தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற ஒருவரை அப்பகுதி மக்கள் பிடித்து போலிஸாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து பழனிசெட்டிபட்டி காவல்நிலைய ஆய்வாளர் மதனகலா அவரிடம் விசாரணை நடத்தினார்.
இதில், அவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. பின்னர் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணனிடம் நடந்தது குறித்து விளக்கும்படி கூறியுள்ளார்.
இதையடுத்து அவர், நடந்த சம்பவத்தை ஒரு மேடை பேச்சாளர் போல் பேசியுள்ளார். இதை அங்கிருந்த போலிஸார் வீடியோ எடுத்து அவரை கிண்டல் அடித்துள்ளனர். மேலும் இந்த வீடியோவை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சியடைந்து சம்மந்தப்பட்ட போலிஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர் விளக்கம் கொடுக்கும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் ரமேஷ் நோட்டீஸ் அனுப்பினார்.
மேலும் இது குறித்து விசாரணை நடத்தியபோது, ராதாகிருஷ்ணன் கஞ்சா போதைக்கு அடிமையாகி மனநல காப்பகம் ஒன்றில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் என்பதும், சாலையில் சாவியோடு நிற்கும் வாகனங்களை எடுத்து ஓட்டுவதுடன், பெட்ரோல் தீர்ந்துபோன பிறகு அதை அப்படியே நிறுத்திவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து மனநலம் பாதிக்கப்பட்டவரிடம் அத்துமீறி நடந்துகொண்ட காவல் ஆய்வாளர் மதன கலாவைக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தென் மண்டல காவல்துறை ஐஜி அன்பு அதிரடி உத்தரவிட்டுள்ளார்.