தமிழ்நாடு

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக சிக்கிய கள்ளநோட்டு.. தட்டித்தூக்கிய போலிஸ் - மர்ம கும்பல் பிடிபட்டது எப்படி?

புதுச்சேரியில் மதுபான கடையில் கள்ள நோட்டு கொடுத்து மது வாங்க முயன்ற ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் உட்பட 4 பேரை போலிஸார் கைது செய்தனர்.

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக சிக்கிய கள்ளநோட்டு.. தட்டித்தூக்கிய போலிஸ் - மர்ம கும்பல் பிடிபட்டது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுச்சேரி முதலியார்பேட்டை, நைனார்மண்டபம், 2-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (30). இவர் திருவள்ளுவர் சாலையில் உள்ள ஒரு மதுக்கடையில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இவர் வேலை பார்க்கும் மதுக்கடைக்கு வந்த 2 பேர் ரூ.500 கொடுத்து மதுபானங்கள் வாங்கியுள்ளனர்.

அந்த நோட்டை வாங்கிய கேஷியர் சந்தேகத்தின் பேரில், பரிசோதித்தபோது அவை கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் பிடித்த மதுக்கடை ஊழியர்கள், உடனே உருளையன்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் வைத்திருந்தது கள்ள நோட்டுக்கள் தான் என்பது உறுதியானது. இதையடுத்து இருவரையும் காவல் நிலையம் கொண்டு சென்ற போலிஸார் தொடர் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் புதுச்சேரி பிள்ளைத்தோட்டம் பள்ளத் தெருவைச் சேர்ந்த ஜெயபால் (21), சாரம் தென்றல் நகர் 2-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த மனோஜ் (29) என்பதும், இவர்களுக்கு அரும்பார்த்தபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சரண்(27) என்பவர் கள்ள நோட்டுக்கள் கொடுத்ததும் தெரியவந்தது.

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக சிக்கிய கள்ளநோட்டு.. தட்டித்தூக்கிய போலிஸ் - மர்ம கும்பல் பிடிபட்டது எப்படி?

இதையடுத்து சரணை பிடித்து போலிஸார் விசாரித்ததில் அவருக்கு, புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் வீதியைச் சேர்ந்த ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் கமல் (31) என்பவர் கள்ள நோட்டுக்கள் கொடுத்தது தெரிந்தது. தொடர்ந்து கமலை பிடித்த போலிஸார் விசாரித்தனர்.

அப்போது அவருக்கு சென்னையைச் சேர்ந்த ஒரு கும்பல் கள்ள நோட்டுக்கள் வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து ஜெயபால் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்த போலிஸார் அவர்களிடம் இருந்து ரூ.2.42 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுக்கள், 4 செல்போன்கள், ஒரு ஆட்டோ ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் இவர்களுக்கு கள்ள நோட்டுக்களை வழங்கிய சென்னையைச் சேர்ந்த கும்பலை பிடிக்க தனிப்படை போலிஸார் சென்னை விரைந்துள்ளனர். அவர்களை பிடித்தால் கள்ள நோட்டுக்கள் எங்கிருந்து வந்தது? எவ்வளவு புழக்கத்தில் விடப்பட்டுள்ளது என்ற விவரங்கள் தெரியவரும் என போலிஸார் தரப்பில் தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories