர்ஜ் கலிபா,
* செயற்கையாக உருவாக்கப்பட்ட பாம் ஜீமேரா தீவு,
* 5.5 கி.மீ நீளம் கொண்ட உலகிலேயே மிக நீளமான தங்கச் சங்கிலி,
* மிகப்பெரிய மால்கள்,
* மிகப்பெரிய மீன்காட்சியகம்,
* மலர் பூங்கா என துபாயில் பார்க்கும் இடமெல்லாம் பிரமிப்பாகவும் அழகாகவும் இருக்கிறது.
* பறக்கும் கார்கள் முதல் தானியங்கி ரயில்கள் வரை உயர் தொழில்நுட்பப் போக்குவரத்தில் தலைசிறந்து துபாய் விளங்கிக் கொண்டிருக்கிறது.
* துபாயின் அழகைக் கண்டு ரசிக்க ஆண்டு தோறும் சராசரியாக 17 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் எல்லா நாடுகளிலிருந்தும் வருகிறார்கள்.
தமிழ்நாடு மற்றும் துபாய் இடையே வளர்ந்து வரும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தத் தான் நான் இப்போது இங்கே வந்திருக்கிறேன். தமிழ்நாட்டில் அதிக முதலீடுகளை செய்யவேண்டும் என உங்களையெல்லாம் கேட்டுக்கொள்ள வேண்டி உங்களைத் தேடி, நாடி நான் வந்திருக்கின்றேன்.
முதலமைச்சராக ஆட்சிப்பொறுப்பை ஏற்றபிறகு, நான் மேற்கொள்ளக்கூடிய முதலாவது அயல்நாட்டுப்பயணம் இந்தப் பயணம் தான், இந்த துபாய் பயணம் தான். இந்த முதல் பயணமும் ஐக்கிய அரபு அமீரகத்தின், துபாய் நகரமாக அமைந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்குதாரர்களில் ஒன்றாகவும், ஏற்றுமதிகளுக்கான மிகப்பெரிய நுழைவாயிலாகவும் துபாய் விளங்குகிறது.
துபாய் மக்கள், ஒழுக்கம், கடின உழைப்பு மற்றும் சட்டத்தை மதிக்கக்கூடிய நற்பெயரைப் பெற்றவர்கள். அதனால் தான் உங்களை நாடி நான் வந்திருக்கிறேன்.
ஐக்கிய அரபு நாடுகளில் 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் பேசும் மக்கள் பணியாற்றியும், வணிகம் செய்தும் வருகின்றனர். தமிழர்களின் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி, ஐக்கிய அரபு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரிய பங்களிப்பை அளித்து வருவது அனைவரும் அறிந்த உண்மை. எனவே, துபாயை வெளிநாடாக நினைக்க முடியாத அளவுக்கு தமிழர்கள் அதிகம் வாழக்கூடிய நாடாகவும் இது இருக்கிறது.
The COVID pandemic has affected economies all over the world.
Despite the pandemic, in the last ten months alone, Tamil Nadu has signed 124 MoUs attracting investment of 8 billion US Dollars, creating employment opportunities for nearly two lakh persons.
Tamil Nadu has registered a positive GDP growth rate of 5.8% in 2020-2021 in contrast to negative growth in most economies. This clearly shows the faith and confidence that Global investors have reposed in
Tamil Nadu.
Our strength is our human resources.
தமிழ்நாடு, வணிக மற்றும் வர்த்தக வாய்ப்புகள் நிறைந்த ஒரு மாநிலம். கிட்டத்தட்ட ஏழரைக் கோடி மக்களைக் கொண்டிருக்கக்கூடிய மாநிலம்.
2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றிடக்கூடிய வகையில் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த இலட்சிய இலக்கினை அடைவதற்காக, தமிழ்நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், பணியாளர்களின் திறனை மேம்படுத்துதல், வருங்கால தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பணியாளர்களை தயார்படுத்துதல் போன்ற பல முன்னேற்ற நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம்.
இந்தச் சூழ்நிலையில், நீங்கள் எங்கள் மாநிலத்தில் முதலீடுகளை செய்வதற்கான வாய்ப்புகளும் சாத்தியக்கூறுகளும் ஏராளமாக உள்ளன.
வாருங்கள்! இதற்கான பயணத்தில் இணைந்து நாம் எல்லோரும் பயனடைவோம் என்று இந்தத் தருணத்தில் உங்களுக்கு எல்லாம் நான் அன்போடு அழைப்பு விடுக்கின்றேன்.
தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ரியல் எஸ்டேட் வணிகத்திற்கு, மிகப்பெரிய வாய்ப்புகள் இருக்கின்றன. அது மட்டுமா? சுற்றுலாத் துறையிலும் விருந்தோம்பல் துறையிலும் எங்கள் மாநிலத்தில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
வேளாண்மைத் துறையைப் பொறுத்தவரையில் குளிர்பதனக் கிடங்குகள், சேமிப்புக்கிடங்குகள் ஆகியவற்றின் தேவை எங்களுக்கு உள்ளது. நிதி நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தகவல் தரவு மையங்கள், வான்வெளி மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளிலும் சிறந்த உட்கட்டமைப்புகளை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். மின்னணுவியல் துறையைப் பொறுத்த வரையில், மின் வாகனங்கள், மின்னேற்றி நிலையங்கள் போன்றவற்றில் முதலீடுகள் வரவேற்கப்படுகின்றன.
புத்தொழில்களிலும், புத்தாக்கத் தொழில்களிலும் முதலீடுகளை வரவேற்கிறோம். மேற்கூறிய துறைகளில் ஐக்கிய அரபு நாடுகளின் வணிகங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன.
