உலக நாடுகளுக்கு இடையே அதிகாரப்போட்டியில் போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், மனிதன் கடைபிடிக்கவேண்டிய மனிதநேயமும் சமத்துவமும் குறித்து உலக மக்களுக்கு பாடம் எடுத்த சிறுவனின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
சமீபத்தில் இணைய ஊடகத்தில் வைரலான வீடியோ ஒன்றை பார்த்திருப்பீர்கள். அந்த வீடியோவில் பள்ளிச் சிறுவன் ஒருவன் மனிதநேயம் குறித்து தெளிவுடன் விளக்கி பேசியிருப்பான். மனிதநேயம் இந்த பொது சமுகத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை போகிறபோக்கில் விளக்கியுள்ளான் அந்தச் சிறுவன்.
இணையத்தை ஆக்கிரமித்த சிறுவனின் பேச்சு உடனடியாக டிரெண்டானது. அதன் பின்னர், இந்த சிறுவன் யார் என்றும் இந்தச் சிறு வயதில் இவருக்கு இந்தளவு பக்குவத்துடன் பேசக் கற்றுக் கொடுத்த பெற்றோர் குறித்தும் அறிந்துகொள்ள ஒட்டுமொத்த நெட்டிசன்களுமே ஆர்வமாக இருந்தனர்.
பின்னர் இணைய ஊடகங்கள் அந்தச் சிறுவனை சூழந்து பேசத் தொடங்கியதும் அந்தச் சிறுவனின் குடும்பம், சென்னை கண்ணகி நகரில் வசிப்பதாகவும், இச்சிறுவனின் பெயர் அப்துல்கலாம் என்றும் சென்னையில் உள்ள கிருத்துவப் பள்ளியில்தான் படித்து வருகிறார் என்றும் தெரியவந்தது.
தி.மு.க எம்.பி கனிமொழி உள்ளிட்ட பலரும் சிறுவனை பாராட்டி வந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் தலைமைச் செயலாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறுவன் அப்துல் கலாமை அவரது பெற்றோருடன் அழைத்துப் பேசி வாழ்த்தினார். அவருக்கு முதலமைச்சர் அன்பு பரிசு ஒன்றையும் வழங்கியுள்ளார்.
மேலும் தனது பேச்சையும் செயலும் எல்லாக் காலமும் கடைபிடிக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாது சிறுவனின் பெற்றோருக்கும் தனது பாராட்டை முதலமைச்சர் தெரிவித்தார். இணையங்களில் வைரலான சிறுவனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாரட்டிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சிறுவனின் குடும்பத்திற்கு அரசு சார்பில் வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, சிறுவன் பேட்டியளித்ததால், தற்போது அவரது குடும்பத்தினர் வசிக்கும் வீட்டை காலி செய்யக் கூறியதாக அவரது தாயார் பேட்டியளித்திருந்தார். இந்த விவரம் அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்திற்கு அரசு சார்பில், வீடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன்படி, இன்று தலைமைச் செயலகத்தில் சிறுவன் அப்துல்கலாம் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியிருப்பு ஆணையை வழங்கினார். அப்துல் கலாம் சிறுவனுக்கு, தி இந்து தமிழ் திசை பதிப்பகத்தின் முத்தமிழ் அறிஞர் கலைஞர் குறித்த தெற்கிலிருந்து ஒரு சூரியன் என்ற புத்தகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் பரிசளித்தார்.