துபாயில் நடைபெற்று வரும் உலக வர்த்தக கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கினை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதைத்தொடர்ந்து வர்த்தக கண்காட்சியை பார்வையிட்டார்.
இந்த அரங்கில் தொழில் துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கலாச்சாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி, தமிழ் வளர்ச்சி, தகவல், மின்னணுவியல், தொழிற் பூங்காக்கள், உணவுப்பதப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் தமிழ்நாட்டின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டும் வண்ணம் காட்சிப்படங்கள் தொடர்ந்து திரையிடப்படவுள்ளன.
தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு மோட்டார் வாகனங்கள் மற்றும் அதன் உதிரிபாகங்கள், மின்சார வாகனங்கள் மற்றும் மின்னணுவியல் சாதனங்கள், காற்றாலைகள் உட்பட பல்வேறு துறைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் உருவகங்களும் இந்த அரங்கில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
துபாய் கண்காட்சியை காண வந்திருந்த அயலகத் தமிழர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “இந்தக் கண்காட்சியின் இந்திய அரங்கில் தமிழ்நாடு வாரத்தைத் தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபிறகு முதல்முறையாக துபாய்க்கு வருவதில் அளவுகடந்த மகிழ்ச்சியடைகிறேன்.
உலகின் எந்தப் பகுதியாக இருந்தாலும், அங்கிருக்கும் தமிழர்களுக்கு நம்முடைய தமிழ்நாடு அரசு குரல் கொடுத்துக் கொண்டிருப்பது தொடரும்.
ஒன்றிணைந்து வேற்றுமையில் ஒற்றுமை காணுகின்ற இந்த சிறப்பான வேளையில் இந்தக் கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கே பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தும் கலைஞர்களுக்கு என் தமிழ் வணக்கம்.” எனப் பேசினார்.
மேலும் அவர் பேசுகையில், “முக்கியமான வளர்ந்துவரும் துறைகளில் எங்கள் மாநிலத்தின் ஆற்றலை பயன்படுத்துவதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக இந்த EXPO2020 கண்காட்சி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு அரங்கினை யார் பார்வையிட்டாலும் தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் சாதித்துள்ள ஒருங்கிணைந்த வளர்ச்சி பற்றிய புரிதலை அவர்களுக்கு இந்த அரங்கு வழங்கும்.” எனத் தெரிவித்தார்.
துபாய் உலக கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை தொடங்கி வைத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தார்.