தமிழ்நாட்டின் 2வது பெரிய துறைமுகம் மற்றும் அகில இந்திய அளவில் 3வது பெரிய கொள்ளளவு கொண்ட துறைமுகம் தூத்துக்குடி. அங்கு சர்வதேச அறைகலன் பூங்காவிற்கு Furniture Park சில வாரங்களுக்கு முன்னால் அதற்குரிய அடிக்கல் நான் நாட்டியிருக்கிறேன்.
இந்தியாவிலேயே, முதன்முதலாக, தமிழ்நாட்டில்தான் இத்தகைய சர்வதேச அறைகலன் பூங்கா அதாவது Furniture Park அமைக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 1,156 ஏக்கர் பரப்பளவில் தூத்துக்குடியில் அமைக்கப்பட்டிருக்கக்கூடிய இந்தப் பூங்காவில், முதலீடுகளுக்கான வாய்ப்புகள் மிக அதிக அளவில் இருக்கிறது. 70-80 விழுக்காடு மூலப்பொருட்கள் தேவையை அங்கேயே பூர்த்தி செய்திடும் வகையில் முழு சூழல் அமைப்பையும் அந்தப் பூங்காவில் உருவாக்க நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். அடிக்கல் நாட்டிய அன்றே, அந்த அறைகலன்பூங்காவில் 375 மில்லியன் டாலர் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருக்கிறது. நம்பிக்கையுடன் முதலீடுகளை மேற்கொள்வதற்கான தகுந்த இடம் எங்களது தூத்துக்குடி சர்வதேச அறைகலன் பூங்கா Furniture Park.
உற்பத்தி, சேவைகள் உட்பட பொருளாதாரத்தின் எந்தத் துறையிலும் முதலீடுகளை ஈர்ப்பதும், தமிழ்நாட்டை உலகளாவிய முதலீட்டு மையமாக மேம்படுத்துவதும் தான் எங்களுடைய குறிக்கோள்.
பொருளாதார வளர்ச்சியினை அதிகரித்து, அதன்மூலம் சமூகநலம் பேணுதல் என்கிற நோக்குடன் செயல்பட்டு வரக்கூடிய நாங்கள், எங்கள் முதலீட்டுக் கோரிக்கைகளை உங்கள் முன் வைத்துள்ளோம்.
* ஹுண்டாய்,
* ப்யூஜோ,
* BMW,
* டெய்ம்லர்,
* கேட்டர்பில்லர்,
* அசோக் லேலண்ட்,
* TVS,
* ரெனால்ட் நிஸ்ஸான்,
* ஃபாக்ஸ்கான்,
* டெல்டா,
* டெல்,
* சால்காம்ப்,
* டாட்டா எலெக்ட்ரானிக்ஸ்,
* சியட்,
* மிச்செலின்,
* MRF,
* சாம்சங்,
* கிரண்ட்ஃபோஸ் மற்றும் L&T ஆகிய எண்ணற்ற உலகளாவிய, புகழ்பெற்ற நிறுவனங்கள், தங்களது உற்பத்தித் திட்டங்களை தமிழ்நாட்டில் அமைத்திருக்கிறது.
மேலும், 75க்கும் மேற்பட்ட பார்ச்சூன் 500 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அமைந்திருக்கின்றன. பல்வேறு நாடுகளின் முதலீட்டாளர்கள் மற்றும் தூதரக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு முதலீடுகளை ஈர்த்திடுவதற்கு ஏதுவாக, வழிகாட்டி (GUIDANCE) நிறுவனத்தில், நாடுவாரியாக பிரத்யேக அமைவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டின் மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை இதன் மூலம் வெளிப்படுகிறது. தொழில் புரிவதற்கும், முதலீடுகள் மேற்கொள்வதற்குமான அழைப்புகளுக்கு எங்கள் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்.
உலகத் தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வணிக சூழல் அமைப்பினை தொடர்ந்து மேம்படுத்த முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம். எல்லா தரவரிசைகளிலும் தமிழ்நாடு முன்னேறி வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள பெருந்தொழிலதிபர்கள் மற்றும் தொழில் முனைவோரின் சான்றுகளிலும் அது வெளிப்படுகிறது.
Independent surveys have validated Tamil Nadu’s position as a leading State in good governance, economic growth, social and public health indicators. They also bear testimony to our vision of bringing inclusive growth.
தமிழ்நாடு மற்றும் துபாய் இடையேயான பொருளாதார மற்றும் உணர்வு பூர்வமான பிணைப்புகள் ஏற்கனவே வலுவாக இருக்கிறது. இதை மேலும் வலுப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பெருமளவில் இருக்கிறது என்பதை இங்கு நான் மீண்டும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
வாய்ப்புகள் ஏராளமாக உள்ள மாநிலம் தமிழ்நாடு என்பது உங்களுக்குத் தெரியும். எங்கள் வளர்ச்சிக்கு வித்திடுவது, உங்கள் வளர்ச்சிக்கும் துணைபுரியும் என்று நான் உறுதியளிக்கிறேன். எங்கள் வளர்ச்சியிலும் பங்கேற்று, நீங்களும் பயன் அடைந்திடுமாறு மீண்டும் நான் உங்களுக்கு அன்புடன் அழைப்பு விடுக்கிறேன். வாருங்கள், இணைந்து பயணிப்போம், இணைந்து வளர்ச்சி பெறுவோம்.
Once again I take this opportunity to invite you to Tamil Nadu, to engage in a partnership of investment, innovation, growth and prosperity.
I wish you all success in your endeavours.
நன்றி! வணக்கம்!”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.